×

குடும்ப வன்முறை தடை சட்டத்தின்கீழ் பதிவாகும் புகார்களை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியுமா?உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்து தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவரோ, அவர் சார்பில் மற்றொருவரோ அல்லது குடும்ப வன்முறை தடைச்சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரியோ, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் அளிக்க குடும்ப வன்முறை தடைச் சட்டம் வகை செய்கிறது.  இந்தச் சட்டப் பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்படும் புகார் மனுக்களை ரத்து செய்யக்கோரி குற்ற விசாரணை முறைச் சட்டம் 482வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்ய முடியாது என்று தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, புகார் மனுக்களை ரத்து செய்யக் கோரும் வழக்குகளை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று தீர்ப்பளித்தது. ஆனால், இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது என்பதால், குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் புகார் மனுக்களை ரத்து செய்யக்கோரி குற்ற விசாரணை முறைச் சட்டம் 482வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரலாமா என்ற சட்ட கேள்விக்கு விடை காணும் வகையில் இந்த வழக்குகளை மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிக்க தனி நீதிபதி, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்திருந்தார். இதன் அடிப்படையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்கா ராமன் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் அடங்கிய முழு அமர்வு அமைக்கப்பட்டது.இந்த முழு அமர்வு, நேற்று இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, ஒரு தரப்பு வழக்கறிஞர்கள்,  குற்ற விசாரணை முறைச் சட்டம் 482வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் விசாரணைக்கு உகந்தவைதான் என்று வாதிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்….

The post குடும்ப வன்முறை தடை சட்டத்தின்கீழ் பதிவாகும் புகார்களை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியுமா?உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்து தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Court ,CHENNAI ,High Court ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...