×

திருச்சியில் இடி,மின்னலுடன் வெளுத்து வாங்கியது; தெருக்களில் ஆறாக ஓடிய மழை நீர்: மின்னல் தாக்கி வாலிபர் பலி

திருச்சி: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. திருச்சி மாநகரில் நேற்றிரவு 7 மணிக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய துவங்கியது. இந்த மழை இரவு 9.30 மணி வரை நீடித்தது. இதனால் மாநகரின் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இரண்டரை மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் உள்ள சிறு சிறு பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகினர்.திருச்சி ஜங்ஷன், பாலக்கரை, பஜார் பகுதிகளில் சேறும் சகதியுமாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாநகரில் உள்ள தெருக்களில் உள்ள சாக்கடைகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் பெருக்கெடுத்து ஓடி சாலையோரங்களில் தேங்கி நின்றது. தீபாவளி விற்பனை களைகட்டியுள்ள நிலையில் திருச்சி மாநகரில் நேற்றிரவு பலத்த மழை பெய்ததால் சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இதேபோல் திருவெறும்பூர், துவாக்குடி, மணப்பாறை, துவரங்குறிச்சி, சமயபுரம், மண்ணச்சநல்லூர் பகுதிகளிலும் நேற்றிரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையால் குளங்களில் தண்ணீர் நிரம்பி வருகிறது. மேலும் வாய்க்கால்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இன்று காலை வானில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டதுடன் குளிர்ந்த காற்று வீசியது.புதுகை, அறந்தாங்கி, ஆலங்குடி, விராலிமலை, பொன்னமராவதி, கீரனூர் பகுதிகளில் நேற்றிரவு 8 மணி முதல் 8.30 மணி வரை இடி, மின்னலுடன் லேசான மழை பெய்தது. கரூர் மாநகரில் நேற்றிரவு 7 மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு சாரல் மழை பெய்தது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், பாடாலூர், குன்னம், வேப்பந்தட்டை பகுதிகளில் இரவு சாரல் மழை பெய்தது. நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இன்று அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன்பிறகு சாரல் மழை பெய்தது.மின்னல் தாக்கி வாலிபர் பலி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஒட்டம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி மகன் நாகராஜ்(23). கேட்டரிங் படித்து விட்டு செங்கல்சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் தனது உறவினரான சீனிவாசனின் மகன்கள் நித்திஷ், பிரதீப் மற்றும் நண்பர்களுடன் நேற்று மதியம் சிக்கத்தம்பூர் ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிவதை பார்க்க சென்றார். அப்போது திடீரென இடி மின்னலுடன் மழை பெய்ய துவங்கியது. மின்னல் தாக்கியதில் நாகராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் அதிர்ச்சியில் மயக்கமடைந்தனர். உப்பிலியபுரம் போலீசார் நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.திருச்சி மாவட்டம் துறையூர் பச்சமைலை பகுதியில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இதனால் துறையூர் பெருமாள்பாளையம் கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்து தெருக்களில் ஆறு போல் ஓடுகிறது. வாய்க்கால்கள் முழுமையாக சீரமைக்கப்படாததால் கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்ததாக மக்கள் தெரிவித்தனர். அதேபோல் துறையூர் பாலக்கரை பகுதியில் தெப்பக்குளம் நிரம்பி வழிந்து 10க்கும் மேற்பட்ட  வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.  துறையூர் பெரிய ஏரி நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் ஏரி கரை உடையாமல் இருப்பதற்காக மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கும் பணியில் நகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்….

The post திருச்சியில் இடி,மின்னலுடன் வெளுத்து வாங்கியது; தெருக்களில் ஆறாக ஓடிய மழை நீர்: மின்னல் தாக்கி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Tamil Nadu ,Thunderbolt ,Thiruchi ,Dinakaran ,
× RELATED அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல்...