×

ஓசூர் அரசு பள்ளியில் 120 மாணவ, மாணவிகளுக்கு திடீர் மூச்சுத்திணறல், வாந்தி- மயக்கம்: விஷ வாயு கசிவா என விசாரணை; அரசு மருத்துவமனையில் பெற்றோர் குவிந்ததால் பரபரப்பு

ஓசூர்: ஓசூர் அரசு பள்ளியில் மூச்சுத்திணறல், வாந்தி மயக்கம் காரணமாக 120 மாணவ, மாணவிகள் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விஷவாயு கசிவா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காமராஜர் காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 1,300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று பள்ளியின் முதல் தளத்தில் உள்ள வகுப்பறையில் திடீரென துர்நாற்றம் வீசியது. இதனால், மாணவ, மாணவிகள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர்களுக்கு மூச்சுத்திணறலுடன், வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த  ஆசிரியர்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் கார்கள் மூலம் மாணவ, மாணவிகளை, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே, சம்பவம் குறித்து தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஓசூர் ஏஎஸ்பி அரவிந்த் தலைமையிலான போலீசார், ஓசூர் அரசு மருத்துவமனை முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்ரமணியம் கூறுகையில், ‘தற்போது மாணவ, மாணவிகள் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஓசூர் மாநகராட்சிக்கு சொந்தமான செப்டிக் டேங்க் எதுவும் பள்ளிக்கு அருகில் இல்லை. எங்கிருந்து துர்நாற்றம் வந்தது என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். இதுகுறித்து பெற்றோர் தரப்பில் கூறுகையில், ‘பள்ளிக்கு அருகில் காய்கறிகள் விற்பனை செய்பவர்கள், அதன் கழிவுகளை சாக்கடையில் கொட்டி விட்டு செல்கின்றனர். அதில் விஷவாயு உற்பத்தியாகி கசிவு ஏற்பட்டு, மாணவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கலாம், இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி, பள்ளி அருகில் உள்ள சாக்கடை கால்வாயை உடனடியாக தூர்வார வேண்டும்,’ என்றனர். பெற்றோர் குற்றச்சாட்டு பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது….

The post ஓசூர் அரசு பள்ளியில் 120 மாணவ, மாணவிகளுக்கு திடீர் மூச்சுத்திணறல், வாந்தி- மயக்கம்: விஷ வாயு கசிவா என விசாரணை; அரசு மருத்துவமனையில் பெற்றோர் குவிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Osur Government School ,Osur ,Osur Government Hospital ,Dinakaran ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்