×

இமாச்சலில் நவ.12ம் தேதி தேர்தல்: டிசம்பர் 8ல் வாக்கு எண்ணிக்கை குஜராத்துக்கு அறிவிப்பு இல்லை

புதுடெல்லி: இமாச்சல பிரதேசத்தில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 12ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்படும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் மாநில தேர்தல் அட்டவணை வெளியிடப்படவில்லை. இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஜனவரி 8ம் தேதியும், குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்தாண்டு பிப்ரவரி 18ம் தேதியும் முடிகிறது. எனவே, இந்த இரு மாநிலத்திலும் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், நேற்று பிற்பகலில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இமாச்சல பிரதேச மாநில தேர்தல் அட்டவணையை அறிவித்தார். ‘68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சல் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. வரும் 17ம் தேதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரும் 25ம் தேதி.  வேட்பு மனு மீதான பரிசீலனை வரும் 27ம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெற வரும் 29ம் தேதி கடைசி நாள். நவம்பர் 12ல் நடக்கும் தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும்,’ என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். பாஜவின் கோட்டையான குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை வெளியிடப்படவில்லை. இமாச்சலில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜ 44 இடங்களை வென்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் 21 இடங்களிலும் சுயேச்சைகள் 2 இடத்திலும், மார்க்சிஸ்ட் ஒரு இடத்திலும் வென்றன. இம்முறை 55 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இமாச்சலில் கடந்த 30 ஆண்டாக எந்த கட்சியும் தொடர்ந்து 2 முறை ஆட்சி அமைத்ததில்லை. இதற்கிடையே, பாஜவை எதிர்த்து இம்முறை ஆம் ஆத்மியும் களமிறங்குகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ள நிலையில், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளன. பாஜ இதுவரை எந்த தேர்தல் வாக்குறுதியும், இலவச அறிவிப்புகளும் அறிவிக்காமலேயே பிரசாரம் செய்து வருகிறது.* மெகா வாக்குறுதி அளிக்கமோடிக்கு நேரம் தேவைகுஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், ‘‘இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. குஜராத்தில் மெகா வாக்குறுதிகள் அளிக்க பிரதமர் மோடிக்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படுகிறது. அதனால், தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை’’ என்றார்.* ஆம் ஆத்மி தலைவர் துர்கேஷ் பதக் கூறுகையில், ‘‘இமாச்சலில் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒவ்வொரு கிராமத்திலும் கடுமையாக உழைத்து கட்சியை வலுப்படுத்தி உள்ளோம். எனவே, மக்கள் ஆதரவு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறோம்,’’ என்றார்.* குஜராத் தேர்தல் தேதி ஏன் அறிவிக்கவில்லை?குஜராத் தேர்தல் அறிவிக்காதது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், ‘‘கடந்த 2017ல் இருந்த அதே நடைமுறையே இப்போதும் பின்பற்றப்பட்டுள்ளது. கடந்த முறையும் இரு மாநிலத்திலும் வெவ்வேறு நாட்களில்தான் தேர்தல் நடந்துள்ளது. இரு மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலத்திற்கு இடையே 40 நாட்கள் வித்தியாசம் உள்ளது. மேலும், இமாச்சல பிரதேசம் மலைப்பகுதி என்பதாலும், மாறுபட்ட காலநிலை கொண்டிருப்பதாலும் முன்கூட்டி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் நவம்பர் இறுதி அல்லது டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளன. இரு மாநிலத்திலும் ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை நடத்தவும் சாத்தியங்கள் உள்ளன,’’ என்றார்….

The post இமாச்சலில் நவ.12ம் தேதி தேர்தல்: டிசம்பர் 8ல் வாக்கு எண்ணிக்கை குஜராத்துக்கு அறிவிப்பு இல்லை appeared first on Dinakaran.

Tags : Himachal Election ,Gujarat ,New Delhi ,Himachal Pradesh ,Himachal Elections ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?