×

‘யார் ரூட் தல’ என்பதில் பிரச்னை கல்லூரி மாணவர்கள் கற்களை வீசி மோதல்: ராயபுரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

தண்டையார்பேட்டை: சென்னை வேளச்சேரியில் இருந்து நேற்று மதியம் அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் மாநிலக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி முடித்து வந்தனர். இந்நிலையில், ராயபுரம் ரயில் நிலையத்தில்  ரயில் நின்றதும், ஒரு தரப்பு மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் ரயிலில் இருந்து கீழே இறங்கி கற்களை எடுத்து, ரயிலின் உள்ளே இருந்த 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால், உள்ளே இருந்த மாணவர்கள் உடனே கீழே இறங்கி பதிலுக்கு கற்களை வீசி தாக்கியுள்ளனர். தொடர்ந்து, அந்த மாணவர்கள் அதே ரயிலில் ஏறிச் சென்றனர். இச்சம்பவத்தால், அதிர்ச்சி அடைந்த ரயில் பயணிகள் வண்ணாரப்பேட்டை ரயில் நிலையம் சென்றவுடன் ரயிலின் சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தினர். அப்போது, ‘எப்படி நாங்கள் பயணம் செய்வது, இதுபோல், சம்பவம் நடைபெறுவதால் எங்களுக்கு ஆபத்து அதிகம்’ என பயணிகள் கூறினர். அதை தொடர்ந்து, ரயில் ஓட்டுநர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் பேச்சு நடத்திய  பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ராயபுரம் ரயில்வே போலீசார் விசாரணை செய்தனர். இதில், மோதலில் ஈடுபட்டது மாநிலக் கல்லூரி மாணவர்கள் என்பதும், யார் ரூட்  தல என்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே இரு தரப்பும் மோதிக் கொண்டதும் தெரியவந்துள்ளது. புறநகர் ரயிலில் நடைபாதையில் ஏற்கனவே, கத்தியை உரசி தீப்பொறி பறக்கவிட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்ற மாணவர்களை ரயில்வே போலீசார் கைது செய்தனர். ரயில்வே காவல்துறையினர் சார்பில் இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க கூடும்  எனவும், இதேபோன்ற செயலில் ஈடுபடுபவர்களின் ஜாமீன்களும் தள்ளுபடி செய்யப்படும் என எச்சரித்த நிலையிலும், மீண்டும் மாணவர்கள் மோதலில் ஈடுபடுவது ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது….

The post ‘யார் ரூட் தல’ என்பதில் பிரச்னை கல்லூரி மாணவர்கள் கற்களை வீசி மோதல்: ராயபுரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Rayapuram Railway Station ,Thandaiyarpet ,Arakkonam ,Chennai Velachery ,
× RELATED சவுகார்பேட்டையில் ஐபிஎல்...