×

பெரிய ஹீரோக்கள் கதைகூட கேட்பதில்லை!

போலீஸ் படம் என்றாலே மிடுக்கு, துடிப்பு, பஞ்ச் டயலாக் என்கிற வழக்கம் இருக்கும்போது, அதையே மிக எளிய, மிக யதார்த்தமான போலீஸ் கதையாக மாற்றி ‘சத்ரு’ படத்தைக் கொடுத்தவர், அறிமுக இயக்குநர் நளன் நஞ்சுண்டான். நகரையே நடுங்க வைக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒரு கொலைகாரக் கும்பலை, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு சப்-இன்ஸ்பெக்டர் கண்டுபிடிக்கும் பரபரப்பான படம் இது. பல ஆண்டுகள் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு இயக்குநர் அந்தஸ்தைப் பிடித்திருக்கிறார் நளன் நஞ்சுண்டான். அவரிடம் பேசியதில் இருந்து... “சொந்த ஊர் பர்கூர். அப்பா நஞ்சுண்டான் விவசாயி, வியாபாரி. அம்மா பிரேமலீலா, ஹவுஸ் ஒய்ஃப். பள்ளி கல்லூரி நாட்களில் நிறைய சினிமா படங்கள் பார்ப்பேன். நிறைய கலைநிகழ்ச்சிகள் நடத்திய அனுபவம் உண்டு. எம்பிஏ படிக்க சென்னைக்கு வந்தபோது, என்னுடன் லயோலா கல்லூரியில் விஸ்காம் படிக்கும் மாணவர்கள் தங்கியிருந்தனர். அவர்களின் புராஜெக்ட்டுக்காக குறும்படங்களுக்கு கன்டென்ட் கொடுத்தேன். அதுவே சினிமா இயக்கத்துக்கான விதையைப் போட்டது.

படிப்பு முடிந்ததும் சினிமா வாய்ப்பு தேடினேன். அப்போது பிரகாஷ்ராஜின் டூயட் மூவீஸ், ‘இனிது இனிது’ என்ற படத்தைத் தயாரித்தது. அந்தப் படத்தில் துணை இயக்குநரானேன். கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் டூயட் மூவீஸ்தான் என் உலகம். அப்போ அறிமுகமான ராதாமோகன் சார் என்னை அவரது இணை இயக்குநராக சேர்த்துக்கொண்டார். அவருடன் சேர்ந்து ‘பயணம்’, ‘கவுரவம்’, ‘உப்புக்கருவாடு’ ஆகிய படங்களில் பணியாற்றினேன்.

பிறகு நான் தனியாக வந்து படம் இயக்குவதற்காக, ‘சத்ரு’ படத்தின் ஸ்கிரிப்ட்டை தயார் செய்தேன். இது பெரிய ஹீரோக்களுக்கான கதை என்பதால், பல முன்னணி ஹீரோக்களைச் சந்தித்துப் பேசினேன். ஆனால், நான் ஒரு புதுமுக இயக்குநர் என்பதால், என்னிடம் அவர்கள் கதை கேட்கக்கூட தயாராக இல்லை. பிறகு ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமிதான் ‘சத்ரு’ படத்தின் தயாரிப்பாளரை எனக்கு அறிமுகப்படுத்தினார். ஹீரோக்களை விட கதைதான் பெரிய ஹீரோ என்பதை உணர்ந்து, இளம் முன்னணி ஹீரோ கதிரை நடிக்க வைத்து இந்தக் கதையை இயக்கினேன். இப்போது சிலர், ‘இதில் பெரிய ஹீரோ நடித்திருந்தால், படத்தின் லெவலே வேறுமாதிரி இருந்திருக்கும்’ என்று சொல்கிறார்கள்.

ஆனால், என்னைப் பொறுத்தவரையில் ‘சத்ரு’ படம் மிகவும் திருப்தியான படம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நான் எதிர்பார்த்ததை விட கதிர் மிகச் சிறப்பாக நடித்தார். எனக்குக் கிடைத்த சிறிய பட்ஜெட்டுக்குள், 38 நாட்களில் ‘சத்ரு’ படத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்தேன். அடுத்து ‘சத்ரு’ படத்தை விட இன்னும் அதிகமான சூப்பர் பவருடன் கூடிய ஸ்கிரிப்ட்டை தயார் செய்து வைத்துள்ளேன். என் முதல் படமான ‘சத்ரு’வில் நான் யார் என்று நிரூபித்து இருப்பதால், குறைந்தபட்சம் இனி முன்னணி ஹீரோக்கள் என்னிடம் கதை கேட்கவாவது முன்வருவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

Tags : heroes ,
× RELATED நிறம் மாறும் உலகில் படத்தில் 4 ஹீரோக்கள்