×

சீன் போடமாட்டேன்! சமந்தா சீற்றம்

தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா. கணவர் நாகசைதன்யா, மாமனார் நாகார்ஜூனா, மாமியார் அமலா ஆகியோருடன் நல்ல புரிதலோடு தொடர்கிறது அவரது வாழ்க்கை.குடும்பப் பாசம் என்பது ஒருபுறம் இருந்தாலும், அவர்களை தன் நண்பர்கள் போல் பாவித்து, அனைத்து விஷயங்களையும் பகிர்ந்துக் கொள்கிறார். சமூக வலைத்தளங்களில் அதிகமான கவர்ச்சிப் படங்களை வெளியிடும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். இது பற்றிய கடுமையான விமர்சனங்களை அவர் எந்த நிலையிலும் பொருட்படுத்துவதே இல்லை. ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் சம்பந்தமான புரமோஷனுக்காக சென்னைக்கு வந்திருந்த அவரிடம் சில மணி நேரம் பேசினோம்.

“தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில், வேம்பு கேரக்டருக்கு செலக்ட்டானது எப்படி?”

“தமிழ்நாட்டில் இருக்கும் டாப் ஹீரோயின்கள் சிலபேர் கிட்ட தியாகராஜன் குமாரராஜா கதை சொல்லியிருக்காரு. ஆனா, இது வழக்கமான ஹீரோயின் கேரக்டர் கிடையாது. அதனால் அவங்க ரொம்ப பயந்து போய், இந்த மாதிரி ரோலில் நடிக்க முடியாதுன்னு மறுத்துட்டாங்க. ஆனா, இதுவரை யார், யார் அந்த ஹீரோயின்னு டைரக்டர் என்கிட்ட சொன்னதில்லை. நானும் வற்புறுத்தி கேட்டதில்லை. வழக்கமா தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை எப்படி காட்டுவாங்கன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா, ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நீங்க எதிர்பார்க்கிற எதுவும் இருக்காது. அதாவது, நீங்க எதிர்பார்க்கிறதை விட, எதிர்பார்க்காத விஷயங்கள் நிறைய இருக்கும். அட, இப்படிக்கூட ஒரு ஸ்கிரிப்ட் எழுத முடியுமான்னு ஆச்சரியப்படுவீங்க. ‘ஆரண்ய காண்டம்’ ரிலீசாகி எட்டு வருஷத்துக்கு பிறகு ஒரு டைரக்டர் வெயிட்டான கதையோட, வித்தியாசமான கேரக்டர்களோட ஒரு படம் பண்ணியிருக்காருன்னா, அதுதான் தியாகராஜன் குமாரராஜா ஸ்டைல். கண்டிப்பா அவருக்கு அவார்டு கிடைக்கும். நான், விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன்னு எல்லாரும் நடிச்சிருந்தாலும், டைரக்டருக்குத்தான் அவார்டு போய் சேரணும்.”

“வேம்பு எந்த மாதிரி பெண்? இதில் நடிக்க முதலில் பயந்தீங்களாமே?”

“சினிமாவுக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கும். அந்த மாதிரி பெண்ணா நான் வர மாட்டேன். யதார்த்தமும், சினிமாத்தனமும் கலந்த பெண்ணா வந்தாலும், வேம்பு மற்ற பெண்களோடு ஒப்பிடும்போது ரொம்ப, ரொம்ப வித்தியாசமானவள். வழக்கமான சென்னை ஏரியா பெண்தான். பேச்சும், ஸ்டைலும், பாடிலாங்குவேஜும் ஒரு மிடில் கிளாஸ் பெண்ணைதான் வெளிப்படுத்தும். இதுக்காக நான் நிறைய ஹோம் ஒர்க் பண்ணேன்னு சொல்ல மாட்டேன். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய கஷ்டப்பட்டேன். என்னை நம்பி கொடுக்கப்பட்ட இந்த வேம்பு கேரக்டருக்கு நான் எவ்வளவு தூரம் நியாயம் செய்யப்போறேன்னு, அடிக்கடி என்னை பார்த்து கேள்வி கேட்பேன். டைரக்டர் என்னதான் சொல்லிக் கொடுத்தாலும், கேமரா முன்னாடி போய் நின்னு நடிக்கிறது நான்தான். ஸோ, வேம்பு எனக்குள்ளே ஆழமா இறங்கிட்டாள். இதுவரை நான் நடிச்ச படங்களில் இந்த மாதிரி கேரக்டர் நான் பண்ணதில்லை. இனிமேலும் இந்த மாதிரி ரோல் கிடைக்குமான்னு தெரியலை. உண்மையை சொன்னா, வேம்புவா நடிக்க ரொம்பவும் பயந்தேன். ஆனா, அந்த பயம்தான் சிறப்பா நடிக்க உத்வேகம் கொடுத்தது.”

“இந்தப் படத்துக்காக அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்து ஒர்க் பண்ணீங்களாமே?”

“இப்ப அது எதுக்கு? அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடிச்சாலும், எத்தனையோ படங்கள் பிரயோஜனம் இல்லாம வந்திருக்கு. ‘சூப்பர் டீலக்ஸ்’ பட ஷூட்டிங்கில் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வித்தியாசமான அனுபவத்தை சந்திச்சேன். இதை நான் எப்பவும் மறக்க முடியாது. நல்லவேளை, வேம்பு கேரக்டரை நான் தவறவிடாம நடிச்சேன். இதை நான் செலக்ட் பண்ணி நடிச்சதே ஒரு பெருமைதான். நான் நல்ல முடிவுதான் எடுத்திருக்கேன். அதுக்காக எனக்கு நானே சபாஷ் சொல்லிக்கிறேன். முதலில் இந்த கதையை என் கணவர் நாகசைதன்யா கிட்ட சொன்னேன். படத்தின் அறிமுக காட்சியில் நான் எப்படி நடிக்கப்போறேன்னு சொன்னேன். எக்சர்சைஸ் பண்ணிக்கிட்டிருந்த அவர், அதை ஒரு நிமிஷம் நிறுத்திட்டு, ‘இந்த கேரக்டரை நீ கண்டிப்பா பண்ணத்தான் போறியா?’ன்னு நம்பவே முடியாம கேட்டார். ஆமாம்னு துணிச்சலா ெசான்னேன். வேம்பு, புதுசா கல்யாணமான ஒரு பெண். படத்தில் எனக்கும், பஹத் பாசிலுக்கும் என்ன உறவு? விஜய் சேதுபதிக்கும், எனக்கும் என்ன தொடர்பு என்பதை படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க. காரணம், எது எப்ப தெரியணுமோ அப்பதான் தெரியணும். அப்பதான் படம் பார்க்க சுவாரஸ்யமா இருக்கும்.”

“ஷில்பா கூட நடிச்ச அனுபவத்தை பற்றி சொல்லுங்க?”

“ஷில்பா? ஓ... விஜய் சேதுபதி கூட நடிச்ச அனுபவமா? படத்தில் அவர் திருநங்கையா வருவார். கேமரா முன்னாடி அவர் என்ன பண்றாருன்னு யாரும் கண்டுபிடிக்க முடியாது. ஆனா, மானிட்டரில் பார்த்தா, ஓ... இதெல்லாம் பண்ணியிருக்காரான்னு ஆச்சரியமா இருக்கும். தமிழில் ‘சூப்பர் டீலக்ஸ்’ வேம்பு கேரக்டரை பண்ணி முடிச்சதும், தெலுங்குக்கு போய் ‘மஜிலி’, ‘ஓ பேபி’ படங்கள் பண்ணேன்.”

“நாகசைதன்யா கூட நான்காவது படம் ஜோடி சேர்ந்திருக்கீங்க. கல்யாணமான ஜோடிக்கு ஆடியன்ஸ் கிட்ட வரவேற்பு கிடைக்குமா?”

“நானும், அவரும் கண்டிப்பா சேர்ந்து நடிக்கணும் அப்படிங்கிறதுக்காகவே ‘மஜிலி’ படத்தில் சேர்ந்து நடிக்கலை. கதையும், எங்க கேரக்டரும் சரியா பொருந்தி வந்ததால், டைரக்டர்தான் நாங்க ஜோடி சேர்ந்து நடிக்கணும்னு கேட்டார். யாரையும் கட்டாயப்படுத்தி நாங்க நடிக்கலை. கல்யாணத்துக்கு பிறகு நாங்க சேர்ந்து நடிச்சாலும், படத்தில் நாங்க காதலர்களா வரலை. அப்படி நாங்க லவ்வரா வந்து டூயட் பாடி நடிச்சா, யாரு அதை பார்ப்பாங்க? சரிதான் போங்கய்யான்னு சொல்லிடுவாங்க. அதனால் நாகசைதன்யாவும், நானும் கணவன்,
மனைவியா நடிச்சிருக்கோம்.”

“திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்கிறீங்க. பழைய வரவேற்பு உங்களுக்கு இருக்குன்னு நம்பறீங்களா?”

“வரவேற்பு இல்லாமலா என்னை புதுப்படத்தில் நடிக்க கூப்பிடறாங்க? என் கணவர் திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்கலையா? அந்த மாதிரிதான் நானும். கல்யாணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்கிறேன்.”

“உங்களுக்கு நல்ல ஸ்டோரி நாலெட்ஜ் இருக்கு. படம் டைரக்‌ஷன் பண்ற ஐடியா இருக்கா?”

“ம்ஹூம். படம் புரொடியூஸ் பண்ணுவேனே தவிர, டைரக்‌ஷன் பற்றி எந்த ஐடியாவும் கிடையாது.”

“சூப்பர் வுமன் கேரக்டரில் நடிக்க ஆர்வம் இருக்குன்னு சொன்னீங்க. அது எந்தளவு நிறைவேறி இருக்கு?”

“நடிக்க ஆசை இருக்குன்னுதான் சொன்னேனே தவிர, இதுவரை எந்தப் படத்திலும் சூப்பர் வுமன் கேரக்டரில் நடிக்க யாரும் கூப்பிடலை. ‘கேப்டன் மார்வெல்’ மாதிரி நடிக்க ஆசை இருக்கு. ஆக்‌ஷன் ஹீரோயினா நடிக்கவும் விருப்பம் உண்டு.”

“பிரேம் குமார் டைரக்‌ஷனில் ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறீங்க. ஆனா, ஃபிளாஷ்பேக்கில் வரும் ஸ்கூல் போர்ஷனிலும் நீங்கதான் நடிப்பேன்னு அடம்பிடிக்கிறீங்களாமே?”

“ஓ... அப்படியா? ஆனா, அதுபற்றி எனக்கு தெரியாதே. பிரேம் குமார் கிட்ட வேற எந்த சமந்தா போய் அப்படி கேட்டிருப்பாருன்னு எனக்கு தெரியலை. ‘96’ல் வரும் ஜானு கேரக்டர் அவ்வளவு சுலபமானது இல்லை. அது எப்பவோ ஒருமுறைதான் வரும். தெலுங்கு ரீமேக்கில் அந்த கேரக்டரில் நான் நடிக்கிறேன். மீடியாவில் இருக்கிறவங்களுக்கு என்ன வேலைன்னா, காலையில் எழுந்ததும் ஒரு நடிகையின் போட்டோவை பார்ப்பாங்க. இதுக்கு என்ன எழுதலாம்னு யோசிச்சு, அதுக்கு தகுந்த மாதிரி ஒரு வதந்தியை கிரியேட் பண்ணி பரப்பிடுவாங்க. அது அப்படியே காட்டுத்தீ மாதிரி பரவும். பிறகு யாரைப்பற்றி எழுதினாங்களோ, அவர்கிட்டயே வந்து விளக்கம் கேட்பாங்க.”

“பயோபிக் படங்கள் நிறைய வருது. உங்களுக்கு எந்த பயோபிக்கில் நடிக்க ஆசை?”

“ஓட்டப்பந்தய வீராங்கனையா நடிக்க ஆசை உண்டு. முழுநீள காமெடி கேரக்டரில் நடிக்கவும் ஆர்வம் இருக்கு. தெலுங்கு ‘ஓ பேபி’ படத்தில் காமெடி பண்ணியிருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் ரொம்ப என்ஜாய் பண்ணி நடிச்சேன்.”

“திடீர்னு தமிழில் புதுப்படங்களே இல்லாம இருக்கீங்களே...?”

“உடனே ெஹட்லைன் போடுங்க... ‘தமிழில் சமந்தாவுக்கு புதுப்படங்களே இல்லை. யாரும் அவரை நடிக்க கூப்பிட மாட்டேங்கிறாங்க’ன்னு.”

“சமூக வலைத்தளங்களில் நீங்களே நிறைய கவர்ச்சி போஸ்களை போஸ்ட் பண்றீங்க. இதுக்கு நாகசைதன்யா எதிர்ப்பு தெரிவிக்கலையா?”

“ஆஹா... ஏதாவது பெரிய விவகாரத்தில் என்னை சிக்க வைக்கலாம்னு பிளான் போட்டு வந்திருக்கீங்களா? என் கணவர் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார். ஆனா, ஏன் எப்ப பார்த்தாலும் இன்டர்நெட்டே கதின்னு இருக்கேன்னு கேட்பார். அதனால், அவர் கூட இருக்கிற நேரங்களில் மட்டும் அமைதியா இருப்பேன். அடிப்படையில் நான் ஒரு ஆங்கிலோ இண்டியன். சென்னையில் இருக்கும் என் அம்மா, ஆட்டோக்காரங்க கிட்ட பேசற தமிழை நீங்க கேட்கணும். அப்படி பேசுவாங்க. நான் யாருக்காகவும், எதுக்காகவும் சீன் போட மாட்டேன். எனக்கு தமிழ் தெரியும். நல்லா பேசுவேன். சென்னை பொழிச்சலூர்தான் நான் பிறந்து வளர்ந்த இடம். அங்கேதான் படிச்சேன். ஸோ, சமூக வலைத்தளங்களில் இருக்கிறவங்க பார்வை ஒருத்தருக்கு ஒருத்தர் மாறுபடும். என்னைப்பற்றி வரும் கமெண்டுகளை நான் படிக்க மாட்டேன்.”

“சரி. சமந்தா எம்.எல்.ஏ., இல்லைன்னா, சமந்தா எம்.பியை எப்ப பார்க்கலாம்?”

“என்னை ஏதாவது வம்பில் சிக்க வைக்கலாம்னே இப்படி கேட்கறீங்க போலிருக்கு. எல்லாத்தையும் தூக்கி என் தலைமேல் போடாதீங்க. பிளீஸ், நெக்ஸ்ட் கொஸ்டின்.”

“குட்டி சமந்தா எப்ப வருவார்?”

“அது என்கிட்ட இல்லை. எல்லாம் ஆண்டவன் அருள்.”

“நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிச்சுக்கிட்டே இருக்கு. இதைப்பற்றி ஏன் டிவிட்டரில் பதிவு செய்ய மாட்டேங்கிறீங்க?”

“சில விஷயங்கள் குறிப்பிட்ட சாராருக்கு மட்டும்தான் தெரியும். ஆனா, அதை என் சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால், தெரியாதவங்களுக்கும் அந்த விஷயம் போய் சேர்ந்து, தேவையில்லாத பிரச்னைகள் வருது. அதனால்தான் அமைதியா இருக்க வேண்டியிருக்கு. எதை பதிவு செய்யணுமோ அதை மட்டுமே பதிவு செய்யணும். எல்லாருக்கும் சமூக அக்கறை இருக்கு.”

Tags : Samantha ,
× RELATED உடல்நிலை பாதித்த என்னை விமர்சித்தனர்: சமந்தா உருக்கம்