×

ஐரா - விமர்சனம்

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் லட்சுமி குறும்பட புகழ் சர்ஜுன் கே.எம் இயக்கத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் திகில் படம் ஐரா. பத்திரிகையாளராக இருக்கும் யமுனா (நயன்தாரா), கல்யாணம் என்றாலே வேண்டாம் என்னும் பேர்வழி, ஆனாலும் பெற்றோர்கள் விடாமல் ஒரு மாப்பிள்ளையை தேர்வு செய்து சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்கிறார்கள். மாப்பிள்ளையும் பிடித்திருக்கிறது எனக் ஒப்புக்கொள்ள அப்பா, அம்மாவிடம் சொல்லிக்கொள்ளாமல் கிராமத்தில் இருக்கும் பாட்டியின் வீட்டிற்கு செல்கிறார்.

அங்கே பாட்டியின் பாசம், மணியுடன் (யோகி பாபு) கலாட்டாக்கள் என போகும் வாழ்க்கையில் யமுனாவை சில அமானுஷ்யா சம்பவங்கள் சுற்றுகின்றன. நாளுக்கு நாள் பிரச்னைகள் தீவிரம் ஆகின்றன இன்னொரு பக்கம் அமுதன் (கலையரசன்) தன் மனைவி மீது லாரி ஏற்றிய சம்பவத்திற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு ஏறி இறங்கி வருகிறது. ஆனால் அவர் யாரையெல்லாம் சந்திக்கச் செல்கிறாரோ அவர்களெல்லாம் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கெல்லாம் யார் காரணம், யமுனைவை விரட்டும் அந்த அமானுஷ்யா சக்தி எது, என்பதற்கு விரிகிறது பிளாஷ்பேக்கில் பவானியின்(நயன்தாரா) கதை. யார் இந்த பவானி ஏன் இதெல்லாம் நடக்கின்றன என்பது கிளைமாக்ஸ்.

யமுனா, பவானி என இரண்டு பாத்திரங்களும் இரண்டு வெவ்வேறு கதைகள், வெறு வேறு பாத்திரம், நன்றாக உள்வாங்கி எப்போதும் போல் லேடி சூப்பர் ஸ்டார் தனக்கான பங்கைக் கொடுத்திருக்கிறார். ஆனால் ‘விஸ்வாசம்‘ படத்தில் பேரழகியாகக் காட்டப்பட்ட நயன்தாரா இந்தப்படத்தில் அவ்வளவு டல் லுக், அதீத மேக்கப், தூங்கும் போதும் டாலடிக்கும் மஸ்காரா கண்கள் என அவரது லுக் முழுமையாகவே செயற்கையாகத் தெரிகிறது. ஆனால் ஃபிளாஷ்பேக் கருப்பழகி நயன்தாரா ஆசம் ரகம்

ரொம்ப நசுங்கிப் போயிருக்கேன்ப்பா, நீயும் அழகா இல்லைன்னு சொல்லிட்டு விட்ற மாட்டேல்ல‘ என துவண்டு போயி கேட்பது, கூனிக் குறுகி அழுவது என ஆச்சர்யம் ஏற்படுத்துகிறார். கலையரசனும் தன் பங்குக்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதே போல் சிறுவயது நயன்தாராவாக வரும் கேப்ரெல்லா அடடே யாரப்பா இந்தப் பெண் எனக் கேட்கத் தோன்றும். ஆனால் படத்தில் ஒட்டாமல் துண்டாக நிற்கிறார்கள் பாட்டியாக வரும் கொலப்புள்ளி லீலா, மற்றும் யோகி பாபு, காமெடிகளும் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. படத்தின் நீளத்திற்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார்கள் இருவரும்.

பேய் படங்கள் என்றாலே மினுக்கிடும் அறை விளக்குகள், தானாக திறக்கும் கதவுகள், பின்னாடி வேகமாக கடக்கும் கருப்பான உருவம், என்னும் அதே டெம்பிளேட் காட்சிகள். மேலும் லாஜிக் இடிக்கும் சம்பவங்கள், நயன் தாராவை ஏன் பேய் துறத்துகிறது என்பதற்கான காரணம், எல்லாமே காத்திருந்து பார்க்கும் நமக்கு பல்ப் மொமென்ட்கள்தான். பேய் கொலை செய்ய ஒரு லாஜிக் வேண்டாமா, அடப் போங்கயா என சலிப்பு வருவது மட்டுமின்றி இரண்டாம் பாகத்தில் படம் உணர்வுகளை கொட்டுகிறேன் பேர்வழியாக நீண்டு கொண்டே போகிறது.

இதில் ஒளிப்பதிவாளர் சுதர்சன் ஸ்ரீனிவாசன் திகில் படத்திற்கான மெனெக்கடலே இல்லாமல் ஒவ்வொரு ஃபிரேமிலும் சிவப்பு விளக்கை கொட்டி வைத்திருக்கிறார். பிளாஷ்பேக் காட்சிகளில் சில இடங்களில் பிளாக் & ஒயிட் டோன் அருமை , ‘மேக தூதாம்‘ பாடல் மனதுக்கு இதம். பின்னணி இசை இன்னும் வேலை செய்திருக்கலாம். மொத்தத்தில் ‘மாயா‘ , ‘டோரா‘ என நயன்தாராவின் பிளாக்பஸ்டர் திகில் பட கிராப் இந்த ‘ஐரா‘ படத்தால் ஆட்டம் காணும்.

Tags :
× RELATED ரத்தினம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஹரி