×

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு மத்தியில் நாளை மறுநாள் காங்கிரஸ் தலைவர் தேர்தல்: கார்கேவுக்கு வெற்றி வாய்ப்பு; சசிதரூர் ஆதங்கம்

போபால்: ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு மத்தியில் நாளை மறுநாள் (அக். 17) காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், அதற்கு பொறுப்பேற்று அப்போதைய தலைவராக இருந்த ராகுல்காந்தி தனது தலைவர் பதவியை ராஜிமானா செய்தார். அதன்பின் கட்சியின் இடைக்கால தலைவராக கிட்டதிட்ட 3 ஆண்டாக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் போர்க்கொடி தூக்கினர். அதன் தொடர்ச்சியாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரசின் தேசிய ஆலோசனை கூட்டம் நடந்தது. அங்கு போடப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த ஒற்றுமை யாத்திரை என்ற ெபயரில் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு நாளை மறுநாள் (அக். 17) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடு முழுவதும் அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகம், டெல்லியில் கட்சித் தலைமையகம், ராகுல்காந்தியின் நடைபயண முகாம் ஆகிய இடங்களில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு முடிந்தவுடன், அனைத்து வாக்குப்பெட்டிகளும் டெல்லிக்கு கொண்டு வரப்படும். அதன்பின் வாக்கு எண்ணிக்கை வரும் 19ம் தேதி நடைபெறும். காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில், தமிழக காங்கிரசில் 710 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதேபோல் நாடு முழுவதும் அந்தந்த மாநில பிரதிநிதிகளின் அடிப்படையில் வாக்காளர்கள் எண்ணிக்கை இருக்கும். சுமார் 9,000 பேர் வாக்களிக்க தகுதி ெபற்றவர்கள் என்பதால், இவர்கள் தான் தலைவரை தேர்வு செய்ய உள்ளனர். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், திருவனந்தபுரம் எம்பியும், ஜி-23 அதிருப்தி தலைவர்களில் ஒருவரான சசிதரூரும் போட்டியிடுகின்றனர். கட்சியின் தலைமை மற்றும் பெரும்பாலான மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், சசிதரூரின் ெவற்றி என்பது இப்போதே கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் வாக்கு சேகரிக்க நேற்று சசிதரூர் போபால் வந்தார். அவரை கட்சிப் பிரதிநிதிகள் வரவேற்றனர். தொடர்ந்து காங்கிரஸ் மாநில தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிதரூர், ‘குறிப்பிட்ட வேட்பாளருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கக் கூடாது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தேர்தலில் போட்டியிடும் கார்கேவுக்கு ஆதரவு அளிப்பதாக வெளிப்படையாக அறிவித்தது குறித்து தேர்தல் பணிக்குழு கவனம் செலுத்த வேண்டும். மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், எதிர்க்கட்சித் தலைவர் கோவிந்த் சிங் ஆகியோர் எனக்கு ஆதரவளிப்பாளர்கள் என்று நம்புகிறேன்’ என்றார். மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய சிங்கின் சகோதரர் லக்ஷ்மண் சிங், சசிதரூருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். ஆனால் திக்விஜய் சிங், மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. …

The post ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு மத்தியில் நாளை மறுநாள் காங்கிரஸ் தலைவர் தேர்தல்: கார்கேவுக்கு வெற்றி வாய்ப்பு; சசிதரூர் ஆதங்கம் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,India Unity Yatra ,Congress ,Kharge ,Sasitharur Athangam ,Bhopal ,Congress party ,
× RELATED சொல்லிட்டாங்க…