×

வட்டியில்லாமல் கடன் தருவதாக ரூ.50 லட்சம் நூதன மோசடி: வங்கி மேலாளர் கைது

அண்ணாநகர்: திருச்சி மாவட்டத்தை  சேர்ந்தவர் கோவிந்தராஜன் (37). இவர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சென்னை அரும்பாக்கம் என்.எஸ் .கே.நகர் பகுதியில், எல்.எம்.ஆர் குரூப் என்ற ஒரு தனியார் நிறுவனத்தை தொடங்கினார். இங்கு, ரூ.11 ஆயிரம் செலுத்தினால் வட்டி இல்லாமல் ஒரு லட்சம் கடனாக 45 நாட்களில் தருவதாகவும்,  அதே போல் மாதம்தோறும் செல்போனுக்கு ரூ.1000 ரீசார்ஜ் செய்து தரப்படும் எனவும் விளம்பரம் செய்தார்.இதனை நம்பி அப்பகுதி மக்கள் மற்றும் பெண்கள் என சுமார் 450 பேர் கோவிந்தராஜன் அலுவலகத்தில் தலா ரூ.11 ஆயிரம் என மொத்தம் ரூ.50 லட்சம் கட்டி உள்ளனர். ஆனால் 45 நாட்கள் முடிந்தும் எந்தவிதமான பணமும் தரமால் அலைக்கழித்து வந்துள்ளார். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள் நேற்று முன்தினம் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தராஜனை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், கோவிந்தராஜன்  திருச்சி மாவட்டத்தில்  உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்ததும், பின்னர், அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு,  அரும்பாக்கத்தில் நிறுவனம் தொடங்கி, ரூ.50 லட்சம் நூதன மோசடி செய்ததும்  தெரிய வந்தது. இதனையடுத்து, நேற்று முன்தினம் கோவிந்தராஜனை கைது செய்த போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், அவரது அலுவலகத்தில் வேலை செய்த 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்….

The post வட்டியில்லாமல் கடன் தருவதாக ரூ.50 லட்சம் நூதன மோசடி: வங்கி மேலாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Govindarajan ,Trichy district ,Arumbakkam NSK Nagar, Chennai ,
× RELATED நாளை விசாரணைக்கு ஆஜராக டிடிஎஃப் வாசனுக்கு போலீஸ் சம்மன்