×

ஆரோக்கியமான வாழ்வுக்கு பாரம்பரிய உணவு அவசியம்-அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடி : தூத்துக்குடி சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா, குறுக்குச்சாலை கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட உணவு பாதுகாப்பு திட்ட நியமன அலுவலர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்ரி வரவேற்றார். ஓருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி திட்ட விளக்கவுரை ஆற்றினார். பாரம்பரிய உணவு திருவிழாவை பார்வையிட்டு சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது: எதிர்கால வாழ்க்கை எல்லோருக்கும் நல்ல முறையில் அமைவதற்கு உடல் ஆரோக்கியம் முக்கியம், அதற்கு பாரம்பரிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். சத்தான ஆகாரம் எது என்று பார்த்து சாப்பிடவேண்டும். இதுேபான்ற சில குறைபாடுகள் இருப்பதால் 51 சதவீத பெண்களுக்கு ரத்தசோகை பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் ரத்தம் ஏற்றி கொள்கின்றனர். இதுபோன்ற குறைபாடுகள் வராமல் இருப்பதற்கு காய்கறி வகைகள், நவதானிய வகைகள் அதிகளவில் சாப்பிட வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் கழிவுப்பொருட்களில் இருந்து பல தத்ரூபமான பொருட்களை தயாரித்திருக்கிறார்கள். அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளுக்கு திறமையாக கற்றுக் கொடுக்கிறார்கள். குழந்தைகளை அறிவாற்றல் மிக்கவர்களாக வளர்க்க வேண்டும். முதலமைச்சர் இதில் அதிக கவனம் செலுத்துகிறார். சமூக நலத்துறை சார்பாக ஊட்டச்சத்து மிக்க குழந்தைகளையும், குறைவான குழந்தைகளையும் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்குவதற்காக ஒரு செயலி உருவாக்கி அங்கன்வாடிகளில் உள்ள 38 லட்சம் குழந்தைகளின் வயது, எடை, முகவரி மற்றும் எல்லா பிரச்னையையும் பதிவேற்றம் செய்து வைத்துள்ளோம். ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு கவனம் செலுத்தப்படுகிறது. ஊட்டச்சத்து குறைவானவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்குவதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளார். கல்லூரி மாணவ- மாணவிகள் காலை உணவை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும், என்றார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கு  அமைச்சர் கீதாஜீவன் சான்றிதழ் வழங்கினார். இதில் உதவி சித்த மருத்துவர் தேவி, ஹோலிகிராஸ் கல்லூரி பேராசிரியர் மாரிதங்கம், கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இளங்குமரன், செயலாளர் ஜீவன் ஜேக்கப், குழந்தை வளர்ச்சி திட்ட ஊரக அலுவலர் திலகா, ரூபி, தாஜிநிசா, ஜெயா, கல்லூரி மாணவ- மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விவேக்ராஜா நன்றி கூறினார்….

The post ஆரோக்கியமான வாழ்வுக்கு பாரம்பரிய உணவு அவசியம்-அமைச்சர் கீதாஜீவன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Getajivan ,Thoothukudi ,Nutrition ,Thoothukudi Social Welfare ,Women ,Gitajivan ,
× RELATED தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!!