×

பருத்தி விளையும் மண்ணில் பன்னீர் திராட்சை

ரூ.70,000 செலவு,  7 மடங்கு லாபம் பார்க்கும் சுருளிராஜன்பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரி சாகுபடியை மேற்கொள்ளும் விவசாயிகளே அதிகம். கிணற்றுப் பாசனத்தை தான் அதிகம் நம்பியுள்ளார்கள்.  இங்கு தான் தமிழகத்திலேயே  அதிக அளவில் பருத்தி பயிரிடப்பட்டு வருகிறது.  60ஆயிரம் ஏக்கர். கூடவே மக்காச் சோளம், சின்னவெங்காய சாகுபடியிலும் அதிகம். இருந்தும் வித்தியாசமான சில விவசாயிகளின் சாதனை முயற்சிகளால் பருத்தி விளையும் பூமியில் பன்னீர் திராட்சையும் விளைவிக்கப்பட்டு வருகிறது.பெரம்பலூர் அருகேயுள்ள எசனை கிராமத்தை சேர்ந்தவர் சுருளிராஜன் ஆத்தூர் சாலை அரசலூர் கை- காட்டி எதிரே 4 ஏக்கர் பரப்பளவில் வயல்கள் உள்ளது. சுற்றிலும் மக்காச்சோளம் விளையும் நிலையில், சுருளிராஜன் மட்டும் தோட்டக்கலை பயிர்களில் ஆர்வம் காட்டுவதால் பந்தல் அமைத்து பாகல், புடலை, பீர்க்கன், சுரைக் காய்களைப் பயிரிட்டு வருகிறார். இவர், கடந்த 1999ம் ஆண்டு பரிச்சார்த்தமாக பன்னீர் திராட்சையை பயிரிடவும், அதனை ரசாயன உரங்களின்றி, இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி சாகுபடி செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக தேனி, கம்பம், திண்டுக்கல் பகுதிகளுக்கு தேடிச்சென்று திராட்சை சாகுபடி குறித்து நன்கு அறிந்தபிறகு, தனது அரை ஏக்கர் நிலத்தில் பந்தல் அமைத்து பன்னீர் திராட்சையை பயிரிட்டார். நல்ல லாபம் ஈட்டி வந்தபோதும் திடீர் கனமழையால் 11 ஆண்டுகளில் திராட்சை சாகுபடியை நிறுத்திவைத்தவர், கடந்த 2019ம் ஆண்டு திரும்பவும் திராட்சை சாகுபடிக்கு மாறினார். ‘இவரிடம் தேடிச்சென்று திராட்சைப் பழங்களை வாங்கி தின்பதற்கு காரணம், இயற்கை வழி விளைச்சலே’ என்கிறார்கள் சுற்றியுள்ள மக்கள். “23ஆண்டுகளுக்கு முன்பே எனது வயலில் திராட்சை வெள்ளாமையை ஆரம்பித்தேன்.  இதற்காக எனது 50 செண்டு நிலத்திற்கு 1000 கருங்குடி குச்சிகளை நட்டு வைத்து, அது வளரத் தொடங்கியதும் தேவையற்றதை ஒதுக்கி அருமையான 500 குச்சிகளை மட்டுமே வளர்க்கத் தொடங்கினேன். எனது குடும்பத்தாரைக் கொண்டே பராமரித்து பயிர்செய்து வருகிறேன். வெளி ஆட்கள் கூலி செலவுனு பார்த்தால், கவாத்து செய்யவும், புடை தள்ளவும், ஈரங்கி எடுப்பது என முள், குச்சி வெட்டும் வேலை , பிஞ்சு கட்டுதல் பணிகளுக்காக, தான் ஆட்களைக் கூப்பிடுவேன். வளரும் திராட்சைச் கொடிகளுக்கு ராசாயன மருந்தின்றி இயற்கைமுறையில் இலை வழியாக உரமிடுகிறேன். குறிப்பாக பஞ்சகாவ்யம், ஜீவாமிர்தம், மீன் அமிலம் ஆகியவற்றை நாங்களே தயாரித்து பயன்படுத்துகிறோம். பழத்தின்பளபளப்புக்காக கோமியம், பால், வளர்ச்சியை துரிதப்படுத்த எலுமிச்சைச்சாறு கலந்த பெருங்காயக் கரைசலை தெளிக்கிறோம். பூஞ்சை பாதிப்பை தடுக்க மஞ்சள் தூளையும் பயன்படுத்துகிறோம். பயிர்களுக்கும் பழங்களுக்கும் பாதிப்பு ஏற்படாதிருக்க பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தாமல் வேப்ப எண்ணெய், வேப்பம் புண்ணாக்குகளை பயன்படுத்தி தயாரிக்கும் பூச்சி விரட்டிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். நாட்டு மாடுகளின் கோமியம் மட்டுமன்றி ஆட்டுக் கோமியமும் இயற்கைவழி இடுபொருளாகப் பயன்படுத்துகிறோம்.50 சென்டு நிலத்தில் பயிர் செய்திட 70ஆயிரம் வரை செலவு செய்தால் ஒருசென்டில் 70 கிலோ முதல் 100 கிலோ வரை திராட்சையை அறுவடை செய்கிறோம். குறிப்பாக 50சென்டில் 3.5 டன் திராட்சையை சிறப்பாக அறுவடை செய்யமுடியும். வளர்ப்பு, பராமரிப்பு என கொஞ்சம் மெனக்கெட்டு அக்கறை காட்டினால் மேலும் ஒரு டன் அதிகரிக்கலாமே என முய ன்றபோது கடந்த ஆண்டு நாலே கால் டன் திராட்சை பழங்களை உற்பத்தி செய்தோம். முற்றிலும் ஆர்கானிக் முறையில் சாகுபடி செய்வதால் வர்த்தகம் செய்யத் தேவையின்றி வயலிலேயே விற்றுத் தீர்கிறது.  மனைவி, மகள்கள் ஆகியோருடன் அறுவடை செய்துவைத்தால் போதும், ஆத்தூர் சாலையில் செல்வோர் ஆர்வமாய் அங்கேயே வந்து வாங்கிச் செல்கிறார்கள், வண்டியில் ஏற்றிச் சென்று  கூவி விற்பனை செய்ய வேண்டிய சிரமம் இல்லை தற்போது கிலோ ரூ120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் 70ஆயிரம் செலவு செய்து 7 மடங்கு லாபத்தை பெறமுடியும்.நான் கற்ற திராட்சைச் சாகுபடியை பார்த்து, நாங்களும் செய்யலாமா எனக்கேட்ட விவசாயிகளுக்காக, சாகுபடித் தொழில்நுட்பத்தை கற்றுத்தருகிறேன். இதன்படி இப்போது செட்டிக்குளத்தில் 45 சென்டில், பொம்மனப்பாடியில் 45 செண்டில், கீழப்புலியூரில் 35 சென்டி ல் திராட்சை சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. ஒன்றிய அரசு நிறுவனமான வாலிகண்டபுரம் கேவிகே வேளாண் நிறுவனத்திலும் 40 சென்டில் திராட்சையை பயிரிட ஏற்பாடு செய்து தருகிறேன். தொடர்புக்கு – சுருளிராஜன் 63795 80108திராட்சையோடு செல்பி எடுசாலையோரமே திராட்சைத் தோட்டம், இருப்பதால் சாலையில் செல்லும் பயணிகள், பழங்களை வாங்கிச் செல்வதோடு, குடும்பத்துடன் பன்னீர் திராட்சைகளோடு செல்பியெடுத்துச் செல்கின்றார்கள்.தொகுப்பு: ஜே.வில்சன்

The post பருத்தி விளையும் மண்ணில் பன்னீர் திராட்சை appeared first on Dinakaran.

Tags : Ranawari ,Sullirajanberambalur district ,
× RELATED கடவூர், தோகைமலை பகுதிகளில் பலத்த மழை...