×

காட்பாடி அருகே திருவலத்தில் 69 முதியவர்கள் மீட்கப்பட்ட கருணை இல்லத்திற்கு ‘சீல்’: கலெக்டர் உத்தரவு

திருவலம்: திருவலத்தில் இயங்கிய கருணை இல்லத்தில் உணவு வழங்காமல் சித்ரவதை செய்யப்பட்டு 69 முதியவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்த இல்லத்திற்கு சீல் வைக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவலம் இபி கூட்ரோடு பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு தனியார் அமைப்பின் கருணை இல்லம் தொடங்கப்பட்டது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த முதியோர், ஆதரவற்றவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் கருணை இல்லத்தில் இருந்து இரவு நேரங்களில் அழுகுரல் கேட்பதாகவும், ஆம்புலன்ஸ் மூலம் முதியோர்களை ஏற்றிச்செல்வதாகவும், புகார் எழுந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கருணை இல்லம் அனுமதியின்றி இயங்குவது  தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த முதியவர்கள் மீட்கப்பட்டு கருணை இல்லத்திற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. சில மாதங்களில் கருணை இல்லம் மீண்டும் திறக்கப்பட்டு, முதியோர், ஆதரவற்றவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் உணவு வழங்காமல் சித்ரவதை செய்வதாகவும் வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு புகார்கள் வந்தது. அவரது உத்தரவுப்படி,  அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த பணியாளர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் முதியோர் மற்றும் ஆதரவற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டிருப்பதும், சரியாக அவர்களுக்கு உணவு வழங்கப்படாததும் தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த 37 ஆண்கள், 32 பெண்கள் என்று 69 முதியவர்கள் மீட்கப்பட்டனர். இவர்களில் 8 பேர் வாலாஜா அரசு மருத்துவமனைக்கும், 7 பேர் செங்கல்பட்டில் இயங்கும் தொண்டு நிறுவன இல்லத்துக்கும், 54 பேர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு சீல் வைக்கப்பட்ட கருணை இல்லம் மீண்டும் இயங்குவதன் பின்னணியில் இருப்பவர்கள் விவரமும் தெரியவில்லை. மீண்டும் புகார் எழுந்த நிலையில் இந்த இல்லத்துக்கு நிரந்தரமாக சீல் வைப்பதுடன், இல்ல நிர்வாகிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் கேட்டபோது, ‘கருணை இல்லத்தை அரசு கட்டுப்பாட்டில் எடுத்துள்ளோம். முழுமையாக சோதனை செய்துவிட்டு இப்போதைக்கு சீல் வைக்க வட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதற்கு பிறகு அங்கு சட்டத்துக்கு புறப்பான சம்பவங்கள் நடந்துள்ளதா என்பதை காவல் துறை விசாரணைக்கு உட்படுத்த எஸ்.பிக்கு பரிந்துரைக்கப்படும். விசாரணை அறிக்கை வர 2 நாட்கள் வரை ஆகும். தற்போதும் அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட முதியோர்களிடம் எழுத்துப்பூர்வமாக புகார் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார்….

The post காட்பாடி அருகே திருவலத்தில் 69 முதியவர்கள் மீட்கப்பட்ட கருணை இல்லத்திற்கு ‘சீல்’: கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tiruvalam ,Gadpadi ,Thiruvalam ,Katpadi ,
× RELATED ஊராட்சி செயலாளர் வீட்டில் விஜிலென்ஸ்...