வீதி நாடகம் டூ சினிமா! ‘பூ’ ராமுவின் பயணம்

நடிகர், சமூக செயற்பட்டாளர் என பன்முகம் கொண்டவர் பூ ராமு. தற்போது இவர் செல்வ கண்ணன் இயக்கியுள்ள ‘நெடுநல்வாடை’ படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இளங்கோ, அஞ்சலி நாயர் நடித்துள்ள இந்தப் படத்தில் ‘பூ’ ராமு கிராமத்து தாத்தாவாக நடித்துள்ளார். ரிலீஸுக்கான புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்தவரிடம் விரிவாகப் பேசினோம்.

உங்களைப் பற்றி...?

பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை. ஆரம்பக் கல்வி மாநகராட்சிப் பள்ளியில் கிடைத்தது. அப்பா மத்திய அரசு ஊழியர். நேர்மையானவர் என்பதாலேயே பல ஊர்களுக்கு தூக்கியடிக்கப்பட்டார். அதில் ஒரு நன்மை என்னவென்றால் இந்தி, தெலுங்கு உட்பட ஏராளமான மொழிகளைக் கற்றுக்கொள்ள முடிந்தது. ப்ளஸ் டூ வரைதான் படிக்க முடிந்தது. படிக்கும் காலத்திலேயே போராட்டம், உண்ணாவிரதம் என்று முற்போக்கு இயக்கங்கள் நடத்தும் நிகழ்வுகளில் கலந்து கொண்டதால் படிப்பு மீதான கவனம் குறைந்தது.

சின்ன வயதி லேயே எனக்கு சினிமா பாடல்கள் பிடிக்கும். ஏ.எம்.ராஜா, பி.பி.சீனிவாஸ் போன்ற பாடகர்கள் குரலில் அருமையாகப் பாடுவேன்.

இளமைப் பருவத்திலிருந்து வீதி நாடகங்களில் நடித்து வருகிறேன். சென்னை கலைக் குழு சார்பாக ஆயிரக்கணக்கில் வீதி நாடகங்களில் நடித்திருக்கிறேன். அந்த வகையில் கடந்த முப்பது வருடங்களாக என் வாழ்வு  நாடகமயம்தான். பிழைப்புக்காக அவ்வப்போது கிடைக்கும் வேலைகளைச் செய்வேன். மார்க்கெட்டிங், போட்டோகிராபி, என்ஜினியரிங், பிரிண்டிங் என்று ஏராளமான தொழில் செய்துள்ளேன். ஐந்து வருடம் ஆட்டோ ஓட்டியிருக்கிறேன்.

சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?

எனக்கு ‘அன்பே சிவம்’தான்  முதல் படம். அந்தப் படத்தில் எங்கள் வீதி நாடகத்தை கமல் சார் பயன்படுத்தினார். பெரிய கேரக்டரெல்லாம் கிடையாது. அப்போது சினிமா என்றால் என்ன என்று கூட எனக்குத் தெரியாததால் நடிப்பு மீது ஆர்வம் காட்டவில்லை. அதுக்குப் பிறகு ‘பூ’ படத்தில் சசி சார் வாய்ப்பு வழங்கிய போதுதான் சினிமாவை உள்வாங்கிக் கொண்டு தொடர்ந்து நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். தொடர்ந்து நாலைந்து படங்கள் பண்ணிய பிறகு என்னுடைய திறமையை அங்கீகரிக்கும் விதமாக படங்கள் கிடைத்தன.

நீங்க கதைநாயகனா நடிக்கிற ‘நெடுநல்வாடை’ பெண்கள் சொத்து உரிமை பேசும் படமா?

பெரியாரை விட பெண்ணுரிமை பற்றி யாரும் சிறப்பாகப் பேச முடியாது. உலகளவில் மார்க்ஸ்- ஏங்கல்ஸ் பேசியிருக்கிறார்கள். பெரியார் காலத்தில் சொன்ன விஷயத்தை கலைஞர் தன்னுடைய  ஆட்சியில் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றினார். சட்டம் போட்டு திட்டம் வகுத்தாலும் பெண்களுக்கான அநீதி குறையவில்லை. பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படமாக ‘நெடுநல்வாடை’ படத்தை இயக்கியுள்ள செல்வகண்ணன் பாராட்டுக்குரியவர்.  கிராமத்தில் தாத்தாவின் ரோல் என்ன என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். வைரமுத்து சாரைப் பற்றிச் சொல்லாமல் இந்தப் படத்தைப் பற்றி பேசமுடியாது. பெரிய இயக்குநர்கள் பொறாமைப்படுமளவுக்கு பாடல் கொடுத்துள்ளார்.

இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறேன். இயக்குநர் செல்வகண்ணன் கதை சொல்லும் போது எனக்கு நாற்பது, ஐம்பது காட்சிகள் இருந்தது. ஆச்சர்யம் தாங்காமல் ‘இவ்வளவு அதிகமாக எனக்கு காட்சிகள் இருந்தால் ரசிகர்கள் பார்ப்பார்களா?’ என்று கேட்டேன். ‘இது வேற லெவல் படம்’ என்று இயக்குநர் நம்பிக்கை கொடுத்தார்.

பேப்பரில் இருந்ததைவிட லோகேஷனுக்கு போனபிறகு படத்தின் மீதான நம்பிக்கை அதிகமானது.  தாத்தாவுக்கும் பேரனுக்குமான  உறவு, பேரனுக்கும் காதலிக்குமான உறவு, அப்பாவுக்கும் பிள்ளைகளுக்குமான உறவு என்று மூன்று பகுதிகளாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். இது என்னுடைய இருபத்தைந்தாவது படம். இயக்குநர் செல்வகண்ணனுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஐம்பது நண்பர்கள் சேர்ந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள்.

நான் சிட்டியில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் கிராம வாழ்க்கை எனக்கு கொஞ்சம் அந்நியமாக இருந்தது. அதைத் தவிர்க்க கிராம மக்களின் லைஃப் ஸ்டைல், வயல்வெளி என்று கதைக்களத்துக்கான பின்னணியில் இடம்பெறும் வேலைகளைக் கற்றுக்கொண்டுதான் படப்பிடிப்புக்கு போனேன்.

நடித்ததைவிட டப்பிங் சவாலாக இருந்தது. திருநெல்வேலி வட்டார மொழியைப் பேசுவதாக இருந்தால் ஒவ்வொரு சொல்லையும் முழுங்கி பேச வேண்டும். உதாரணத்துக்கு சென்னை பக்கம் அடுத்து என்ன என்பதற்கு ‘அப்புறம்’  என்று சொல்வோம். நெல்லை வட்டாரத்தில் ‘பிறவ்’ என்று வார்த்தைக்கு வலிக்காமல் பேச வேண்டும்.

பொதுவாவே நீங்க நடிக்கும் கேரக்டர்களில் அநியாயத்துக்கு சோக கீதம் வாசிப்பது ஏன்?

கதையின் தேவை யைப்பொறுத்துதான் நடிக்க முடியும். ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கல்லூரி முதல்வராக நடித்திருப்பேன். அந்த வேடத்தில் ‘டை’ அணிந்து நடித்ததில் என்னுடைய நண்பர்களுக்கு மகிழ்ச்சி. மற்றபடி நான் எந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதை இயக்குநர்கள் தீர்மானிக்கிறார்கள். சில படங்களில் நான் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதுபோன்ற படங்களில் என் கேரக்டர் மீதான நிறை குறைகள் அனைத்தும் இயக்குநரையே சேரும். சீனு ராமசாமி, சுசீந்திரன் போன்ற இயக்குநர்கள் காட்சிக்கான மூட் பற்றிச் சொல்லிவிட்டு எனக்கான சுதந்திரம் கொடுத்துவிடுவார்கள்

வீதி நாடகங்களுக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறீர்கள்?

வீதி நாடகங்களில் ரீ-டேக் எடுக்க முடியாது. அதுமட்டுமில்ல, 500 பேரின் கவனம் திசை மாறாத அளவுக்கு அழுத்தம் கொடுத்து நடிக்க வேண்டும். சினிமாவில் அப்படி இல்லை. சினிமா எந்திரம். வீதி நாடகம் நிஜம். எதையும் மறக்க முடியாது. கடின ஆயத்தங்கள் தேவை. சினிமாவில் ரீ  டேக் , டப்பிங் போன்ற வசதிகள் உண்டு.

வீதி நாடகங்களும் வலிமையான கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்துள்ளது. தோழர் சஃப்தர் ஆஷ்மி உத்தரப்பிரதேசத்தில் 5000 பார்வையாளர்கள் முன்னிலையில் வீதி நாடகம் போடும் போது கொடூரமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவருடைய கொலைக்குப் பிறகு அவருடைய மனைவி வீதி நாடகம் நடத்திய போது ஒரு லட்சம் பார்வையாளர்கள் திரண்டார்கள். குண்டர்களால் ஒரு சஃப்தர் ஆஷ்மியைத்தான் கொல்ல முடிந்தது. ஆனால் இன்று ஆயிரமாயிரம் சஃப்தர் ஆஷ்மி உருவாகியிருக்கிறார்கள். இதுதான் வீதி நாடகங்களின் பலம்.

சினிமாவில் நீங்கள் சம்பாதித்த சொத்து?

ஒரு பைசா கூட சொத்து சேர்க்கவில்லை. நான் ஏராளமான படங்கள் நடித்திருந்தாலும் சம்பள விஷயத்தில் கறார் காண்பிக்க மாட்டேன். ஒரு இயக்குநர் பட்ஜெட் தயாரிக்கும்போது எனக்கு என்று ஒரு சம்பளம் எழுதி வைத்திருப்பார். பெரும்பாலும் அது குறைவாகவே இருக்கும். அவர் மனதில் என்ன நியமித்தாரோ அதையே சம்பளமாக வாங்குகிறேன்.

புது இயக்குநர்கள் என்று வரும்போது சம்பளத்தை விட்டுக் கொடுத்துடுவேன். பொதுவா நாம் மனதுக்குப் பிடித்த ஒரு வேலை செய்வோம். அதுபோல்தான் சினிமாவைப் பார்க்கிறேன். ஆட்டோ ஓட்டும் போது எப்படி குடும்ப வண்டியை ஓட்டினேனோ அதுபோல் தான் இப்போதும் வண்டி ஓடுகிறது. ஒருவேளை ஆட்டோ ஓட்டி கார், பங்களா வாங்கி செட்டிலாகி இருக்க முடியும் என்று நினைத்திருந்தால் அந்தத் தொழிலையே செய்திருப்பேன்.

இதுவரை பத்து, பதினைந்து வேலை செய்துள்ளேன். அது போல்தான் சினிமாவையும் பார்க்கிறேன். வருடத்துக்கு இரண்டு படம் போதும். கோடியில் புரள வேண்டும் என்ற லட்சியம் எதுவும் இல்லை. தேவைக்கு இருந்தால் போதும் என்று வாழ்கிறேன்.

அடுத்து?

பெயரிடப்படாத ஒரு படத்தில், கும்பமேளாவில் ஐந்து லட்சம் மக்கள் மத்தியில் தொலைந்த உறவைத் தேடும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். சதீஷ் இயக்குகிறார். சமீபத்தில் அதன் படப்பிடிப்பு உத்தரப் பிரதேசத்தில் நடந்தது.‘ராக்கி’ வடசென்னையைப் பற்றிய கதை. பாரதிராஜா, ரோகிணி ஆகியோரும் இருக்கிறார்கள். ‘மஞ்சள் வானம்’ படத்தில் ஓட்டல் தொழிலாளியாக நடிக்கிறேன். சீனிவாசன் இயக்கியுள்ளார். சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் படம்.

பிற மொழி நடிகர்கள் தமிழில் நடிப்பது பற்றி?

கலைஞனுக்கு மொழி, நாடு கிடையாது. அவன் யாதும் ஊரே யாதும் கேளீர் என்ற பாடலுக்கு சொந்தக்காரன். ஒரு இயக்குநர் இன்னார் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்யும் போது அதை குறைத்து மதிப்பிட முடியாது. தமிழில் ஆரம்ப காலப் படங்களைப் பார்க்கும் போது பக்தி இலக்கியங்களை வைத்து படம் எடுத்தார்கள். அந்தப் படங்களில் யார் நடித்தார்கள்? இங்குள்ள ஒரு தமிழரும் நடிக்கவில்லை. பிற மொழி நடிகர்கள்தான் நடித்தார்கள். ஆனால் அந்தப் படத்தை நாம் ரசித்தோம். அதுதான் இப்போதும் நடக்கிறது.

Related Stories: