×

தோஷங்கள் விலகும்; சந்தோஷங்கள் பெருகும்: பக்தர்களின் பிணிகளை கண்களால் தீர்க்கும் கோலவிழியம்மன்..!!

கோலவிழியம்மனின் கண்களுக்கு எதிரே, அவளின் பார்வை படும்படி நின்று மனதார வேண்டிக்கொண்டால் போதும், தோஷங்கள் அனைத்தும் விலகும்; சந்தோஷங்கள் பெருகும் என்பது ஐதீகம். மயிலாப்பூர் என்றதும் கற்பகாம்பாள் நினைவுக்கு வருவாள். அவள் குடிகொண்டிருக்கும் கோயிலுக்கு அருகிலேயே இரண்டு அம்மன்கள் கோயில் கொண்டிருக்கிறார்கள். முண்டகக்கண்ணி அம்மன் கோயில் ஒன்று. இன்னொன்று... கோலவிழியம்மன் ஆலயம். சுமார் 900 ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் என்பதற்கு சான்றுகள் உள்ளன.

அதேபோல், விக்கிரமாதித்தன் காலத்துக் கோயில் என்றும் சொல்லுவார்கள். சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு, கபாலங்களை மாலையாக அணிந்து கொண்டிருக்கிற அகோரிகள், இந்த ஆலயத்தையும் வழிபட்டார்கள் என்று விவரிக்கிறது ஸ்தல புராணம். அந்த வகையில், அம்மனுக்கு மேற்கே வீரபத்திரர் கோயிலும் அமைந்திருக்கிறது சிறப்பு என விவரிக்கிறார்கள் பக்தர்கள். தட்சனின் யாகத்தை அழிப்பதற்காக சிவபெருமானால் உண்டாக்கப்பட்டவர் வீரபத்திரர் என்கிறது புராணம். மேலும் ஆயிரம் வருடங்களையெல்லாம் தொன்மை மிக்க விக்கிரகம் இந்த அம்மன் என்றும் ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த விக்கிரகம் இந்த அம்மன் என்றும் கோலவிழியம்மனை சிலாகிக்கிறார்கள் அம்மன் பக்தர்கள்.

அற்புதமான அம்மன் கோயில். அம்மனுக்கு முன் நின்று கண்மூடி வேண்டினாலே, நம் கவலைகளையும் துக்கங்களையும் துடைத்தெடுப்பாள் கோலவிழியம்மன் என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் சாக்த வழிபாட்டு பக்தர்கள். பொதுவாக சப்த கன்னியர் வழிபாடு என்பது சோழர்கள் காலத்தில் உருவானது என்றும் சோழர்கள் அமைத்த பல ஆலயங்களில், சப்தமாதர்களுக்கும் சந்நிதி அமைக்கப்பட்டது என்றும் சொல்கிறது வரலாறு. கோலவிழியம்மன் ஆலயத்தில் சப்தமாதர்களுக்கும் சந்நிதி அமைந்திருப்பதை தரிசிக்கலாம். எனவே இது சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் என்று போற்றுகின்றனர். இந்தக் கோயிலில் இன்னொரு சிறப்பு... இங்கே இரண்டு மூலவர்கள். கோலவிழியம்மனும் மூலவராக இருக்கிறார்; பத்ரகாளியம்மனும் மூலவராகக் கோயில் கொண்டிருக்கிறார்.

மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலில் இருந்து அரை கி.மீ. தொலைவிலும் முண்டகக்கண்ணி அம்மன் கோயிலில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது கோலவிழியம்மன் கோயில். ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆடி மாத செவ்வாய்க்கிழமையில் அம்மனுக்கு செந்நிற மலர்கள் சார்த்தி வேண்டிக்கொண்டால், எலுமிச்சை மாலை சார்த்தி பிரார்த்திக்கொண்டால், குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் யாவும் நீங்கும்; கடன் முதலான பிரச்சினைகள் அகலும் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

இங்கே ஆலயத்துக்கு வந்து அவளின் கண்பார்வையில், அவளின் கோலவிழிகளுக்கு எதிரே நின்று மனதார வேண்டிக்கொண்டால் போதும், தோஷங்கள் அனைத்தும் விலகும்; சந்தோஷங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

பக்தர்கள் தங்களுக்கு எவ்வளவு பெரிய பிரச்னை நேர்ந்தாலும், அம்மனின் காலடியில் பூட்டு வைத்து பூஜித்துவிட்டு, பிறகு இந்த வேலியில் பூட்டிவிட்டு, சாவியை அம்மனின் திருவடியில் வைத்துவிட்டால் பிரச்னைகள் தீரும் என்பது ஐதீகம். தீராத நோயுற்றவர்கள் கருவறையின் வெளியே உள்ள ஆமை புடைப்புச் சிற்பத்திற்கு ராகு காலத்தில் இளநீர் அபிஷேகம் செய்து, அர்ச்சனை, ஆராதனை செய்தால் நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து நோய் குணமாகும் என்பது ஐதீகம்.

Tags : Kolavijiyamman ,
× RELATED தோஷங்கள் விலகும்; சந்தோஷங்கள்...