×

கல்வராயன்மலையில் உள்ள சின்ன திருப்பதி கோயிலில் அடிப்படை வசதிகள்: பக்தர்கள் எதிர்பார்ப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் கல்வராயன்மலை சுற்றுலாத்தலத்திற்கு இணையான மலையாகும். மேலும் இந்த மலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையானுக்கு இணையான சின்னதிருப்பதி மலைக்கோயில் உள்ளது. இந்த கோயில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மிக பழமையான புராதனமிக்க கோயிலாகும். இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் கொடியேற்றப்பட்டு பெரிய  அளவில்  திருவிழா நடப்பது வழக்கம். இந்த கோயிலைப்பற்றி பல வரலாறுகள் உள்ளது. இதன் வரலாற்றை கூறுவோமேயானால் கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் உள்ள பெரிய திருப்பதியின் தம்பியான சின்னதிருப்பதி வேட்டையாடவும், சில பொருட்களை தேடியும் ஏழு மலையை கடந்து கல்வராயன்மலைக்கு வந்துள்ளார்.  கல்வராயன்மலையில் அவர் நின்ற இடங்களில் எல்லாம் மலை அதிர்ந்து ஆட்டம் கண்டுள்ளது. ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் மலை அமைதியாக இருந்துள்ளது. அந்த இடத்தில் சின்ன திருப்பதி தற்காலிகமாக தங்கி உள்ளார். அப்போது பெரிய திருப்பதி இருக்கும் மலையைவிட, சின்னதிருப்பதி தங்கி இருந்த மலை பெரியதாகவும் பொலிவுடனும் காணப்பட்டதால் இங்கேயே தங்கி விட்டதாகவும், அதன்பின்பு பாண்டிய மன்னன் இக்கோயிலை கட்டியதாகவும் வரலாறு கூறுகிறது. பாண்டிய மன்னன் இக்கோயிலை கட்டியதற்கான ஆதாரமாக கோயில் சுவர்களில் மீன் சின்னங்கள் உள்ளன. அதைப்போல சின்னதிருப்பதி கோயிலுக்கு அடியில் மலையடிவாரத்தில் சிறிய அம்பானது ஒரு பெரிய பாறையை தாங்கி நிற்பது  பக்தர்களை பிரமிக்க வைக்கிறது. அதாவது சின்னதிருப்பதி தங்கியிருந்த மலையடிவாரத்தில் மாமிசம் சமைத்துக்கொண்டு சிலர் அட்டகாசம் செய்ததாகவும், ஆத்திரமடைந்த சின்ன திருப்பதி பெரிய பாறையை உருட்டி விட்டதாகவும், அப்போது கோமதுரையான் அம்பால் உருண்டு வரும் பாறையை தடுத்து நிறுத்தியதாகவும் வரலாறு கூறுகிறது. அதைப்போல கல்லாநத்தம் அருகே அடிபெருமாள் கோயில் வரலாறு இன்னும் வித்தியாசமாக உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறகளூர்-பெரியேரி பகுதியில் இருந்து வரதராஜபெருமாள் சிலைகளை சின்னதிருப்பதி கோயிலில் வைக்க தலையில் சுமந்து எடுத்து வந்தனர். அப்போது தலை வலிக்கவே இப்போது கோயில் இருக்கும் இடத்தில் சிறிது நேரம் இறக்கி வைத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் சிலைகளை தலைக்கு தூக்கும்போது முடியவில்லை. சிலைகள் மிகவும் கனமாக இருந்தது. அப்போதுதான் இந்த சாமி இந்த இடத்திலேயே குடி கொண்டுவிட்டது என கருதி அங்கேயே மக்கள் அடிபெருமாள் கோயிலை கட்டினார்கள் என்றும் வரலாறு கூறுகிறது.        இந்த வரதராஜபெருமாள் மலைக்கோயிலை வழிபட்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்.  குடும்ப பிரச்னை தீரும். இதுபோன்ற பல்வேறு சிறப்புகளை உடைய சின்னதிருப்பதி எனும் வரதராஜபெருமாள் மலைக்கோயில்  கல்வராயன்மலையில் சிறப்பு வாய்ந்த கோயிலாகும். அதுமட்டுமில்லாமல் இந்த கோயில் தமிழக மக்களிடையே பிரசித்தி பெற்ற கோயிலாகும். பெரிய திருப்பதி கோயிலுக்கு போகமுடியாத பக்தர்கள் இங்கு வந்து வணங்கி செல்கின்றனர். இந்த சிறப்பு வாய்ந்த கோயிலில் பெரிய திருப்பதியைப்போல ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் கல்வராயன்மலையை சுற்றி உள்ள கிராம, நகர பகுதி மக்களும், கல்வராயன்மலை மக்களும் கோயிலுக்கு வந்து வணங்கி செல்வார்கள். ஐப்பசி மாதம் 5ந்தேதி சனிக்கிழமை அன்று பெரிய அளவில் திருவிழா நடக்கும். அப்போது பக்தர்கள் சுமார் ஒரு லட்சத்திற்குமேல் மலையை சுற்றி உள்ள ஒத்தையடி பாதைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை நடந்தே வந்து மொட்டையடித்தும், ஆடு, காளைமாடு, குதிரை, தங்கம், வெள்ளி, விளைபொருட்கள் போன்றவைகளை காணிக்கையாக செலுத்தியும் செல்வார்கள். கல்வராயன்மலையில் உள்ள சின்னதிருப்பதி கோயிலுக்கு பொட்டியம், மாயம்பாடி வழியாக ஏழு மலையை கடந்தும், சின்னசேலம்- கல்லாநத்தம் அடிபெருமாள் கோயில் வழியாகவும் அடர்ந்த காடு மற்றும் வனப்பகுதி வழியாகத்தான் கரடி, செந்நாய் போன்ற  காட்டு விலங்குகளையும் சமாளித்து சின்னதிருப்பதிக்கு வந்து செல்கின்றனர். வெள்ளிமலை வழிப்பாதை மட்டுமே இருசக்கர வாகனம் வரும் அளவுக்கு இருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். சேலம் மாவட்டத்தில் இருந்து செருவாச்சூர்-புதூர் வழியாக இக்கோயிலுக்கு வர பாதைகள் நல்ல நிலையில் உள்ளது. இந்த சாலையும் மேல்பாச்சேரிவரைதான் உள்ளது, இந்த சின்னதிருப்பதி கோயிலுக்கு செல்ல பாதை வசதிதான் இல்லை என்றால் கோயில் வளாகத்தில் போதுமான தண்ணீர் வசதி இல்லை. இந்த கோயில் உள்ள இடத்தில் நான்கு குளியல் அறைகள், நான்கு கழிப்பிட அறைகள் இருந்தால் போதுமானது. அதிக மழை வந்தால் பக்தர்கள் தங்கி செல்ல தகர ஷெட் வசதி இருக்க வேண்டும். மேலும் இந்த கோயிலுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து கார் போன்ற வாகனங்கள் வந்து செல்ல போதுமான அளவில் சாலைகள் போடப்பட்டால் பெரியதிருப்பதிக்கு செல்ல முடியாத கோவை, மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கட்டாயம் சின்னதிருப்பதிக்கு வந்து செல்வார்கள். ஆகையால் தமிழக அரசு இக்கோயிலை தத்தெடுத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதுடன், வரலாற்று சிறப்புடைய இக்கோயிலை பழமை மாறாமல், இடிந்துள்ள கோயில் கட்டிடங்களையும் புதுப்பிக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  …

The post கல்வராயன்மலையில் உள்ள சின்ன திருப்பதி கோயிலில் அடிப்படை வசதிகள்: பக்தர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Sinda Tirupati ,Temple ,Galvarayanhilai ,Kallakkurichi district ,Galvarayanmali ,Tirupati Ethumalaian ,Andhra ,Shinna Tirupati Temple ,Khalvarayanmountain ,
× RELATED மே 30-ல் பழனி கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம்