×

ரம்யமான வாழ்வருளும் ஸ்ரீராம நவமி

30-3-2023

திருமாலின் ‘‘ஓம் நமோ நாராயணாய’’ என்ற அஷ்டாட்சர மந்திரத்திலுள்ளராவும், தென்னாடுடைய சிவனாக திகழ்ந்து எந்நாட்டவருக்கும் இறைவனாம் பரமேஸ்வரனின் நமசிவாய என்கிற பஞ்சாட்சர மந்திரத்திலுள்ள மிகவும் சேர்ந்து அமைந்ததே ``ராம நாமம்’’. ராமனின் புகழை பாடுவோர் அனுமனின் அன்புக்கு பாத்திரமாகி விடுகின்றனர்.

அவர்கள் கேட்காமலேயே அவர்களுக்கு அனுமன் உதவி செய்ய ஆரம்பித்து விடுவார். ஆகையால் அனுமனின் அருளை வேண்டுவோர் ஸ்ரீராமரை ஆராதிப்பது மிகவும் அவசியம். பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில்தான் ராமர் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மனிதன், உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ``ஸ்ரீராமாவதாரம்’’. ராமர், அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர்.

அஷ்டமி, நவமி திதிகள் என்றாலே, எந்த ஒரு நல்லக் காரியத்திலும் இறங்காமல், இந்தத் திதிகளை மக்கள் ஒதுக்கவே, அவை இறைவனிடம் சென்று, ‘‘மக்கள் எங்களை ஒதுக்குகின்றனரே... நாங்கள் என்ன பாவம் செய்தோம்?’’ என்று வருந்தினவாம். அதற்கு கருணை வடிவே ஆன இறைவன் ‘‘உங்களுக்கும் ஏற்றம் தருகிறேன். அனைத்து மக்களும் உங்கள் இருவரையும் கொண்டாடச் செய்கிறேன்’’ என்று வாக்களித்தாராம்.

பகவான் உறுதியளித்தபடி, நவமி திதியில் ராமனாகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணனாகவும் அவதரித்து, மக்கள் அவ்விரு திதிகளையும் கொண்டாடச் செய்தாராம். ஸ்ரீராம நவமியை, வட மாநிலங்களில் பத்து நாள் கொண்டாடி மகிழ்கின்றனர். தென் பகுதியிலும் வைணவ ேக்ஷத்திரங்களில் உற்சவங்களோடு ராமநவமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர். பஜனைகள், ராமாயணச் சொற்பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவை தானமாக வழங்கப்படும்.

ராமநவமி அன்று கடைபிடிக்க வேண்டியவையும், பூஜை செய்யும் விதிமுறைகளும்

ஸ்ரீராம நவமியன்று வீடுகளில் மாவிலை கட்டி மாக்கோலம் போடவேண்டும். ராமநவமி அன்று விடியற்காலை எழுந்து நீராடி, பூஜை அறையை சுத்தம் செய்து அலங்கரித்து, பட்டாபிஷேக ராமர் படத்திற்கு பூச்சூடி, பொட்டு வைத்து பூஜைகள் செய்து. நிவேத்தியங்கள் படைத்து, ராம நாமம் சொல்லி பூஜிக்க வேண்டும்.
ஸ்ரீராமர் பிறந்தது, நன்றாக அனல் கொளுத்தும் வெயில் காலத்தில். எனவேதான் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடைபருப்பு, விசிறி போன்றவற்றைத் தானமாகக் கொடுப்பதுண்டு.

பூஜை கைங்கரியங்கள் செய்வதோடு, ஸ்ரீராம நாமம் ஜெபிப்பதும், ராம நாமத்தை பிறர் சொல்லைக் கேட்பதும், ஸ்ரீராமபிரானுடைய திருநாமத்தை எழுதுவதும் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும். ராமாயணம் படிக்க இயலாதவர்கள், ``ஸ்ரீராம.... ஸ்ரீராம..’’ என்று சொன்னாலே ராமாயணம் படித்த புண்ணியம் கிடைக்கும். அன்று, ஸ்ரீராமஜெயம் எழுதுவது, மற்றும் உபவாசம் இருப்பது இரண்டும், மிகமிக விசேஷம். அன்று ஒரு நாள் இதைச் செய்வது, 24 ஏகாதசி அன்று செய்வதற்குச் சமம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஸ்ரீராமநவமி உற்சவத்தை இந்த வருடமும் எல்லா உலகங்களுக்கும் நாயகனாக விளங்கும் அருள்மிகு ராமபிரான், சீதா தேவி, லட்சுமணருடனும், அருள்தரும் ருக்மணி சத்யபாமாவுடன் ஸ்ரீகிருஷ்ணருடன் குடிகொண்டுள்ள சென்னை, நங்கநல்லூர், ராம்நகரில் அமைந்துள்ள ``அருள்மிகு ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில் லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு யாகப் பெருவிழா நிகழ்ச்சியும், மிக விமர்சையாக கொண்டாடப்பட
இருக்கிறது.

இங்கு அருள் வழங்கும் அருள்மிகு கோதண்டராம சுவாமிக்கு லட்சார்ச்சனையும், சிறப்பு யாகமும், பங்குனி மாதம் 9-ஆம் நாள் (23.03.2023) வியாழன்கிழமை முதல் பங்குனி 17-ஆம் நாள் (31.03.2023) வெள்ளிக்கிழமை வரை பின்வரும் நிகழ்ச்சி நிரல்கள் நடைபெற  உள்ளது.

லட்சார்ச்சனை, ஸ்ரீகோதண்டராமருக்கு சந்தனக்காப்பு அலங்காரம், கோதண்டராமருக்கு பால் அபிஷேகம். ஸ்ரீசீதாராம திருக்கல்யாண உற்சவம், யாக சாலை
பூர்வாங்கம் ஸ்ரீராமநவமி ஸுதினம், திருமஞ்சனம், மஹா பூர்ணாஹுதி, கலசாபிஷேகம், சிறப்பு மலர்களால் அலங்காரம், லட்சார்ச்சனை பூர்த்தி, சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி புறப்பாடு.

தொகுப்பு: குடந்தை நடேசன்

Tags : Sri Rama Navami ,
× RELATED ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?