×

சனிப் பெயர்ச்சி பரிகாரத் தலங்கள்

29-3-2023

திருநள்ளாறு சனிபகவான்

காரைக்கால் அருகே  உள்ளது திருநள்ளாறு. நளச் சக்ரவர்த்தியின் ஏழரை நாட்டு சனி விலகிய தலம். இங்குள்ள நள தீர்த்தத்தில் குளித்தெழுந்து, ‘நள்ளாறா’ எனக் கூறினால் நம்  வினைகள் நாசமடையும். மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர் சந்நதிக்குச் செல்லும் வழியில் தனிசந்நதியில் அமைப்பில் அமர்ந்து அருளாட்சி செய்கிறார்  சனிபகவான். விசேஷ நாட்களில் ‘தங்க காகம்’ வாகனத்தில் அவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகிறார். நளன், தமயந்தி, ருதுபர்ணன் என்ற ராஜரிஷி, கார்க்கோடகன் பாம்பு போன்றவர்களுக்கு சோதனைப் படிப்பினையையும்  பிறகு நிம்மதியான வாழ்க்கையையும் நல்கியவர். இந்த தலத்திற்கு வந்து வணங்குபவர்களுக்கு சனி பாதிப்பைத் தாங்கிக்கொள்ளும் மனதிடமும்,  பிரச்னைகளிலிருந்து மீளும் வழியும் கிட்டும். நல்வாழ்வுக்கும் வழி  பிறக்கும்.

பொழிச்சலூர் சனிபகவான்

சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூரில் உள்ளது அகஸ்தீஸ்வரர் ஆலயம். இத்தலத்தில் சனிபகவான் மிகவும் வரப்ரசாதியாய் வீற்றிருக்கிறார். சனீஸ்வர  பகவானே இத்தல இறைவனை பூஜித்து இங்குள்ள நள்ளார் தீர்த்தத்தில் நீராடி தன் தோஷம் நீங்கப் பெற்றதாக ஐதீகம். எனவே, இத்தலம் வடதிருநள்ளாறு என  அழைக்கப்படுகிறது. திருநள்ளாறுக்குச் சென்று பரிகாரம் செய்ய இயலாதவர்கள் இத்தல சனீஸ்வரனுக்கு அந்த பரிகாரங்களைச் செய்கின்றனர்.

சென்னை பூந்தமல்லி

சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் ஆலயத்தில் சனிபகவான் விசேஷமாக அருள்கிறார். இவரை வழிபட்டால் சனிபாதிப்புகளிலிருந்து, குறிப்பாக நோய் உபாதைகளிலிருந்து தப்பலாம் என்பார்கள்.

மேற்கு மாம்பலம் சனிபகவான்

சென்னை மேற்கு  மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் அருளாட்சிபுரிந்து வருகிறார் சனி பகவான். சனீஸ்வர பகவான் சாந்தமூர்த்தியாக காக வாகனத்தில் அமர்ந்து நீலாம்பிகையுடன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். சனிபகவானின் தாக்கத்திலிருந்து விடுபட, இத்தலத்தில் பஞ்சமுக அனுமார், யக்ஞ விநாயகர் போன்றோரும் அருள்கின்றனர்.

மொரட்டாண்டி சனிபகவான்

விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த மொரட்டாண்டி கிராமத்தில் 27அடி உயர பஞ்சலோக விக்ரகமாய் ஒரு கரத்தில் வில், மறுகரத்தில் அம்பு, மற்ற இரு கரங்கள் அபய, வரத முத்திரையோடு சனிபகவான் அருள்கிறார். சனிபகவானுக்கு எதிரே 54அடி உயர  விநாயகர், 12 ராசிகளையும் தன்னுடலில் கொண்டு நிறுவப்பட்டுள்ளார். இந்த அமைப்பு சனிபகவானின் உக்ரத்தைத் தணிக்கும் வகையில் உள்ளது.     

திருநறையூர்

தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோயிலில் உள்ள ராமநாதசுவாமி ஆலயத்தில் சனீஸ்வர பகவான் தன் இரு மனைவியரான மந்தா தேவி, ஜேஷ்டா தேவியுடனும், மாந்தன், குளிகன் எனும் இரண்டு மகன்களுடனும் குடும்ப சமேதராய் மேற்குத் திசை நோக்கி தரிசனமளிக்கிறார். மூலவருக்கு இல்லாத கொடிமரமும் பலிபீடமும் சனி பகவானுக்கு உண்டு. காக வாகனத்துடன் காட்சி தரும் இத்தலம் சிறந்த சனிபரிகாரத் தலமாக கூறப்படுகிறது. தசரதர் தனக்கு ஏற்பட்ட தோஷத்தை இத்தல சனிபகவானை வணங்கி போக்கிக் கொண்டதாக ஐதீகம். தந்தை வழிபட்டதால் ராமச்சந்திரமூர்த்தியும் இத்தலம் வந்து சனி பகவானையும் ஈசனையும் வணங்கினார். அதனால் இத்தல ஈசன், ராமநாதசுவாமி ஆனார்.

வழுவூர்

சோழ மன்னன் ஒருவர் இப்பகுதியை அரசாண்டபோது சனிபகவானின் சஞ்சாரம் காரணமாக நாட்டில் கடும்பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த மன்னன் சனிபகவானை நோக்கித் தவமிருந்து நாட்டில் பஞ்சம் வராத வரத்தைப் பெற்றார். அவர் வழிபட்ட சனிபகவான், மேகத்தைத் துளைத்து மழைபொழிய வைத்தாராம். அதை நிரூபிக்கும் வகையில் அவர் கையில் வில்லுடன் அற்புதமாக காட்சி தருகிறார்.

எட்டியத்தளி

 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது எட்டியத்தளி. அகத்திய மாமுனிவர் காசி விஸ்வநாதரை வணங்கி விட்டு இத்தலம் வந்தார். அதே சமயம் அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டிருந்த தொண்டை மண்டல மன்னன் காளிங்கராயன் சனிதோஷம் நீங்க திருநள்ளாற்றுக்கு இந்த வழியே வந்தார். இருவரும் சந்தித்தனர். அஷ்டம சனிக்கு பரிகாரமாக அகஸ்தியர் தான் பூஜித்த அகத்தீஸ்வரருக்கும், அகிலாண்டேஸ்வரிக்கும் அந்த இடத்தில் ஓர் ஆலயம் எழுப்பி வழிபடச் சொன்னார். மேலும் நவகிரகங்களையும் பிரதிஷ்டை செய்யுமாறும் ஈசனின் ஈசான பார்வை சனி பகவான் மீது படும் வண்ணம் அமைக்குமாறும் கூறினார். இத்தலம் சனிதோஷ பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.

குருமந்தூர்

ஈரோடு மாவட்டம் கோபி வட்டம், குருமந்தூரில் உள்ளது திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம். நாகை மாவட்டம் காரைக்காலில் உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனி பகவானுக்குச் செய்வது போலவே எல்லா வழிபாடுகளும் இங்கும் செய்யப்படுகின்றன. இவரும் அனைத்து சனி தோஷங்களையும் தணித்து நல்வாழ்வு மலர அருள்கிறார்.

கல்பட்டு சனிபகவான்

விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது கல்பட்டு. இத்தலத்தில் பெரிய திருவுருவாக 21 அடி உயரத்தில், தன் வலது காலைத் தன் வாகனமான காகத்தின் மீது வைத்த நிலையில் கம்பீரமாக சனிபகவான் எழுந்தருளியிருக்கிறார். இங்கு பலிபீடம் இல்லை. சனிபகவான் சாந்தமான வடிவத்துடன் காட்சி தருகிறார்.

குச்சனூர் சனிபகவான்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ளது குச்சனூர். இங்கு சனிபகவான் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். கல்தூணாக பூமியில் இருந்து தோன்றிய இவருக்கு மஞ்சள் காப்பு சாத்துகிறார்கள். சூர்யநாராயணனின் மகன் என்பதால் நாமமும், ஈஸ்வரப் பட்டம் பெற்றி ருப்பதால் விபூதியும் அணிவிக்கிறார்கள். நீதி வழங்குவதிலும், வயிற்றுநோய் தீர்ப்பதிலும் நிகரற்றவர் இந்த குச்சனூர் சனீஸ்வரர்.

ஆதம்பாக்கம் விஸ்வரூப ஸர்வ மங்கள சனிபகவான்

சென்னை ஆதம்பாக்கம் ஈ.பி.காலனியில் உள்ளது நாகமுத்து மாரியம்மன் ஆலயம். இங்கு சனிபகவான் விஸ்வரூப ஸர்வ மங்கள சனி என்ற திருநாமத்துடன் தன்னை தரிசிக்கும் பக்தர்களின் வாழ்வில் மங்களங்களை வாரி வாரி வழங்குகிறார். சுமார் ஏழடி உயரத்தில் காக வாகனத்தோடு கம்பீரமாக வீற்றிருக்கும் இவரை சனிக்கிழமைகளில் எள் விளக்கேற்றி வணங்கிவர வாழ்வில் வளம் பெருகச் செய்கிறார் என பக்தர்கள் நம்புகின்றனர்.

திருக்கோடிக்காவல் பாலசனிபகவான்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சூரியனார் கோயிலிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இத்தலம். இத் தலத்தில் சனிபகவான் குழந்தை வடிவில் தரிசனமளிக்கிறார். எந்த ஜீவராசிகளையும் நான் பார்த்தால் அதனால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அப்பாவம் கரைய கோடீஸ்வரன் முன் அமர்கிறேன் என சனிபகவான் அரைக்கண்ணை மூடிய நிலையில் யோக நிலையில் அபூர்வ திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார்.

சோழவந்தான் சனிபகவான்

மதுரையிலிருந்து 27 கி.மீ தொலைவிலுள்ள சோழவந்தானிலிருந்து குருவித்துறைக்குப் போகும் பாதையில் சுமார் முக்கால் கி.மீ. தொலைவில் சனிபகவான் ஆலயம் உள்ளது. சுமார் 50 வருடங்களுக்கு முன் ஊர்மக்கள் முருகனுக்கு ஆலயம் அமைத்து வழிபட எண்ணினர். அப்போது அவ்வூரில் ஆற்றில் கிடைத்த சுயம்பு சிலையை காஞ்சி மகாமுனி அது சனிபகவான் சிலை என்று அடையாளம் அறிந்து சொல்லி, அந்த ஊரில் நிறுவி வழிபடுமாறு ஆசியளித்தார்.  தனது மேல் வலது, இடது கரங்களில் ஆயுதங்கள் தரித்து கீழ் வலது கரம் அபய ஹஸ்தமாகவும், கீழ் இடது கரத்தில் கதாயுதம் ஏந்தியும், காக வாகனத்துடன் நின்ற நிலையில் தரிசனமளிக்கிறார். இத்தலம் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பரிகாரத் தலமாக போற்றப்படுகிறது.  

அருங்குளம்

திருவள்ளூர் - திருத்தணி வழித்தடத்தில் திருவள்ளூரிலிந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது அருங்குளம். இங்கு அருளும் அகத்தீசர், சனிபகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்டவர். இவரை தரிசித்தால் சனிபாதிப்புகளிலிருந்து விடுபடலாம் என சனிபகவானே ஈசனிடம் வரம் பெற்றதாக ஐதீகம்.

ஸ்ரீவைகுண்டம்

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஸ்ரீவைகுண்டம் உள்ளது. இதில் நவகைலாயங்களில் ஒன்றான கைலாசநாதர் ஆலயம் உள்ளது. சனிபகவானின் அம்சமாக ஈசன் அருளும் இத்தலத்திற்கு வந்து ஈசனை வழிபட, சனிபகவானால் ஏற்படும் திருமணத் தடைகள் விலக, மனம்போல மாங்கல்யம் கிடைக்கிறது. இழந்த சொத்துகளும் இந்த இறைவன் அருளால் திரும்பக் கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.

இடும்பாவனம்

முத்துப்பேட்டையில் இருந்து  வேதாரண்யம் செல்லும் பாதையில் உள்ளது இத்தலம். இங்கும் தாம் மக்களைத்  துன்புறுத்தியதால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிக் கொள்ள இத்தலத்து ஈசனை சனி  பகவான் வழிபட்டிருக்கிறார். ஆகவே இந்தத் தலமும் சனிதோஷப் பரிகாரத் தலமாக  வழங்கப்படுகிறது.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?