×

கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்க அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு..!!

சிவபெருமானின் எத்தனையோ வடிவங்கள்... அவை அனைத்துமே எல்லா ரூபங்களுமே மக்களுக்கு பயன் தரும் வாழ்வியல் தத்துவங்களைப் போதிக்கின்றன. அப்படி நம் வாழ்க்கையில் சிவனார் போதித்ததுதான் ஆணும் பெண்ணும் சமம் எனும் தத்துவம்.

சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவமில்லை எனும் போதனையை நமக்கு வழங்கியதை இன்னும் உணர்த்துவதற்காகத்தான் தன் இடபாகத்தை உமையவளுக்குத் தந்தார் சிவனார். சிவபெருமானுக்கு சக்தியாகவும் உலகுக்கே சக்தியாகவும் திகழ்ந்தார். அதை உணர்த்துகிற வடிவம்தான் அர்த்தநாரீஸ்வர திருவடிவம்.

அர்த்தநாரீஸ்வரர் எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டிருக்கும் ஆலயங்கள் மிகக்குறைவுதான். அவற்றில் மிக முக்கியமான திருத்தலம் திருச்செங்கோடு கோயில். அழகிய மலையின்மீது அமைந்துள்ள அற்புதமான திருத்தலம் இது. தேவாரப் பாடல் பெற்ற தலம் இது.

கோடு என்றால் மலை என்றும் மலையுச்சி என்றும் அர்த்தம். செங்கோடு, செங்குன்றம், செம்மலை என பல பெயர்களுடன் திகழ்கிறது திருச்செங்கோடு. செவ்வண்ணக் கல்லால் அமைந்த செங்கோட்டு மலை என்று அறியலாம்.

செங்கோட்டின் பெரிய மலைமுகடு நாகமலை என்றும், சிறிய முகடு நந்திமலை என்றும் அழைக்கப்படுகிறது. திருச்செங்கோடு மலையை நாகாசலம், நாகமலை, நாககிரி, உரககிரி என்றும் சொல்வார்கள். மலையின்மீது ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயில் ஒருபுறமும், ஸ்ரீபாண்டீஸ்வரர் கோயில் இன்னொரு பக்கமும் உள்ளது. அடிவாரத்தில் செங்குன்றூரின் நடுவே ஸ்ரீகயிலாசநாதர் கோயில் உள்ளது. ஆக, இங்கே, இந்தத் தலத்தில் மூன்று சிவாலயங்களை தரிசிக்கலாம்.

திருப்பைஞ்ஞீலி, திருஈங்கோய்மலை முதலான தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி வழிபட்ட ஞானசம்பந்தர், வழியெங்கும் பல தலங்களை தரிசித்து வழிபட்டபடியே, திருச்செங்கோட்டுக்கு வந்தார். சிவனாரை தரிசித்து பதிகம் பாடியவர், அடுத்து திருநணா என்கிற பவானிக்குச் சென்றுவிட்டு, மலையின் மீதும் இறைவனின் மீது கொண்ட ஈர்ப்பால், மீண்டும் திருச்செங்கோடு வந்து தங்கினாராம். அத்தனை அழகும் கம்பீரமும் வாய்ந்தது இந்த மலை என வர்ணிக்கிறது ஸ்தல புராணம்!

மலையடிவாரத்தில் இருந்து செல்ல, அதாவது நகரின் நடுப்பகுதியில் இருந்து படிக்கட்டுகள் உள்ளன. அதேபோல், ஊருக்குக் கிழக்கே உள்ள சாலையில் இருந்து மலையுச்சிக்கு வாகனங்களில் செல்வதற்குச் சாலை வசதி உண்டு. படிகளின் வழியே செல்லும்போது பெரிய மலைக்கும் சிறிய மலைக்கும் இடையே அமைந்துள்ள நாகர்பள்ளம் எனும் இடத்தைப் பார்க்கலாம்!

இங்கே, ஆதிசேஷன் ஐந்து தலைகளையும் விரித்துப் படமெடுத்த நிலையில் லிங்கத் திருமேனியைச் சுமந்துகொண்டிருக்கும் 60 அடி நீளச் சிற்பக் காட்சியைக் கண்டு பிரமித்துப் போய்விடுவோம்! இந்த நாகத்தின் மீது குங்குமம் தூவி வழிபடுகின்றனர். நாக தோஷம் உள்ளவர்கள், சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

அடுத்ததாக இருக்கிற அறுபதாம் படியில் பிணக்குகள், வழக்குகள் உள்ளோர் சத்தியம் செய்து, தங்கள் பகையை முடிப்பதும் வழிவழியாக இருக்கிறது! திருச்செங்கோடு திருத்தலம், சென்னை நங்கநல்லூரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் முதலான தலங்களுக்குச் சென்று தரிசித்து வழிபடுங்கள்.

அர்த்தநாரீஸ்வரர் திருவுருவப் படத்தை வைத்து வேண்டிக்கொண்டால்,. கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். அர்த்தநாரீஸ்வர ஸ்லோகம் பாராயணம் செய்து, மனதார பிரார்த்தனை செய்துகொண்டால், மங்கல காரியங்கள் தடையின்றி நடந்தேறும்.

Tags : Arthanareeswarar ,
× RELATED கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்க அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு..!!