×

செழிப்பான வாழ்வருளும் செல்லியம்மன்

சென்னை-வேளச்சேரி பகுதியில், மூன்று கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஒன்று, தண்டீஸ்வரம் கோயில், இங்கு சிவன் அருள்பாலிக்கிறார். மற்றொன்று, யோக நரசிம்மர் கோயில், மூன்றாவது, பிடாரி செல்லியம்மன் கோயில். இந்த கோயிலை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்கவிருக்கிறோம்.
இந்த மூன்று கோயில்களுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன.

* பல்லவ காலத்தில் கட்டப்பட்ட கோயில்களாகும்.

* மூன்று கோயில்களும் அருகருகே இருப்பதும், ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட கோயில்களாகவும் காணப்படுகின்றன. வேளச்சேரி, தண்டீஸ்வரம் சிவன் கோயில் எதிரே அழகிய கட்டிட வேலைப் பாடுகளுடன், ``அருள் மிகு பிடாரி செல்லியம்மன்’’ திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், சாமுண்டேஸ்வரி, பிரம்மி, வாராஹி, வைஷ்ணவி, மகேஸ்வரி, கௌமாரி, இந்திராணி ஆகிய சப்தமாதர்கள் அருள்பாலிக்கிறார்கள். உற்சவராக, பிடாரி செல்லியம்மன் அருள்கிறாள். இவர்களுடன், விநாயகரும் இருப்பது கூடுதல் சிறப்பு. மேலும், தட்சிணாமூர்த்தி, காவல்தெய்வங்கள், நவகிரகங்கள் ஆகியவை தனித்தனி சந்நதிகளாக இருந்து பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார்கள்.  

கிராம தேவதை

அருள்மிகு பிடாரி செல்லி யம்மன், வேளச்சேரிக்கு எல்லை அம்மனாக இருந்தருளுகிறாள். அதனால், அம்மை, காலரா போன்ற நோய்களுக்கு இந்த அம்மனையே வழிபடுகிறார்கள் இப்பகுதி மக்கள். மேலும், ஊர் மக்களுக்கு காத்து கருப்பு அண்டவிடாமல் காத்தருளுகிறாள். அதுமட்டுமின்றி, செழிப்பான வாழ்வு பெற செல்லியம்மனை வேண்டிக் கொள்கிறார்கள், பிற பகுதியை சேர்ந்த பக்தர்கள். வேண்டிய சிறிது நாட்களிலேயே வாழ்வில் மாற்றம் நிகழ்வதாக, அனுபவபூர்வமாக பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில், ராகு காலத்தில் விளக்கு ஏற்றுவது இங்கு விசேஷமாகும்.

வரங்களை தரும் வாராஹி அம்மன்

இங்கு, பிரதானமாக செல்லியம்மன் இருந்தாலும், வாராஹி அம்மனை வழிபடுவோர் அதிகளவில் காணப்படுகின்றன. திருமணத் தடை, வீடு, மனை வாங்க நினைப்போர், வேலைவாய்ப்பு போன்ற காரிய சித்திக்கு வாராஹியை வேண்டிக் கொண்டு, 21 மஞ்சள் அல்லது 21 எலும்பிச்சை ஆகியவற்றை கையினால் கட்டி வாராஹிக்கு மாலையாக சாற்றி வழிபட்டால், காரியங்கள் நிறைவேறுவதாக இங்கு பூஜை செய்யும் பூசாரி தெரிவித்தார். மேலும், வெள்ளிக்கிழமை அன்று நினைத்த காரியங்கள் ஜெயமாக, எலும்பிச்சை பழத்தை வாராஹி அம்மனின் பாதத்தில் வைத்து வேண்டிக்கொண்டு, அதை பெற்று வீட்டினுள் இருக்கும் பூஜை அறையிலோ அல்லது வீட்டின் வாசல் பகுதியிலோ கட்டியும் வைக்கலாம்.

தித்திக்கும் திருவிழா

திருவிழாவின் போது, செல்லியம்மன் (உற்சவர்) வேளச்சேரி பகுதி முழுவதிலும் திருவீதி உலா நடைபெறுகின்றன. காந்தி ரோடு, தண்டீஸ்வரம் பகுதி மற்றும் வேளச்சேரியில்  இருக்கும் சுமார் 25 தெருக்களுக்கு செல்லியம்மன் திருவீதி உலா வருகிறாள். அவளை வரவேற்று, அனைத்து பக்த அன்பர்களும் ஒன்றுகூடி, வாணவேடிக்கை வெடித்து திருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றன.

விருப்பப்பட்டு நிற்கும் அம்மன்

திருவிழாவின் போது, வீதி வீதியாக சென்று அருளும் செல்லியம்மன், திடீர்ரென்று சில வீடுகளின் முன்னாள் நின்றுவிடுகிறாள். அந்த வீட்டின் உரிமையாளர், அம்மனுக்கு அதிரசம், முறுக்கு போன்றவற்றை படையலிட்டு, ஆரத்தி எடுத்த பிறகே, அம்மன் மீண்டும் தன் பயணத்தை தொடர்கிறாள். இது செல்லியம்மனின் ஆசீர்வாதமாக பார்க்கப்படுகிறது.

 விசேஷ நாட்கள்

* ஆடிமாதம் ஏழாவது வாரம் திருவிழா நடைபெறும். அன்று, மாலை சுமார் 8.00 மணியளவில், செல்லியம்மன் வேளச்சேரி பகுதி முழுவதும் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்கிறாள். அதன் பிறகு மறுநாள் காலை, 5.00 மணியளவில் திருக்கோயிலுக்கு வந்தடைவாள் செல்லியம்மன்.

* ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தமிழ் புத்தாண்டு ஆகிய நாட்களில், செல்லியம்மனுக்கு சந்தன அபிஷேகம், சந்தன அலங்காரம் மற்றும் விஷேச அலங்காரங்கள் செய்யப்பட்டு, கோயினுள் உள்ள ஊஞ்சலில் அமரவைப்பார்கள். அதனை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

* நவராத்திரி அன்று காலையிலும், மாலையிலும் என இரு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பிரசாதங்கள், பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. அதேபோல், ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன (சப்தமாதர்கள்).

* மார்கழி மாதத்தில் காலை 5.00 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

நேரம் - எப்படி செல்வது

காலை: 6.00 முதல் 10.00 வரை, மாலை 4.00 முதல் 8.00 வரை சென்னை கோயம்பேட்டிலிருந்து வேளச்சேரிக்கு பேருந்துகள் உள்ளன. அதில் ஏறி தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இந்த கோயிலுக்கு செல்லலாம்.

தொகுப்பு: ரா.ரெங்கராஜன்

Tags : Chelliyamman ,
× RELATED 2 கோயில்களின் உண்டியலை உடைத்து ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை