×

காங்கயம் அருகே வட்டமலையில் சிதிலமடைந்து காட்சியளிக்கும் கோயில் தேர்-10 ஆண்டாக நின்று போன தேரோட்டம்

காங்கயம் :  காங்கயம் அருகே வட்டமலை முத்துக்குமாரசாமி கோயில் தேர் சிதிலமடைந்து காட்சியளிக்கிறது. இதையடுத்து தேரை சீரமைத்து 10 ஆண்டாக நின்று போன தேரோட்டத்தை மீண்டும் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே தாராபுரம் ரோட்டில் 8 கிமீ தூரத்தில் வட்டமலை மீது முத்துக்குமாரசாமி கோயில் அமைந்துள்ளது. சுமார் 1,600 ஆண்டு பழமை வாய்ந்த இக்கோயில், சேர மன்னர்களால் கட்டப்பட்டதாகவும், இங்கு கொங்கண சித்தர் வழிபட்டதாகவும், அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் எனவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.இக்கோயிலில் புரட்டாசியில் நவராத்திரி விழாவும், ஐப்பசியில் சூரசம்ஹார விழாவும், கார்த்திகையில் தீபத்திரு விழாவும், பங்குனி உத்திர தேரோட்ட நிகழ்வும் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. பங்குனி உத்திர தினத்தில் நடக்கும் தேரோட்டத்தில், முத்துக்குமாரசாமி தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் வட்டமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து வந்தனர்.கடந்த 10 ஆண்டு முன்புவரை தேரோட்டம் நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது கோயில் திருத்தேர் முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகிறது.  இதனால் காலம் காலமாக தொன்று தொட்டு நடந்த தேரோட்ட திருவிழாவும் நடத்த முடியாமல் தடைபட்டு நின்று விட்டது. இது பக்தர்களின் மனதில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பக்தர்கள் தரப்பில் மேலும் கூறுகையில், ‘‘வட்டமலை முத்துகுமாரசாமி கோயில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதிக வருமானம் வரும் ஏராளமான கோயில்கள் தமிழகத்தில் உள்ளன. அது போல பெரும் வருமானம் வரும் கோயில்களிலிருந்து நிதியை பெற்று வருமானம் குறைந்த இதுபோன்ற கோயில்களின் திருப்பணி, திருத்தேர் புனரமைப்பு மற்றும் இதர பணிகளுக்கு பயன்படுத்தினால் கோயில்களில் அன்றாட பூஜைகள் மற்றும் ஏனைய நிகழ்வுகள் தடையின்றி நடக்கும். இந்த கோயில் பழனி முருகன் கோயில் போல மேற்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பாகும். எனவே சிதிலமடைந்து காணப்படும் வட்டமலை கோயில் திருத்தேருக்கு பதிலாக புதிய தேரை உடனடியாக நிர்மாணித்து தேரோட்ட திருவிழா நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளனர்.அதிக வருமானம் வரும் கோயில் நிதியில் இருந்து, வருமானம் இல்லாத கோயில்கள், திருத்தேர், புனரமைப்பு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும் எனவும், அப்போது தான் அனைத்து கோயில்களிலும் பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் தடையின்றி நடக்க வாய்ப்பு உண்டாகும் எனவும் பக்தர்கள் தரப்பில் எழுந்துள்ள நியாயமான கோரிக்கையை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்பதே அனைவரின் நம்பிக்கையாக உள்ளது….

The post காங்கயம் அருகே வட்டமலையில் சிதிலமடைந்து காட்சியளிக்கும் கோயில் தேர்-10 ஆண்டாக நின்று போன தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Vrampalayas ,Kangangayam ,Vattamalai Muthukkumarasamy Temple ,Kangayam ,Chore ,Rhampalayas ,
× RELATED காங்கயம் அருகே வட்டமலையில்...