×

அஷ்ட பைரவத் தலங்கள்

காசி நகரத்து அஷ்ட பைரவர்கள்

காசியில் அஷ்ட பைரவர்கள் எழுந்தருளியுள்ளனர். அனுமன் காட்டில் ருரு பைரவரும்; துர்கா மந்திரில் சண்ட பைரவரும்; விருத்த காளேஸ்வரர் ஆலயத்திலுள்ள அமிர்த குண்டத்திற்கு முன்புறம் அஜிதாங்க பைரவரும், லட் பைரவர் கோயிலில் கபால பைரவரும், காமாச்சாவில் வடுக பைரவர் எனும் பெயரில் குரோதன பைரவரும் தேவரா கிராமத்தில் உன்மத்த பைரவரும்; திரிலோசன கஞ்ச் (பாட்டன் தர்வாஜாவிற்குப் பக்கத்தில்) சங்கார பைரவரும் எழுந்தருளியுள்ளனர். எட்டாவதான பீஷண பைரவர் காசிபுராவில் இருக்கின்றார். இவரைப் பூத பைரவர் என்று அழைக்கின்றனர். இவர்களைச் சென்று தொழுவது அஷ்ட பைரவ யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.

சீர்காழி அஷ்ட பைரவர்

சீர்காழியில் தெற்குப் பிராகாரத்தில் வலம்புரி மண்டபம் என்ற மண்டபம் உள்ளது. இது யோக ஸ்தானம் என்றழைக்கப்படும். இதில் எட்டு பைரவர்கள் எழுந்தருளியுள்ளனர். இவர்கள் முறையே 1. சுதந்திரர் 2. சுயேச்சர் 3. லோகர் 4. காலர் 5. உக்ரர் 6. பிரச்யர் 7. நிர்மாணர் 8. பீஷ்ணர் என்று அழைக்கப்படுகின்றனர்.

குற்றாலம் அஷ்ட பைரவர்

குற்றாலம் சித்திர சபையில் அஷ்ட பைரவரின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை கலையழகு மிக்கதாகும்.

நகரத்தார் சீமை அஷ்ட பைரவர்

நகரத்தார் சீமையிலுள்ள திருப்பத்தூர், பிள்ளையார்பட்டியை அடுத்துள்ள வைரவன்பட்டி, அழகாபுரி, பெருச்சிக் கோயில், திருமெய்ஞ் ஞானபுரம் வைரவன்பட்டி, காரையூர், நெடுமரம், இலுப்பைக்குடி என்ற எட்டும் அஷ்ட பைரவத் தலங்களாகும்.

நள்ளிரவு வழிபாடு

பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்தக் காலத்தில் பராசக்தி பைரவி என்னும் பெயரில் நடமாடுகிறாள். அவளுடன் பெருமான் பைரவனாக வீற்றிருக்கின்றார். பரம ஞானிகளும் யோகிகளும் தமது தூக்கத்தை விடுத்து அந்த வேளையில் தியானத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றனர். அபிராமிபட்டர், ‘‘யாமம் பைரவர் ஏத்தும் பொழுது’’ என்று பாடுகிறார். தொடர்ந்து விழிப்புணர்வோடு வேண்டுபவருக்கு நள்ளிரவில் திருவடி தரிசனம் தருபவள் பைரவி என்று அருளுவதும் இங்கு எண்ணத்தக்கதாகும். (யாமம் - நள்ளிரவு). சீர்காழியில் வடுகநாதருக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவின் சிறப்பு வழிபாடு செய்யப்படுவது குறிக்கத்தக்கதாகும்.

தொகுப்பு- எஸ்.கிருஷ்ணஜா

Tags :
× RELATED கருடன் கருணை