×

விளக்கில் விளங்கும் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வெறுமையாக உள்ள ஒரு வீட்டை பொன்னையோ, பொருளையோ கொண்டு நிரப்பலாம். அதற்குச் செலவு அதிகம். எளிமையாக ஒரு சிறிய பொருளைக் கொண்டு நிரப்ப வேண்டுமெனில், விளக்கினை ஏற்றி வைத்தால் போதும். அந்த விளக்கொளியால் வீடு நிரம்பும். ஒளியில்லாமல் எதையும் அறியமுடியாது. ஒரு பொருளைக் காண கண்மட்டுமே போதாது. இருளில் கண்பார்வை தெரிந்தாலும் எந்தப் பொருளும் புலப்படாது. ஆகவே, பார்வையிருந்தாலும், பார்ப்பதற்கு ஒளியே உதவிசெய்கிறது. உலகத்தைக் காணவும் ஒளியே உதவுகிறது.

இதனை திருமூலர், “விளக்கினை ஏற்றி வெளியே அறிமின்’’ என்று விளக்குகிறார். பொய்யும் அறியாமையும் இருளாகும். அந்த இருளைப் போக்கி அருள்தரும் விளக்கொளியால், உண்மையும் இனிமையும் ஏற்படும் என்பதை, “உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே இனிமை உண்டாகும்” என்று பாடும் பாரதியார், உண்மையை ‘ஒளி’ என்று உணர்த்துகிறார்.

திருவள்ளுவரோ, பொய்யாமையை ‘பொய்யா விளக்கு’ என்று போற்றுகிறார். புரியாத ஒன்றை புரிய வைப்பதற்கு ‘விளக்குதல்’ என்றும் ‘விளக்கம் தருதல்’ என்றும் விளக்கை அடிப்படையாகக் கொண்டே குறிப்பிடுவது வழக்கம். உலகத்தின் இருளைச் சூரிய சந்திரனும், வீட்டின் இருளை விளக்குகளும் விலக்குகின்றன. இறைவழிபாட்டின்போதும் இனிய விழாக்களின் தொடக்கத்திலும் விளக்கை ஏற்றி வழிபடுவது நம் மரபாக உள்ளது. ஆயிரம் மின்விளக்குகள் சுடர்விடும் இக்காலத்திலும், திருவிளக்கு ஏற்றி வைத்தே நிகழ்ச்சிகளைத் தொடங்குவது தொடர்ந்துகொண்டே வருகிறது. இறைவனை வழிபடுவதில் மட்டுமல்லாது விளக்கையே இறைவனாக வழிபடும் முறையே ‘திருவிளக்கு வழிபாடு’ ஆகும்.

இந்த வழிபாட்டிற்கு அர்ச்சகரின்றி அவரவரே செய்து கொள்ளலாம். அவ்வகையில் பல இடங்களில் பெண்களே திருவிளக்கு வழிபாட்டை மேற்கொள்கிறார்கள். விளக்கிற்கென்று ஒரு விழா கொண்டாடப்படுவதே ‘திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆகும். இந்த விழாவைக் கொண்டாட ஒரு வரலாறு உண்டு.திருமகளின் நாயகரான திருமாலும் கலைமகளின் நாயகரான பிரம்மனும் தங்களில் யார் பெரியவர்? என்பதே நிலைநாட்ட முற்பட்டனர். அதற்கு சிவபெருமானின் முடியை பிரம்மனும் அடியை திருமாலும் காண விளைந்து, யார் முதலில் காண்கிறார்களோ அவர்களே பெரியவர் என்ற போட்டி நடந்தது. அப்போது சிவபெருமான், ஜோதிவடிவமாக நின்றார்.

அப்படி நின்ற இறைவனை இருவராலும் காண முடியவில்லை. அதாவது, கல்வியாலும் செல்வத்தாலும் கடவுளைக் காண முடியாது என்பது பொருள். அப்படி சிவபெருமான் ஜோதிவடிவாக நின்ற நாளையே திருக்கார்த்திகை தீபத்திருநாளாக கொண்டாடுகிறோம். ஜோதிவடிவில் இறைவன் நின்ற இடமே திருவண்ணாமலை. இந்த மலை, மற்ற மலைகளைவிட பெருஞ்சிறப்பு பெற்றது.

பிற மலைகளிலெல்லாம் மலைக்குமேல் இறைவன் இருப்பார். ஆனால், இங்கு மலையே இறைவனாக விளங்குகிறது. இந்தச் சிறப்பம்சம் உலகில் எங்குமே கிடையாது. இம்மலையில், இறைவனின் ஐந்து முகங்களைக் காட்டும் சிகரங்களும், நந்தியின் உருவமும் பற்பல சித்தகர்களின் ஜீவசமாதிகளும் விளங்குகின்றன. இம்மலையைச் சுற்றி எட்டுத் திக்குகளிலும் எட்டு அஷ்டலிங்கங்கள் விளங்குகின்றன. இம்மலை நான்கு யுகங்களில் ஒவ்வொரு வடிவத்தில் காட்சியளித்து தற்போது கல்மலையாகக் காணப்படுகிறது.

மலையே கடவுளாகக் காட்சி தருவதால்தான் ஏராளமான பக்தர்கள் இங்கு ‘கிரிவலம்’ வருகின்றனர். பஞ்சபூதத் தலங்களுள் நெருப்புக்குரிய தலமாக விளங்கும் இம்மலை, ஒரு யுகத்தில் நெருப்பு மலையாகவே இருந்தது என்று தலபுராணம் தெரிவிக்கின்றது. இறைவன் அடிமுடி அறியா வண்ணம் ஜோதியாக நின்றதை நினைவு கூறும் வகையில் மலையுச்சியில் விளக்கிட்டு வழிபடுகிறோம். இந்த ‘மகாஜோதி’ ஏற்றிய பிறகே உலகின் அனைத்து ஆலயங்களிலும் வீடுகளிலும் 3 நாட்களுக்கு விளக்கு ஏற்றப்படும். முதல்நாள் ‘சிவன் ஜோதி’ என்றும் இரண்டாம்நாள் ‘விஷ்ணு ஜோதி’ என்றும் மூன்றாம்நாள் `பிரம்ம ஜோதி’ என்றும் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்திருநாளைக் கொண்டாட அறிவியல் காரணமும் உண்டு.

மழைக்காலம் முடிந்தபிறகு கார்த்திகை மாதம் வருகிறது. நீர்ப்பெருக்கத்தால் கொசு முதலான நுண்ணுயிர்களின் பெருக்கம் அம்மாதத்தில் அதிகரிக்கும். அவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள தீபத்திருநாள் நமக்கு வழிவகை செய்கிறது. தீபத்தில் பயன்படுத்தப்படும் நல்லெண்ணெய், நெய் முதலிய எண்ணெய்கள் பருத்தியின் திரியுடன் சேர்ந்து எரியும்போது அதிலிருந்து வெளிப்படும் நெடியானது கொசு முதலிய நுண்ணுயிர்களின் பெருக்கத்தைக் குறைக்கும். இந்த அறிவியல் உண்மையை அறிந்தே நம் ஆன்மிகப் பெரியோர் இந்த விழாவைக் கொண்டாடினர். பழங்காலத்திலேயே தீபத் திருநாளன்று விளக்கினை ஏற்றிய செய்தி கார்நாற்பதில்,

‘‘நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தயையுடைய ஆகிப்
புலமெலாம் பூத்தன தோன்ற” (பா.26)


 - என்று இடம் பெற்றுள்ளது. இதே செய்தியை களவழி நாற்பது,‘‘கார்த்திகைச் சாற்றில் கழி விளக்கைப் போன்றவை’’ (பா.17) என்று குறிப்பிடுகிறது. இப்படி கொண்டாடப்படும் தீபத் திருநாள் அறிவியலுடன் சேர்ந்த ஆன்மிகப் பெருவிழாவாகும். விளக்கு வழிபாடானது யோகக்கலையிலும் இடம் பெற்றுள்ளது. மனத்தை ஒருமுகப்படுத்த தீபத்தை ஏற்றி வைத்து ‘தீபப் பயிற்சி’ கடைப்பிடிக்கப்படுகிறது. அணையா விளக்கு, தூண்டா மணிவிளக்கு, நட்சத்திர விளக்கு, மேரு விளக்கு எனப் பலவகை விளக்குகள் வழிபாட்டில் இடம் பெறுகின்றன. வழிபாட்டில் பலமுக விளக்குகள் தொடங்கி ஒருமுக விளக்கு ஈறாக இறைவனுக்குக் காட்டப்படுவது பலவாக இருக்கும் உலகம் இறைவனாகிய ஒன்றில் ஒடுங்குகிறது என்ற தத்துவத்தை வெளிப்படுத்துவது ஆகும்.

ஆக்கவும் அழிக்கவும் தெரிந்த விளக்கின் ஒவ்வொரு அங்கங்களையும்,

“சுடரோ சிவபெருமான், சூடு பராசக்தி
திடமார் கணநாதன், செந்தீ அழலோ
கந்தவேள்’’


 - என்ற பாடல், விளக்கிலுள்ள ‘சுடர்’

சிவபெருமானையும் ‘சுடுகின்ற வெப்பம்’ பராசக்தியாகவும், ‘‘திரியாகிய கனம்’’ விநாயகர் என்றும், ‘நெருப்பு’ முருகப்பெருமானாகவும் முறையே விளங்குவதைக் குறிப்பிடுகிறது. இப்படி விளக்கினை ஏற்றி வழிபடும்போது மனக்கவலைகள் மாற்றப்படும். இதனை,

``விளக்கின் முன்னே வேதனை மாறும்”

என்று திருமூலர் குறிப்பிடுகிறார். ஐம்பூதங்களிலேயே மேல்நோக்கி எழுகின்ற ஆற்றலை உடைய நெருப்பை விளக்கினில் கண்டு வழிபடுவதால் மேல்நோக்கிச் சிந்திக்கின்ற உடன்பாட்டு எண்ணங்கள் உள்ளத்தில் மேலோங்கும். அறிவு விசாலப்பட்டு ஞானமாக மாறும்.

‘ஞானத்தை’ விளக்குடன் ஒப்பிட்டு ‘ஞானச்சுடர்’ என்கிறார் ஆழ்வார். ஞானத்தைப் பெறவும் மோனத்தில் ஆழவும், விளக்கே விலாசமாக விளங்குகிறது. அதை வழிபடின் அறியாமை இருள் நீங்கி, அறிவு விளக்கம் பெறும். அறிவு ஒளியே வாழ்க்கை என்ற வழிக்கு வெளிச்சமிடும். இதுவே விளக்கினால் பெறும் இன்பம்.

தொகுப்பு: சிவ.சதீஸ்குமார்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?