×

சுற்றுலாத்தலமான குளு குளு மூணாறில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படுமா? சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்ப்பு

மூணாறு : கேரள மாநிலம் மூணாறில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படுமா என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலாப்பயணிகள் உள்ளனர்.கேரள மூணாறு தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மலைவாசஸ்தலங்களுள் ஒன்றாகும்.மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கும் மூணாறு ரம்மியமான இயற்கை அழகை கொண்டிருப்பதால் தினம் தோறும் ஆயிர கணக்கில் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். சுற்றுலா சீசன் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பதால் மூணாறின் முக்கிய சுற்றுலா மையங்களில் அதிகமான போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது.குறிப்பாக ராஜமலை, மாட்டுப்பட்டி, எக்கோ பாய்ண்ட், போட்டோ பாயிண்ட், டாப் ஸ்டேஷன் போன்ற பகுதிகளில் அதிகமான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.இதனால் வெளி மாநிலங்களில் இருந்தும் தூரப் பகுதிகளில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பல சுற்றுலா மையங்களை காண முடியாமல் திரும்பி செல்கின்றனர்.மேலும் போக்கு வரத்து நெரிசல் மூலம் மூணாறில் உள்ள தொழிலாளர்களும் பொதுமக்களும் செல்ல வேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையோரங்களிலும், வளைவுகளிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவது போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.மூணாறு-உடுமலை பேட்டை சாலையில் ராஜமலை முதல் நயமக்காடு எஸ்டேட் வரை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் நோயாளியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் மரணம் ஏற்பட்ட சம்பவங்களும் இதற்கு முந்தைய வருடங்களில் அரங்கேறியுள்ளது.ராஜமலை தேசிய பூங்காவில் நுழைவு பகுதியின் முன்பு வாகனங்கள் நிறுத்துவது போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம். இந்த நிலையில் தேசிய பூங்காவில் உள்ளே கூடுதல் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகளை செய்து போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என்றால் கடும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.மணி தெரிவித்துள்ளார்.இது குறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.மணி கூறுகையில், ‘‘மூணாறிலிருந்து வேறு இடங்களுக்கு செல்லும் தோட்டத் தொழிலாளிகளுக்கும் இந்த போக்குவரத்து நெரிசலால் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதாகவும் பல மணி நேரம் தொழிலாளிகளும் சாலையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதை தடை செய்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவில்லைஎன்றால் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்….

The post சுற்றுலாத்தலமான குளு குளு மூணாறில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படுமா? சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Glu Glu Munnar ,Munnar ,Munnar, Kerala ,Kerala ,Dinakaran ,
× RELATED உடல் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு