×

நம்பிக்கையூட்டும் இறைவாக்கு

(எசாயா 65:17-25)

எசாயா தீர்க்கர் பற்றிய விவரம் மற்றும் அவர் யார் யாருடைய காலத்தில் இறைவாக்குரைத்தார் என்று எசாயா 1:1 இல் கூறப்பட்டுள்ளது. எசாயாவின் காலத்தை கிறிஸ்துவுக்கு முன் எட்டாம் நூற்றாண்டு எனக் கூறுகிறார்கள். எசாயாவின் நூல் மூன்று காலகட்டங்களில் உரைக்கப்பட்ட இறைவாக்காகக் கூறப்படுகிறது. அது யாதெனில் எசாயா 1-39 (முதல் எசாயா), 40-55 (இரண்டாம் எசாயா), 56-66 (மூன்றாம் எசாயா) எனத் திருமறை அறிஞர்கள் கூறுகின்றனர்.

கடவுளின் இறைவாக்கு என்பது அதிகாரம் சார்ந்தது அல்ல. அது எப்போதும் மக்கள் நலன் சார்ந்தது. மக்கள் வாழும் சூழல் சார்ந்தது. மக்கள் வழிதவறிச் செல்லும்போது அவர்களை எச்சரிக்கவும், அவர்கள் வேதனை மற்றும் துன்பத்தில் இருக்கும்போது அவர்களைத் தேற்றவும், அவர்கள் சோர்வுற்றும் நம்பிக்கை இழந்தும் நிற்கும்போது அவர்களைத் தேற்றவும் உரைக்கப்படுகிறது. எசாயாவின் நூலில் இத்தன்மைகளை முழுமையாகக் காணலாம்.

70 ஆண்டு பாபிலோனிய சிறையிருப்புக்குப் பின் சுமார் கி.மு 538-ஆம் ஆண்டில் யூதா மக்கள் நாடு திரும்பினர். முற்றிலுமாகச் சிதைக்கப்பட்ட எருசலேம் தேவாலயம், சிதைந்து போன வீடுகள், வெறிச்சோடிப்போன வீதிகள், முள்ளும் கருக்குமாகிப் போன வயல்வெளிகள் அவர்களை நம்பிக்கையிழக்கச் செய்தது. இத்தகைய சூழலில்தான் கடவுளின் இறைவாக்கு நம்பிக்கையூட்ட உரைக்கப்பட்டது.

பழைய கசப்பான அனுபவங்கள் மீண்டும் நினைவுக்கு வராத அளவுக்குக் கடவுள் புதிய வானங்களையும் புதிய பூமியையும் படைக்கிறார். எருசலேமை மகிழ்ச்சிக்குரியதாகவும் அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறார். அது மட்டுமல்ல எருசலேமின் மாறிய நிலை கண்டும் தமது மக்களின் மகிழ்ச்சையைக் கண்டும் கடவுளே மகிழ்ச்சியடைகிறார். இவ்வாறு மக்கள் மகிழ்ச்சியுடனும் ஒருவருக்கொருவர் நல்லுறவுடனும் வாழ்வதுதான் கடவுளுக்கு மகிழ்ச்சியைத் தருவது ஆகும். இதுதான் கடவுளின் சிறப்புத் தன்மை எனலாம்.

மேலும், இனி அந்த நாட்டில் அழுகுரல் கூகக்குரல் கேட்காது எனவும் பட்டினி, நோய், படுகொலைகளால் ஏற்படும் குழந்தை மரணங்கள் இருக்காது எனவும் அனைத்து மக்களும் நீண்ட ஆயுளுடன் வாழ்வர் எனவும் உறுதி அளிக்கிறார். அத்துடன் அவர்களின் உயிருக்கோ உடைமைகளுக்கோ ஆபத்து ஏதும் வராது எனவும், அவரவர் அவரது உழைப்பின் பலனை அனுபவிப்பர். வேறு எவரும் அவற்றைச் சுரண்டவோ பறித்துச் செல்லவோ மாட்டார் எனவும் கூறுகிறார்.

அதைவிடக் கடவுள் தாமாகவே முன் வந்து மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றிற்கு நிவாரணம் அளிப்பார் என்றும் மக்கள் தம்மை நோக்கிக் கூப்பிடும் வரை அவர் காத்திருக்க மாட்டார் எனவும் கூறுகிறார். இவையா வற்றிற்கும் முத்தாய்ப்பாக, ‘‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப் போல வைக்கோல் தின்னும்; பாம்பு புழுதியைத் தின்னும்; என் திருமலை முழுவதிலும் தீங்கு செய்வாரும் கேடு விளைவிப்பாரும் எங்குமில்லை’’ எனும் உன்னதமான நிலையையும் உறுதி அளிக்கிறார்.

அதிகாரம், போட்டி, பொறாமை, பேராசை, தீய எண்ணம் மற்றும் வன்முறை இல்லாத அன்பு ஒன்றையே கொள்கையாக வகுத்து இயங்கும் மக்கள் சமூகம் பற்றிய மிக அழகான காட்சியைக் கடவுள் அருளுகிறார். முரண்பாடுகள், வெறுப்புணர்வு, ஒருவரை அழித்து மற்றவர் கொழிக்கும் சுரண்டல் பொருளாதாரம் இல்லாத ஒரு அன்புறவும், பகிர்வும் கொண்ட சமுதாயம் அமைந்திடவே கடவுள் எதிர்பார்க்கிறார். அதற்காகவே அவர் ஆசியும் வழங்குகிறார்.

கடவுள் சோர்ந்தும், நம்பிக்கையிழந்தும் இருப்பவருக்கு நம்பிக்கை அளிப்பது போல நாமும் நமது பேச்சு மற்றும் செயல்களால் பிறருக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் அல்லவா.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

Tags :
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்