×

8,000 கிலோ சம்பங்கி பூக்கள் குளத்தில் கொட்டி அழிப்பு; சத்தி விவசாயிகள் வேதனை

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரியப்பம்பாளையம், புளியங்கோம்பை, பெரியகுளம், சிக்கரசம்பாளையம், ராமபைலூர், அய்யன் சாலை, எரங்காட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் சம்பங்கி பூக்கள் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த வாரம் ஆயுத பூஜையன்று சம்பங்கி ஒரு கிலோ ரூ.280க்கு விற்பனையான நிலையில், பண்டிகை சீசன் முடிவடைந்ததால் விலை குறைந்து கிலோ ரூ.20க்கு விற்பனையானது. இந்நிலையில், சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர் கன மழை பெய்து வருகிறது. இதனால், ஆர்டர் இல்லாததால் விவசாய தோட்டத்தில் பறிக்கப்பட்ட சம்பங்கி பூக்களை வாங்க வியாபாரிகள் முன் வரவில்லை. தொடர் மழை காரணமாக சம்பங்கி பூக்கள் விற்பனையாகாததால் தேக்கமடைந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் கிலோ சம்பங்கி பூக்களை சத்தியமங்கலம் பகுதியில் உள்ள பெரியகுளத்தில் கொட்டி அழித்தனர். இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். இப்பகுதியில் பூக்களில் இருந்து வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலை இல்லாததால் இது போன்ற நிலை ஏற்படுவதாகவும், எனவே தமிழக அரசு விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு சத்தியமங்கலம் பகுதியில் பூக்களில் இருந்து வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post 8,000 கிலோ சம்பங்கி பூக்கள் குளத்தில் கொட்டி அழிப்பு; சத்தி விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Erode district ,Ariapampalayam ,Pulyangombai ,Periyakulam ,Sikkarasampalayam ,Ramabailur ,Ayyan Road ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டம் ஆசனூரில் அதிகாலை சூறாவளி காற்றுடன் மழை