×

பெண்களின் தாலி பாக்கியத்தை காத்து அருள்புரிவாள் மீனாட்சி அம்மன்..!!

மதுரை என்றதுமே நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் திருக்கோயில்தான். மதுரை ஊரெங்கும் கோயில்கள் இருந்தாலும் மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்பே தனிதான். ஈசன் தன் திருவிளையாடல்கள் பல நிகழ்த்தியதும் இந்தக் கோயிலைச் சுற்றித்தான். ஓர் ஆண்டில் 274 நாள்கள் திருவிழாக்காணும் தலம் இது. நவகிரகங்களில் புதன் தலம். இங்கு வந்து அன்னையை வழிபாடு செய்தால் திருமணவரம் கைகூடுவதோடு கல்வி கேள்விகளிலும் சிறந்துவிளங்கலாம் என்பது நம்பிக்கை.

மதுரையே மீனாட்சி; மீனாட்சியே மதுரை என்று சக்தி பீடங்களில் சிறப்பித்துக் கூறப்படும் தலம் இது. இந்த பீடத்துக்கு ராஜமாதங்கி சியாமள பீடம் என்றும் பெயர். இங்கு அரசாட்சி செய்யும் அன்னை மீனாட்சிக்கு அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிஷேகவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திருவழுதி மகள் என்கிற திருநாமங்களும் உண்டு.

மலையத்துவஜன் செய்த வேள்வித் தீயிலிருந்து தோன்றிய பெண் குழந்தை இந்த அன்னை. மூன்று மார்பகங்களுடன் தோன்றியவள் என்பதால் ஒரு கணம் மலையத்துவஜனும் அவன் மனையாளும் கலங்கியபோது இவள் தன் கணவனைக் காணும்போது இவளின் மூன்றாவது மார்பகம் மறைந்துவிடும் என அசரீரி ஒலித்து ஆறுதல் படுத்தியது என்பார்கள்.

அம்மைக்குப் பட்டாபிஷேகம் செய்வித்தான் மன்னன். அன்னையும் திக் விஜயம் புறப்பட்டாள். பல திசைகளுக்கும் வெற்றி யாத்திரை போனவள், திருக்கயிலாயத்துக்கும் சென்றாள். அங்கு சிவனாரைக் கண்டதும் அவள் தன் பெண்மையை உணர்ந்து நாணமுற்றாள். அப்போது அவளின் மூன்றாவது மார்பகம் மறைந்தது. அதன் பின்னர் சிவபெருமான் மதுரைக்குச் சொக்கனாக எழுந்தருளி, அம்மையை மணம் புரிந்து கொண்டார் என்கிறது தலவரலாறு.

பெண்களைப் பாதுகாக்கும் தெய்வம் மதுரை மீனாட்சி அம்மன் என்பார்கள். பெண்களின் தாலி பாக்கியத்தை வலுவாக வைத்திருக்கும் தெய்வம்  மீனாட்சி அம்மன். மீன் போல விழிப்புடன் இருந்து மதுரையை ஆட்சி செய்த மீனாட்சி அம்மன் நம்மையும் விடாமல் காத்தருள்வார் என்பது நம்பிக்கை.

இன்றுவரை தமிழகத்தில் வீட்டில் பெண் குழந்தை பிறந்தால் மீனாட்சி அம்மனே பிறந்ததாக எண்ணி மகிழ்ச்சி அடையும் பக்தர்கள் பலர். மீனாட்சி அம்மன் குங்குமத்திற்கு உள்ள சக்தி மிகப் பெரியது. வீட்டில் மீனாட்சி அம்மன் குங்குமத்தை வைத்து வழிபடும் பெண்களுக்கு தாலி பாக்கியத்தை காத்து அருள்புரிவாள் மீனாட்சிஅம்மன்.

Tags : Amman Meenakshi ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா..!!