×

தொழில்நுட்பம், மருத்துவ புது கண்டுபிடிப்புக்காக சிப்காட் நிறுவனம் பிரிட்டிஷ் துணை உயர் ஆணையரகம் அண்ணா பல்கலைக் கழகத்துடன் தனித்தனியே ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது

சென்னை: சிப்காட் – பிரிட்டன் துணை தூதரகம் மற்றும் சிப்காட்- அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் இடையே தொழில்நுட்ப உதவி மற்றும் மருத்துவ புது கண்டுபிடிப்பு, மருத்துவ உபகரணங்கள் உள்கட்டமைப்பை மேற்கொள்வது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், சிப்காட் நிறுவனத்துக்கும் பிரிட்டிஷ் துணை உயர் ஆணையரகத்திற்கும் இடையே தொழில்நுட்ப உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.இதில் பிரிட்டிஷ் ஆணையரகத்துடனான ஒப்பந்தத்தின் மூலம், சூளகிரி வருங்கால நகர்திறன் பூங்காவிற்கான தொலைநோக்கு பார்வை மற்றும் முதன்மைத் திட்டம் தயாரிப்பதற்கும், உள்கட்டமைப்பு வசதிகள், முதலீட்டு வசதிகளுக்கான வழி வகைகள் மற்றும் ஆளுமை கட்டமைப்புகள் போன்றவற்றை வரையறுப்பதற்கும் சிப்காட் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் உதவும். வெளிநாடுகளிலுள்ள இத்தகைய பூங்காக்களில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்து, அதை சூளகிரி வருங்கால நகர்திறன் பூங்காவின் வளர்ச்சிக்கு பயன்படுத்த, பிரிட்டிஷ் துணை உயர் ஆணையரகம் வகை செய்யும்.அதனைத் தொடர்ந்து, முதல்வர் முன்னிலையில் சிப்காட் நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகத்தை தொழில்நுட்ப பங்குதாரராக நியமித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ஒரகடம் மருத்துவ உபகரணங்கள் பூங்காவிற்கான சிறப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், சிப்காட் நிறுவனத்திற்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கவும்,மருத்துவ தொழில்நுட்பத் துறையில் உள்ள உற்பத்தியாளர்களின் திறனை மேம்படுத்துவதோடு மருத்துவ துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் புதிய தயாரிப்புகளை உருவாக்க அண்ணா பல்கலைக்கழகம் தன் கிளை நிறுவனங்கள் மூலம் சிப்காட் நிறுவனத்தில் உள்ள உற்பத்தி பிரிவுகளுக்கு உதவும்.சிப்காட் நிறுவனத்திற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் மருத்துவ தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமையும். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பிரிட்டிஷ் துணை உயர் ஆணையரக துணைத் தலைவர் பால் டிரைடன், மூத்த ஆலோசகர் (பொருளாதாரம் மற்றும் காலநிலை மாற்றம்) சாம்குமார், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ், பதிவாளர் டாக்டர் ஜி. ரவிகுமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்….

The post தொழில்நுட்பம், மருத்துவ புது கண்டுபிடிப்புக்காக சிப்காட் நிறுவனம் பிரிட்டிஷ் துணை உயர் ஆணையரகம் அண்ணா பல்கலைக் கழகத்துடன் தனித்தனியே ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது appeared first on Dinakaran.

Tags : CHIPCOAT ,British Deputy High Commission Anna University ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Chipcot ,British Consulate ,Chipcott-Anna University ,Chipcott Institute for Technology, Medical Innovations ,M.K.Stalin ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...