×

அறிந்த தலம் அறியாத தகவல்கள்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்

திருப்பெயர்கள்

இந்த திருத்தலத்திற்குப் பன்னிரண்டு திருப்பெயர்கள் உண்டு. காஞ்சீ, பிரளயஜித், சிவபுரம், விஷ்ணுபுரம், மும்மூர்த்தி வாசம், பிரம்மபுரம், காமபீடம், தபோ மயம், சகல சித்தி, கன்னி காப்பு, துண்டீரபுரம், தண்டகபுரம் - எனப் பன்னிரண்டு திருப்பெயர்கள் கொண்ட இங்கு அமைந்த இந்த ஆலயம், நாற்பத்தேழு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

108-1000

இங்கு ஒரே சிவலிங்கத்தில் நூறு சிவலிங்கங்களும், மற்றொரு சிவலிங்கத்தில் ஆயிரம் சிவலிங்கங்களும் அமைந்துள்ளன. ஒரே சிவலிங்கத்தில் ஆயிரம் சிவலிங்கங்கள் கொண்ட சிவலிங்கம், ‘சகஸ்ரலிங்கம்’ எனப்படுகிறது. இதை ஸ்ரீராமர் வழிபட்டதாகத் தல புராணம் கூறுகிறது.

மூன்று கம்பர்கள்

 முதல் பிராகாரத்தில் ஏகாம்பரநாதருக்கு வலது பக்கம், பிரம்மதேவரால் வழிபாடு செய்யப்பட்ட வெள்ளக் கம்பர், ஏகாம்பர நாதருக்கு இடப்பக்கம் - திருமாலால் வழிபாடு செய்யப்பட்ட ‘கள்ளக்கம்பர்’, ஈசான திசையில் - ருத்திரரால் வழிபாடு செய்யப்பட்ட ‘நல்ல கம்பர்’ என மூன்று ஈசர்கள் எழுந்தருளி இருக்கிறார்கள்.
 
சூரியத் தழுவல்

தை மாத - ரத சப்தமி அன்று, இங்கே சிவலிங்கத்தின் மீது, சூரியக் கதிர்கள் தழுவி, அப்படியே நகர்வதைத் தரிசிக்கலாம். இத்தரிசனம், பாவம் - தோஷங்களை நீக்கும்.

கச்சி மயான உண்மை


ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் `கச்சி மயானம்’ என்று இருக்கிறது. மயானம் என்ற வார்த்தையை வைத்து, இதன் அருகில் நெருங்கவே பயப்படுகிறார்கள் பலர். ஆனால், அபூர்வமான திருத்தலப் பகுதி இது. பந்தகாசுரன் என்பவன், தான் வாங்கிய வரத்தின் காரணமாகத் தேவர்களின் உடம்புகளில், அவர்கள் அறியாமல் புகுந்து, அவர்களது சக்தியை அப்படியே உறிஞ்சி வந்தான். செய்வதறியாத தேவர்கள் இங்கு வந்து, சிவபெருமானை வேண்டினார்கள். வேண்டிய அவர்களைச் சமித்துகளாக (யாகத்தில் உபயோகப்படுத்தும் குச்சிகளாக) வைத்துச் சிவபெருமான் யாகம் நடத்தினார். தேவர்களைப் பிடித்திருந்த, பீடித்திருந்த பந்தகாசுரன் முற்றுமாக அழிந்தான். அந்த நிகழ்ச்சி நடந்த இடம், இந்தக் கச்சி மயானம்.

நம்மை அறியாமல் நம் உடம்பில் புகுந்து நம்மை உருக்கி, ஆட்டிப்படைக்கும் பந்தகாசுரன், அன்று மட்டுமல்ல! இன்றும் சொல்ல முடியாத, பல வியாதிகள், நம்மால் சரிவர அறிய இயலாத வியாதிகள், நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், எலும்புருக்கி நோய்! விவரம் அறிந்த ஒருசிலர் இன்றும் இங்கு வந்துப் பிரார்த்தனை செய்து, தங்கள் குறைகள் தீருவது கண்கூடு.

திவ்ய தேசங்களில் ஒன்று இங்கே

வைணவ திவ்ய தேசங்கள் என்று சொல்லப்படும் திவ்ய தேசங்களில் ஒன்றான ‘நிலாத் திங்கள் துண்டப் பெருமாள்’ எழுந்தருளியிருக்கும் திவ்யதேசமும் இங்கே ஏகாம்பரநாதர் கோயிலில்தான் உள்ளது. அவர் இங்கே எழுந்தருளி இருப்பதற்கான காரணத்தை, ஏற்கனவே பார்த்த அப்பழந்தமிழ் நூலும் ஏகாம்பரேஸ்வரர் கோயில் வரலாறும் `காஞ்சீ க்ஷேத்ர மஹாத்மியம்’ எனும் நூலும் விரிவாகவே கூறுகின்றன. இங்கே நிலாத்திங்கள் துண்டப் பெருமாள் சந்நதியில் சிவாசார்யார் ஒருவர் பூஜை செய்வது சிறப்பு.

வாலியின் வால் தழும்பு

கச்சி மயானத்திற்குக் கிழக்கே ‘வாலீஸ்வரர்’ எனும் சுவாமி சந்நதி உள்ளது. அங்கே எழுந்தருளி உள்ள சிவபெருமான் - சுயம்பு மூர்த்தி. சுக்ரீவன் அண்ணனான வாலியால் பூஜை செய்யப்பட்டவர் இவர். வாலியின் வால்தழும்பு இந்தச் சிவலிங்கத்தில் உள்ளது.

வெள்ளம் வடிய

மாவடிக்கு வலது பக்கமாகப் `பிரளய பந்தனி’ என்ற பெயரில் ஒரு சக்தி கோயில் கொண்டிருக்கிறார். அன்னை காமாட்சி இங்கே சிவபூஜையில் இருந்தபோது, கம்பா நதியில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.  அதைக் கண்ட அன்னை காமாட்சி, தாம் செய்யும் ஏகாம்பரநாதர் வழிபாட்டிற்கு இடையூறு வராமல் தடுக்க, தன் அருகில் இருந்த பணிப் பெண்களில் ஒருவரை அழைத்து, ‘‘இந்த வெள்ளத்தைத் தடுப்பாய்!’’ என்று ஆணையிட்டார்.

அத்தேவியும், தான் வைத்திருந்த, ‘விசுவபட்சணம்’ எனும் கபாலத்தில் அந்த வெள்ளத்தை அடக்கினார். பிரளய வெள்ளம் போலப் பொங்கிப் பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தைத் தடுத்த அந்தத் தேவி, அதன் காரணமாகப் ‘பிரளய பந்தனி’ எனும் திருநாமம் பெற்றார்.  வெள்ளச்சேதம் விளையாமல் இருக்க, இந்தத் தேவியை வழிபடுவது உண்டு.

தல விருட்ச மகிமை

ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தல விருட்சமாக உள்ளது மாமரம். ஆராய்ச்சியாளர்களின் வாக்குப்படி, இந்த மாமரம் 3700 - ஆண்டுகளுக்கு முற்பட்டது. நான்கு வேதங்களும் கிளைகளாக இருக்கும் இந்த மாமரம், தெய்வத் தன்மை நிறைந்தது. இந்த மரத்தின் அடியில் சிவபெருமானும், அம்பிகையும் எழுந்தருளி இருக்கிறார்கள். அடியார்களின் பிரார்த்தனையை நிறைவேற்றுவதில் அற்புத சக்திவாய்ந்தது இந்தத் தல விருட்சமான மாமரம்.

மாவடி - மாமர மகிமை நம் காலத்தில்

1955-ஆம் ஆண்டு திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், காஞ்சீ ஏகாம்பரநாதர் கோயிலின் திருமதில் திருப்பணியை மேற்கொண்டிருந்தார். அவருடன் இருந்த சிலர், சின்ன காஞ்சீபுரத்தில் இருந்த பர்மாஷெல் ஏஜண்ட் திரு. சுந்தரராஜ ஐயங்காரிடம், வாரியார் சுவாமிகளை திருப்பணி வசூலுக்காக அழைத்துப் போனார்கள். ‘சிவாலயத் திருப்பணிக்கு வைணவர் பணம் தருவாரா?’ என்று எண்ணினார் வாரியார் சுவாமிகள். போன வாரியார் சுவாமிகளை மிகுந்த அன்போடு வரவேற்ற சுந்தரராஜன், அவர் வந்த திருப்பணி நோக்கத்தையும் கேட்டறிந்தார். சந்தோஷம் தாங்கவில்லை அவருக்கு...

‘‘நல்ல காரியம்! தங்களைப்போன்ற உத்தமர்கள் இதில் ஈடுபட வில்லையானால், இந்த நல்ல பணிகள் நடைபெறாமல் இருக்கும். எனக்கு சிவ-விஷ்ணு பேதம் கிடையாது. ஒவ்வொரு சோம வாரமும் ஏகாம்பரநாதர் கோயிலுக்குப் போவேன். சனிக்கிழமை தோறும் வரதராஜாவின் கோயிலுக்குப்போவேன். ஒவ்வொரு மாதமும் சஷ்டிக்குத் திருத்தணிக்குப் போவேன். ‘‘எனக்கு சந்தானம் இல்லை. என் மனைவியுடன் ஒருசோமவாரம், ஏகாம்பரநாதருடைய கோயிலுக்குப் போயிருந்தேன். என் மனைவியும் நானும் மாமரத்தை வலம் வந்தோம்.

என் மனைவியின் வலத்தோளில் ஒரு மாம்பிஞ்சு விழுந்தது.’’ ‘‘அந்த மாமரம் வேதத்தின் வடிவம் என்று பெரியவர்கள் கூறுகின்றார்கள். இந்த மாம்பிஞ்சு சிவனருள் என்று கருதி, அதனை மாவடியில் உள்ள சிவலிங்கத்தின் திருமுன் வைத்து நிவேதனம் செய்து, அவளை உண்ணுமாறு கூறினேன். அவள் கருவுற்றாள். பெண் குழந்தை பிறந்தது.’’

`‘பிறந்த குழந்தையின் வலது தோளில், சிறு மாம்பிஞ்சு போன்ற கரிய மச்சம் இருந்தது. ஆண்டவன்தான் தந்த வரப் பிரசாதம் என்று, அந்த அடையாளத்தை இட்டான் போலும்! அந்தக் குழந்தைக்கு ‘ஏலவார் குழலி’ எனப்பெயர் சூட்டினோம். நீங்கள் கண்ணாரப் பாருங்கள்!’’ என்று சொன்ன சுந்தரராஜன், கீழே விளையாடிக் கொண்டிருந்த அந்தப்பெண் குழந்தையை அழைத்தார்.

குழந்தை அணிந்திருந்த சட்டையைக் கழற்றி, வாரியார் சுவாமிகளுக்கு அந்த மச்சத்தைக் காட்டினார். ‘‘தாயாருடைய தோளில் விழுந்த மாம்பிஞ்சின் அடையாளத்தைப் பிறந்த குழந்தைக்கு முத்திரையிட்டது போல் ஆண்டவன் காட்டுகிறான். திருப்பணிக்குத் தேவையான சிமெண்டை அந்த சுந்தரராஜன்தான் வாங்கித்தந்தார்’’ என்று இதை மனம் உருகச் சொல்லுவார் வாரியார் சுவாமிகள். மாவடியின் மகிமை இன்றும் தொடர்கிறது என்பதை விளக்கும் நிகழ்வு இது.

தொகுப்பு: பி.என். பரசுராமன்

Tags :
× RELATED சுநந்தாபீடம் – சுநந்தா