சம்பு குமாரனான முருகன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

தட என்ற சொல்லானது தடுத்தல், மறுத்தல் என்ற பொருளிலும் வழக்குச் சொல்லில் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் “தடக்கை” என்பது இடையூறுகளைத் தருவது என்ற பொருளிலும் அபிராமிபட்டர் பயன்படுத்துகிறார். ஆகமங்கள் `விக்ன விநாயகர், சர்வ விக்னோப சாந்தயே’ வணங்குவோருக்குத் தடைகளை நீக்கு வோரும் மற்றவருக்கு இடையூறு செய்து அருள்வதையும் தனது இயல்பாகப் பெற்ற கணபதியே.. இந்த இடத்தில் “தடக்கையும்” என்ற பொருளில் குறிப்பிடுகிறார்.

ஒரு சமயம் பண்டன் என்ற அசுரனை உமையம்மை அழிக்க போர் தொடுத்தபோது, மந்திரப் பிரயோகத்தால் சக்தியினுடைய சேனையை செயல் அறும்படிசெய்து யுத்தம் செய்வதற்கு போர்வீரர்கள் மனதிலே எண்ணம் எழாமல் தடுக்கும் வகையில் ஒரு யந்திரத்தை யுத்த காலத்தில் மறைமுகமாக பதித்தான் பண்டன். இதன் விளைவாக சக்தியின் சேனையில் உள்ளவர்கள் அயர்வு, தூக்கம், மயக்கம், தோற்றுவிடுவோம் என்கின்ற அவநம்பிக்கை, சோம்பல், ஊக்கமின்மை, சுய முயற்சியின்மை என்ற எண்வகை மனக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டனர். அதனால், யுத்தகளத்தில் தோற்கும் நிலை ஏற்பட்டது. மிகப்பெரும் தடையான இச்சூழலை உமையம்மை தனது மனோ பலத்தால் அறிந்து அதைத் தன்னால் நிவர்த்திக்க இயலாமல் வெட்கப்பட்டு காமேஸ்வரனைப் பார்க்கிறாள்.

அந்த நொடிப்பொழுதில், அவர்கள் இருவருக்கும் தோன்றிய மகனே ‘விக்ந விநாயகர்’ எனப்படுகிறார். இவர் பண்டாசுரனால் நிறுவப்பட்ட அந்த யந்திரத்தை தன் வாயில் விளங்கியதோடு மட்டுமல்லாமல் சக்தி சேனைக்கு முன்பைவிட மூன்று மடங்கு அதிகமான விரைவு, விழிப்பு, தெளிவு, வெற்றி பெற்று விடுவோம் என்கின்ற தன்னம்பிக்கை, சுறுசுறுப்பு, ஊக்கம், தன் முயற்சி இவற்றை அருளினார். அதனால் பண்டாசுரனை உமையம்மை வென்றாள்.

காமேஸ்வரனின் முகத்தை பார்த்ததினாலேயே கணேஷ்வரரை ஸ்ருஷ்டி செய்தாள் என்பதை சரஸ்ரநாமம், ‘காமேஸ்வர முகாலோக கல்பித ஸ்ரீகணேஸ்வர’ என்கிறது. மேலும், மஹா கணபதியினால் விக்னயந்திரம் தூளாக்கப்பட்டதைக் கண்டு மிகவும் சந்தோஷமடைந்தவள் என்பதை ‘மஹாகணேச நிர்ப்பின்ன விக்னயந்த்ப்ரஹர்ஷிதா’ என்கிறது. இதை மனதில்கொண்டே அபிராமிபட்டர் “தடக்கை” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். மேலும் ‘சக்தி தழைக்கும் சிவமும்’ (29) ‘கடவுள் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்’ (44) என்று உமையம்மையையே உயர்த்திப் பேசிய பட்டர், தனது நூலில் காப்பு செய்யுளில் ‘கணபதியே நிற்க கட்டுரையே’ என்ற வாக்கியத்தைக் குறிப்பிட்டாலும் உமையம்மையின் மகனே கணபதி என்பதை “தடக்கை” என்ற வார்த்தையால் குறிப்பிடுவதை நன்கு உணர்ந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு தேவதையின் திருஉருவத்திற்கும் ஒவ்வொரு தனித்தன்மை உள்ளது. உதாரணமாய், செல்வத்திற்கு இலக்குமி, கல்விக்கு சரஸ்வதி போன்று, அவ்வகையில் “தடக்கையும்” என்ற வார்த்தையால் சூட்டப்படுகிற கணபதியானவர் சிவபக்தர்கள். உமையம்மை அடியவர்கள், விஷ்ணுவின் அடியவர்கள் சூரியனை வணங்குகிறவர்கள். இவர்கள் அனைவருக்கும் வணங்குபவர்களுக்கு ஏற்படும் வழிபாடு தொடர்பான தடங்கல்களை போக்க வல்லவர். வழிபாடு செய்வோர்க்கு ஜபம், பூஜை, தியானம், ஹோமம், யோகம், சமாதித்வம், ஞானம் அனுபூதியினால் தோன்றும் மோகன, ஸ்தம்பன, மாரண உச்சாடன, ஆகர்சன, வச்ய பேதன, வித்வேஷன என்ற சித்திகள் ஏற்பட தடையாக இருக்கும் மானுடப் பண்புகளையும், அறிவதற்கு தடையாக இருக்கிற நூல் இன்மை, ஆசான் இன்மை, கற்றுக் கொள்ள மனம் இன்மை போன்ற தடைகளையும், மன ஒருமைப்பாடின்மை, பூஜைக்கு பொருளின்மை, தியானத்திற்கு சூழலலின்மை ஹோமத்திற்கு செய்விப்போர் இன்மை, யோகம் பயிற்சி செய்ய முடியாத நிலை, மோட்ச கொள்கையில் அனுபவின்மை, இறை பற்றியும் தன்னைப் பற்றியும் சரியான அறிவின்மை, இறைவனோடு தொடர்பு கொள்ளும் அறிவின்மை, இப்படிப்பட்ட  தடைகளை எல்லாம் செம்மையுற நீக்க படைக்கப்பட்டவரே கணபதி என்கிறது தேவாரம்.

‘பிடியத னுருவுமை கொளமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்

கடிகண பதிவர வருளினன் மிகுகொடை

வடிவினர் பயில் வலி வலமுறை யிறையே’

இப்பாடலின் வழி இடையூறு நீக்க உமையம்மையால் படைக்கப்பட்டவரையே “தடக்கையும்” என்கிறார்.

“செம்முகனும்”

செம்முகன் என்ற வார்த்தையால் சிவந்த தழலை [நெருப்பை] தனது முடியாக கொண்டதனாலும், சிவபெருமான் சினந்தால் சிவந்த விழியாலே தோன்றிய காரணத்தாலும், சிவத்தை இழிவுபடுத்திய தட்சனை அழிக்க கோபமுற்ற சிவந்த கண்களைக் கொண்டதாலும், “செம் முகன்” என்று குறிப்பிடுகிறார் அபிராமி பட்டர். ஆகமங்கள் இவரை வீரபத்திரர் என்று அழைக்கிறது. இவர் சிவனாரின் மகனாவார். அவரைப் பற்றிய தலபுராணத்தை அறிந்து கொள்வது என்பது நமக்கு இப்பாடலில் உள்ள இச்சொல்லின் செறிவை உணர்ந்து கொள்ள உதவியாய் அமையும். அதை இனி காண்போம்.

தக்கன் தன்னை மாமன் என்று மதியாது இருந்ததைக் கண்டு சிவன் மீது செருக்கடைந்து சிவமூர்த்தியை நீக்கி ஒரு வேள்வி செய்யத் தொடங்கினான். அவ்வேள்வியை நாரதரால் அறிந்த தாட்சாயணி சிவமூர்த்தியிடம் விடைபெற்று வேள்விச்சாலையை அடைந்தாள். தட்சன், தாட்சாயணியை அன்புடன் வரவேற்காததால் கோபித்து வேள்வியைச் சுடலையாக்கி சிவமூர்த்தியை அடைந்தாள். இவள், மன வேறுபாட்டைக் கண்ட சிவமூர்த்தி தனது சடையில் ஒன்றை பூமியில் மோதினார். அதனின்று வீரபத்திரர் அவதரித்தார்.

இந்த அவதார வடிவத்தை வணங்குவதால் வீண்பழி, அறமில்லா செயல் இவற்றை நீக்கி சிவன் மீதும், உமையம்மை மீதும் மிகுந்த பக்தி உண்டாகும் என்பதனாலேயே சக்தி அருளை மெய்ப்பிக்க வீரபத்ரரை மறைமுகமாக வேண்டுகிறார் அபிராமி பட்டர். மேலும், தந்திர சாஸ்திரமானது சத சூத்ர பிரமாணம் என்னும் நூறு கயிறுகளை கட்டி அதற்கு கீழே தீமூட்டி சக்தி தத்துவத்தை நிறுத்துவதற்கு கிரியா தேவதையான ஐந்து  உமையம்மையின் மகன்களையே வழிபடவேண்டும். அதில் அக்னி ‘ஸ்தம்பனம்’ என்ற மந்திரப் பிரயோகத்தினால் தீயானது சுடாமலிருக்க முதலில் வீரபத்திரரை வழிபாடு செய்த பிறகே சத சூத்திர பிரமாணத்தில் [உறி போன்ற அமைப்பில்] அமர வேண்டும். சாதாரண மானுடர்களால் அவ்வாறு அமர இயலாது.

இறையருள் சக்தி பெற்ற ஒருவரால்தான் அந்த உறியின்மீது இயல்பாக அமர இயலும். அதற்காக அக்னி வீரபத்ரர், அகோர வீரபத்ரர் என்ற இரு தேவர்களின் மந்திரங்களை உச்சரித்து நெருப்பு சுடாதிருக்க அக்னி வீரபத்ரரையும், குளிர்ச்சியாக கவிதை பாடும் மனநிலை தர அகோர வீரபத்ரரையும் வணங்குவது சாக்த நெறியாகும். அப்படி வணங்குவதை“செம்முகனும்” என்கிறார்.

“முந்நான்கிரு மூன்று எனத் தோன்றிய”

சிவபெருமான் உமையம்மையைத் தனது ஆறுமுகங்களால் விருப்பத்துடன் பார்த்தார். அச்சமயத்தில் சிவனுடைய ஆறு நெற்றிக்கண்ணிலிருந்து கோடி சூரியப் பிரகாசமானது. காலாக்னிக்கு ஒப்பான அழகுடன் வெளிப்பட்டது. அந்த ஒளியின் ஜ்வாலை எங்கும் பரவியது. அதை ஆறு உருவங்களாக மாற்றி அக்னி மற்றும் வாயுவிடம் கொடுத்து இதை தேவநதிக்கு கொண்டு செல்லுங்கள் அங்கு நாணல் புதரின் நடுவில் இதை சேர்த்துவிடுங்கள் என்றார் சிவன். அக்னி தேவனும், வாயுதேவனும் அந்த ஒளியை மாறிமாறி தலையில் சுமந்து சென்றதில் மிகவும் களைப்படைந்து கங்கைக் கரையிலுள்ள நாணல் காட்டு நடுவில் உள்ள தாமரை மலரில் வைத்தனர். மஹா விஷ்ணுவானவர், ஆறு நட்சத்திர தேவியர்களை அழைத்து அக்குழந்தைக்குப் பால் கொடுக்கும்படி சொன்னார்.

சம்பு குமாரனான முருகன், அவர்களுக்கு அனுக்ரகம் செய்வதற்காக ஒரே நொடிப் பொழுதில் ஆறுமூர்த்திகளாக ஆயினார். நட்சத்திர தேவியர்களிடம் வளர்ந்து வந்த முருகனை பார்வதி தேவியானவள் ஒன்றாக அணைத்து உச்சி முகர்ந்து இறுக மார்பில் கட்டியணைத்து ஆறுருவத்தையும் ஓருருவாக மாற்றினாள். ப்போது அக்குழந்தைக்கு இரண்டு கால்கள், பன்னிரண்டு புஜங்கள் [தோள்] ஆறுமுகங்கள், பதினெட்டு கண்கள் இவைகளை உண்டாக்கும் படி செய்தாள். அக்குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு தங்கப் பாத்திரத்தில் பால் கொடுத்தாள். அக்குழந்தை அருந்திய பால் கல்வியையும், ஞானத்தையும், கொடுத்தது.

இந்த வரலாற்றை மனதில்கொண்டே “முன்நான்கு” என்று திருமுருகனின் பன்னிரு கரங்களையும் “இரு மூன்று” என்று ஆறு முகங்களையும், “முந்நான்கு இருமூன்று” என்று பதினெட்டு ஆறுமுகருக்குரிய விழிகளையும், என தோன்றிய என்பதனால் செய்யுளில் மட்டும் மெலித்தல் விகாரம் என்பர். வல்லெழுத்து மெல்லெழுத்தாகும்.

தோற்றிய என்பதாக வலித்தல் விகரமாக கொண்டால் சிவபெருமானின் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், அதோமுகம் என்று வடமொழியில் குறிப்பிடும் சிவ பெருமானின் ஆறுமுகத்தையும் சூட்டும்போது தோற்றியது என்றும், ஜகத்புவே, வசத் புவே, ருத்ர புவே, பிரம்ம புவே, சுவத் புவே என்று முருகப்பெருமானை சூட்டும் போது தோன்றிய வார்தையினாலும். மேலும், ‘கரும்புச் சிலையும்’ என்று கூறாமல் ‘கருப்புச் சிலையும்’ என்று கூறுவதால் மேலும் இந்த இலக்கண விதியை உறுதி செய்து கொள்ளலாம்.

இரு பொருள்படும் முன் நான்கு இரு மூன்று என்ற ஆறுமுகம் செவ்வேளையும், அவன் சிவபெருமாளேயே தோற்றுவிக்கப்பட்டதையும் தெளிவுற விளக்கவே “முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய” என்கிறார்.

“மூதறிவு”

 மூதறிவில் ‘மூ’ என்ற எழுத்தானது முதன்மையான முழுமையான, தொன்மையான என்ற பொருளிலும், `அறிவு’ என்பது அறிய இயலாத ஆன்மாவைபற்றி அறிவிக்கும் வேதத்தை குறித்தது. “மூதறிவு” என்பதால் தனது நான்கு முகத்தினாலும், வேதத்தை உருவாக்கிய பிரம்மனை குறித்தது. இந்த பாடலை பொறுத்தவரை, பிரம்மாவின் தலையை ஐந்து தலையில் ஒன்றை சிவனிடம் சென்று கூறிய காரணத்தால், தன்கை நகத்தால் கில்லி எடுத்த பைரவரைக் குறிப்பிடுகின்றனர். அந்த பைரவர் சிவபெருமானின் புதல்வராவார். அவரைப் பற்றிய தலபுராணத்தை நன்கு உணர்வதனால் இச்சொல்லின் செறிவை நாம் உணரலாம்.

ஒரு காலத்தில் படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவிற்கும் இடையே, யார் முதல்வர் என்று ஒருவருக்கொருவர் சண்டையிட துவங்கினர். அது முடிவில்லாததாய் நீண்டது.இதனால், துன்புற்ற தேவர்கள் சிவபெருமானிடம் வேண்ட அவர் இருவரின் நடுவில் ஒளிப்பிழம்பாய் தோன்றி உங்களுள் உயர்ந்தோர் என் முடியையாயினும், திருவடியையாயினும் யார் முதலில் காண்கிறார்களோ அவர்களே வென்றவராவார், எனக் கூற திருமால் பன்றி வடிவம் எடுத்து பூமியைத் தோண்டி திருவடியைத் தேடிச் செல்ல, பிரம்மா அன்ன வடிவெடுத்து திருமுடியை தேடி மேல்நோக்கிச் செல்ல, இருவரும் காணமுடியாத நிலையில் விஷ்ணு பகவான் தோல்வியை ஒப்புக்கொண்டு சிவ பெருமானிடம் சரணடைந்தார்.

பிரம்மதேவரோ, மேல்நோக்கிச் செல்லும்போது சிவபெருமான் முடியிலிருந்து நழுவி கீழே விழுந்துகொண்டிருந்த தாழம்பூவைக் கண்டார். அதனிடம் நீ எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டதற்கு, ``நான் தாழம்பூ, பலகோடி யுகமாய் கீழே விழுந்து கொண்டிருக்கின்றேன்’’ என்றது. அதை கேட்ட பிரம்மா, தான் முடியை அடைய முடியாது என்று உணர்ந்து. தாழம்பூவின் உதவியை நாடி, நான் சிவனின் முடியில் உன்னைக் கண்டு வந்தேன் என்று பொய் உரைக்கத் தூண்டினான், அதுவும் அவ்வண்ணமே பொய் கூறியது, அதை உணர்ந்த பரமன் விஷ்ணுவிற்கு வாழ்வளித்து பொய் பேசிய, பிரம்மன் விஷயத்தில், கடும் கோபம் கொண்டு, அவரை அடக்க வேண்டும் என்று கருதி தம் இரு புருவங்களுக்கு இடையில் பைரவரை தோன்ற செய்தார் என்கிறது சிவபுராணம்.

இக்கருத்தை நமக்கு அறிவுறுத்தும் வகையில் பரமனின் புதல்வனாகிய பைரவரையே “மூதறிவின்” என்ற வார்த்தையால் குறிப்பிடுவதால் அறியலாம்” மேலும், சிவராத்திரியன்று சிவபெருமான், பிரம்மா விஷ்ணுவின் போரைத் தீர்க அழல் பிழம்பாய் தோன்றினார். பிறகு மெய் சொன்ன விஷ்ணுவை வாழ்த்தி பொய் சொன்ன பிரம்மாவை தண்டிக்க லிங்கோத்பவராகிய சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டவரே பைரவர் என அறியலாம்.

இதை பட்டர், ஆகம வழியிலேயும் நிறுவுகிறார். ஆகமம், சிவராத்திரியை லிங்கோத்பவ காலம் என்று கூறும். யாமம் என்பது இரவையும், சேமம் என்பது சிவத்தையும் குறிக்கும். இரண்டையும் சேர்த்து சிவராத்திரி எனவும், வைரவர் என்பதால் லிங்கோத்பவ வடிவத்திலிருந்து வைரவ தோற்றத்தையும் குறிக்கவே ‘யாமம் வைரவர் ஏத்தும் பொழுதும் எமக்கு என்று வைத்த சேமம் திருவடி’ (73) என்பதால் நன்கு அறியலாம்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

Related Stories: