×

சிவஸ்தலம் அறிவோம்!

*திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ளது தேவிகாபுரம். அன்னை பெரிய நாயகி அம்மன் கோயிலுக்கு அருகில் சிறிய மலை ஒன்றில் எழுந்தருளியுள்ளனர் கனககிரீசுவரர். இவருக்கு தினமும் வெந்நீர் அபிஷேகம் செய்யப் படுகிறது. இம்மலை மீது பார்வதி தேவி சிவலிங்க பூஜை நிகழ்த்தி தவம் இருந்தாராம். அதனால் மகிழ்ந்து சுயம்புலிங்கமாகக் காட்சி தந்து பார்வதி தேவியை தமது இடது பக்கத்தில் இணைத்துக்கொண்டாராம் சிவபெருமான். அந்த புண்ணிய திருநாளே மகா சிவராத்திரி நன்னாள் என்பதால் இங்கு மகா சிவராத்திரியன்று மலையில் நாள் முழுவதும் பூஜை நடைபெறும். மற்ற நாட்களில் காலை 8.00 முதல் 10.00 மணி வரை பூஜை நடைபெறும்.

* ஒரே லிங்கத்தில் ஆயிரம் சிறுசிறு லிங்கங்கள் செதுக்கப்பட்டிருப்பது சகஸ்ரலிங்கம் எனப் படும். திரிவிரிஞ்சை, திருக்காளத்தி முதலிய பல தலங்களில் இத்தகைய லிங்கங்கள் உள்ளது. திருக்கோட்டையூரில் ஒரே ஒரு லிங்கத்தில் கோடி லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள இறைவனது பெயர் கோடீஸ்வரர்.

* மோகனூர் சிவன் கோயிலில் கருவறை விளக்கு சுடர் எவ்வளவு காற்றடித்தாலும் அணையாது எரியும். இங்குள்ள இறைவனது பெயர் அசலதீபேஸ்வரர். அசல தீபம் என்றால் அணையாத விளக்குச் சுடர் என்று பெயர்.

* எல்லா கோயில்களிலும் சுவாமிக்கு இரண்டு பாதங்கள் இருக்கும். ஆனால் ஒற்றைக் காலைக் கொண்ட ஏகவாத மூர்த்தி சிலை சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் உள்ளது.

* பெங்களூரில் உள்ள கங்காதேஸ்வரர் குகைக்கோயிலில் மகர சங்கராந்தி அன்று சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழுகிறது. கோயிலின் உள்ளே மூன்று சுரங்கப்பாதைகள் மற்றும் கோயிலின் முன் பிரமாண்ட கொடிமரம் உள்ளது.

* பெங்களூரில் உள்ள தலக்காடு வைத்தீஸ்வரன் கோயிலில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பஞ்சலிங்க தரிசனம் நடைபெறும்.

* பஞ்சலிங்கத்தலம் என்பது திருவிடை மருதூரில் உள்ள திருத்தலம் ஆகும். இதன்கீழ வீதியில் விஸ்வநாதர் கோயிலும், மேல வீதியில் ரிஷிபுரீஸ்வரர் கோயிலும், தெற்கு வீதியில் ஆத்ம நாதர் கோயிலும், வடக்கு வீதியில் சொக்கநாதர் கோயிலும் அமைந்துள்ளன. இவற்றிற்கு நடுவில்தான் மகாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கிறார்.

*கோலாப்பூரிலிருந்து இருபது கிலோ மீட்டர் மலைப்பாதையில் ஜோதிபா மலைக்கோயில் உள்ளது. இறைவனுக்கு தாரேஸ்வரர் என்று பெயர். இவர் பெரிய மீசை, தலைப்பாகை
யுடன் காட்சி அளிக்கிறார்.

* திருச்சிக்கு அருகே உள்ள திருவாசி எனும் ஊரில் உள்ள இறைவனின் பெயர் மாற்றறியாதீசுவரர். இவர் இங்கு பாம்பின் மீது நடனம் ஆடுகிறார். இதுபோன்ற ஈஸ்வரனை வேறெங்கும் காண இயலாது.

* சிவன் கோயிலில் தீர்த்தம் கொடுப்பது ராமேஸ்வரத்தில் உள்ள அருள்மிகு ராமநாதர் கோயிலில் மட்டுமே.

- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

Tags :
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்