×

சமூக வலைதளங்களில் பட்டா கத்தியுடன் வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்க அரசு. நிலத்தரகள். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (22) பள்ளி பருவத்தில் ஒழுங்காக படிக்காமல், சரியான வேலைக்கும் செல்லாமல் ஊர்சுற்றி வந்துள்ளார். இவரது தெருவில் வசிக்கும் சகவயதினர் உள்ளிட்ட யாரும் இவர் மதிப்பதேயில்லை என்று கூறப்படுகிறது. தான் ஒல்லியாக இருப்பதால் தான் தன்னை யாரும் மதிக்க மதிப்பதில்லை. அதனால், எப்படியாவது பெரிய ரவுடியாகி விட வேண்டும். அப்போது தான் இந்த ஊரே தன்னை கண்டால் நடுங்கும் என்று கோபாலகிருஷ்ணன் நினைத்துள்ளார்.  அதற்காக என்ன செய்யலாம் என்று முடிவு எடுத்த போதுதான், அந்த விபரீத எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. போலீசார் தங்களது வாகனங்களில் ரோந்து செல்லும் இடங்களை ரகசியமாக நோட்டமிட தொடங்கினார். பின்னர், போலீசார் அசந்து இருந்த நேரம் பார்த்து, அவர்களது வாகனத்தின் அருகே நின்றவாறு நானும் ரவுடிதான் என்று காட்டிக்கொண்டு மக்களை பயமுறுத்தும்படி வகை வகையாக போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்துக் கொண்டார். இந்த நிலையில், நேற்று அவருக்கு பிறந்தநாள் வந்தது. அதனால் தான் யாரென்று இந்த உலகத்திற்கு காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கோபாலகிருஷ்ணன் கருதினார். தான் ஏற்கனவே போலீசார் வாகனத்தின் அருகே நின்று எடுத்து வைத்த வீடியோவை பதிவிட்டு புதிதாக கையில் பெரிய அளவிலான பட்டா கத்தியை பிடித்துக் கொண்டு நிற்பதைப்போல் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இவர் பதிவு செய்த வீடியோக்கள் சங்கர் நகர் போலீசார் கண்களில் சிக்கியது. போலீஸ் வாகனத்தில் நின்றவாறு பட்டா கத்தியைக்காட்டி வீடியோ பதிவிட்ட வாலிபர் கோபாலகிருஷ்ணனை தேடி அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு, ஏதோ சாதனை புரிந்த மகிழ்ச்சியில், தனது வீட்டில் மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த கோபாலகிருஷ்ணனை, அப்படியே அலேக்காக தூக்கி சங்கர் நகர் காவல் நிலையம் கொண்டுவந்தனர். காவல் நிலையத்தில் கோபாலகிருஷ்ணனை முறைப்படி விசாரித்தனர். மேலும், இவ்வளவு பெரிய பட்டா கத்தி இவருக்கு எங்கிருந்து கிடைத்தது. இந்த வீடியோவை வெளியிட்டதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். இதனிடையே, சமீப காலமாக பட்டா கத்தியைக்காட்டி, மக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடும் கலாச்சாரம் இளைஞர்களின் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற நபர்கள் மீது போலீசார் தயவுதாட்சண்யமின்றி இரும்புக்கரம் கொண்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் போலீசாருக்கு கோரிக்கைவைத்துள்ளனர். …

The post சமூக வலைதளங்களில் பட்டா கத்தியுடன் வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Golden Govt ,Mariamman Koil Street, Pozhichalur ,Gopalakrishnan ,Dinakaran ,
× RELATED இன்ஜினியர் வீட்டில் 60 சவரன் கொள்ளை