×

கும்பகோணம் கும்பேஸ்வரர்

* அமிர்த கலசம் இருந்த கும்பத்துக்கு வாய் மட்டுமல்லாமல், கமண்டலம்போல மூக்கும் இருந்தது. இந்த மூக்கு வழியே சிவபெருமான் தொடுத்த பாணத்தால் அமுதம் வெளிவந்தது. கும்பத்தின் மூக்கிற்கு கோணம் என்று பெயருண்டு. அந்த கோணம் விழுந்த தலமே கும்பகோணம் என்றாயிற்று.

* தேவாரத்தில் இத்தலம் குடமூக்கு என்றே அழைக்கப்பட்டது. விழுந்த இரு அமுதத் துளிகள் தனித் தனி குளமாக மாறின. ஒன்று மகாமகக் குளம்; மற்றொன்று பொற்றாமரைக் குளம்.

* பூரண கும்பம் என்பது அதன் சிகரமாக விளங்கும் தேங்காய், பூணூல், மாவிலை, தீர்த்தம் என்று எல்லாமும் அடங்கியது. இந்த கும்பத்தினின்று நழுவிய தேங்காய் விழுந்த இடத்துக்கு அருகிலே உள்ளதுதான் இன்றைய மகாமகக் குளம்.

* தேங்காய் லிங்க உருபெற்று சிவமானது. இன்றும் குளத்தருகே உள்ள இந்த கோயில் மூலவருக்கு நாரிகேளேஸ்வரர் என்று பெயருண்டு. நாரிகேளம் என்றால் தேங்காய் என்று பொருள்.

* கும்பத்தைச் சுற்றியிருந்த பூணூல் குளத்தின் அருகே விழுந்தது. அங்கு ஸூத்ரநாதர் எனும் திருநாமத்தோடு ஈசன் எழுந்தருளியுள்ளார். ஸூத்ரம் என்றால் பூணூல் என்று பொருள்.

* கோயிலின் நாயகன் கும்பத்தினுள் புகுந்து அருளாட்சி செய்வதால், கும்பேஸ்வரரானார். பிரம்ம சிருஷ்டிக்கு முற்பட்டதால் ஆதிகும்பேஸ்வரர் எனவும், அமுத கும்பேஸ்வரர் எனவும் அழைக்கப்படுகிறார்.

* கிழக்குப் பகுதியில் கிராத மூர்த்தியாகவும் ஈசன் அருள்பாலிக்கிறார். இவர் வேடன் ரூபத்தில் தோன்றியதால் இந்தப் பெயர். வில், அம்பு ஏந்திய இந்த தோரணை வித்தியாசமானது.

* உட்பிராகாரத்தில், நடுநாயகமாக மூலவர் கும்பேஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக விளங்குகிறார். இந்த லிங்க உருவே குடம் போன்று சாயலை கொண்டிருக்கிறது.

* திருச்செங்கோட்டில் ஈசன் தம் பாதிசரீரத்தை கொடுத்ததுபோல, இங்கே இறைவர் முப்பத்தாறாயிரம் கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு அருளினார். அதனால் மந்திரப் பீடேஸ்வரி என்றும், மந்திரபீட நலத்தாள் எனவும் அன்னை அழைக்கப்படுகிறாள்.

* அம்பாளின் திருமுடி முதல் திருப்பாத நகக்கணுவரை ஐம்பத்தோரு சக்தி வடிவ பாகங்களாக காட்சியளிக்கின்றன. ஆகவே அனைத்து சக்திகளையும் தன்னுள் கொண்ட தலையாய சக்தி பீடமாக அம்பாளின் சந்நதி விளங்குகிறது.

* பக்தர்களுக்கு வாழ்வில் மங்களத்தை மேன்மேலும் வளர்த்துக் காப்பதால், ஞானசம்பந்தப் பெருமான், அம்பாளை வளர் மங்கை என்று தேவாரப் பதிகத்தில் குறிக்கிறார்.

* இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரால் இயற்றப்பட்ட இத்தல நாயகன், நாயகி பற்றிய கீர்த்தனையை இறைவன் முன்பு எழுதி வைத்துள்ளார்கள்.

* வேறெங்கும் காண இயலாத கல் நாதஸ் வரம் இக்கோயிலில் உள்ளது. குறிப்பிட்ட விழாக்காலங்களில் இதற்கென்றே தனிப் பயிற்சி பெற்ற இசைக் கலைஞர் இதனை வாசிக்கிறார்.

* கும்பமுனி சித்தர் மங்களாம்பிகையையும், கும்பேசரையும் தியானித்து முக்தி பெற்றது இங்குதான். வெளிப் பிராகாரத்தில் இவருக்குத் தனி சந்நதி உள்ளது. கூடவே ஆதி விநாயகரும் அருள்பாலிக்கிறார்.

* இறைவனும் இறைவியும் இத்தலத்திற்கு வரப்போவதை முன்கூட்டியே அறிந்த விநாயகர் அவர்களுக்கு முன்பாகத் தான் வந்து கோயில் கொண்டார். அதனால் இவர் ஆதிவிநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

* மொத்தம் 19 பதினான்கு தீர்த்தங்களைக் கொண்ட கோயில் இது.

* உட்பிராகாரத்தின் மேற்பகுதியில் கந்தன், ஆறுமுகங்கள், ஆறு திருக்கரங்களுடன் அபூர்வமாகக் காட்சியளிக்கிறார்.

* கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோடினி, சரயு ஆகிய 9 நதிகளும், பக்தர்கள் தம்மில் கழுவிய பாபங்களைப் போக்கிக்கொள்ள இங்குள்ள மகாமகக் குளத்தில் நீராடியதாக ஐதீகம். அவர்கள் கோயிலினுள் சிலை வடிவங்களில் குளத்தை நோக்கியபடி அமைந்திருக்கிறார்கள்.

* மகாமகக் குளத்தைச் சுற்றிலும் 16 மண்டபங்கள் உள்ளன. இவை சோடசலிங்க மண்டபங்கள் என்றழைக்கப்படுகின்றன.

* தஞ்சாவூரை ஆண்ட அச்சுதப்ப நாயக்கரிடம் மந்திரியாகப் பணியாற்றிய கோவிந்த தீட்சிதரின் (கி.பி.1542) அரிய முயற்சியால் இந்த மண்டபங்களும் தஞ்சை, கும்பகோணத்தின் வேறு சில இறைத் தலங்களும் உருவாயின.

தொகுப்பு: கிருஷ்ணா

Tags : Kumbakonam ,Kumbeswarar ,
× RELATED கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர தெப்போற்சவம்