×

இந்த வார விசேஷங்கள்

சனி மகா பிரதோஷம் 4.3.2023 - சனி

ஒவ்வொரு பிரதோஷமும் உயர்வான நாள் என்றாலும் சனிக்கிழமையில் பிரதோஷம் கலந்து வருவது சனி மகாபிரதோஷம் என்ற சிறப்புப் பெயருடன் வழங்கப்படுகிறது. மற்ற பிரதோஷ விரதத்தை விட சனி பிரதோஷ விரதம் 100 மடங்கு அதிக பலனைத் தரக்கூடியது. அன்று விரதம் இருந்து, மாலையில் சிவாலயம் சென்று, அபிஷேகங்களை தரிசிப்பதும், அபிஷேகத்திற்கு உரிய பூஜை பொருட்களைத் தருவதும், பிராகார வலம் வருவதும், ஈஸ்வரனை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வதும் மிகச் சிறப்பான பலனைத் தரும்.

குறிப்பாக சனி தோஷங்களை முற்றிலுமாக நீக்கும். குறிப்பாக மிதுனம், கடகம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசி நேயர்கள் அவசியம் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலமாக கிரக தோஷங்களிலிருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறலாம். திருக்கண்ணபுரம் மாசி மக உற்சவத்தில் இன்று காலை சௌரிராஜப் பெருமாள் பல்லக்கு வாகனத்திலும், மாலை வெள்ளி யானை வாகனத்திலும் திருவீதி வலம் வருகின்றார்.

சாமிதோப்பு அய்யா
வைகுண்டர் அவதார தினம்
4.3.2023 - சனி


ஐயா வைகுண்டர், நாராயணனுக்கும் லட்சுமிதேவிக்கும் குமாரனாக திருச்செந்தூரில் மாசி மாதம் 20ஆம் தேதி அவதரித்தார். அவர் அவதார புருஷர். கலியின் தீமையை ஒடுக்கவும், அறத்தை நிலை நாட்டவும் பல மகான்கள் நம்முடைய பாரத தேசத்தில் அவதரிக்கிறார்கள். அதிலே வைகுண்டர் என்ற பெயரோடு இந்த மஹான் அழைக்கப்படுகிறார். இவருடைய அவதார தினம் நெல்லை கன்னியாகுமாரி மாவட்டங்களில் மிகச் சிறப்பாக கொண் டாடப்படும். ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக போராடியவர் ஐயா வைகுண்டர்.

கன்னியாகுமரி மாவட்டம், தாமரைக் குளம் கிராமம், சாமி தோப்பில் அய்யா வைகுண்ட சாமியின் தலைமை பீடம் இருக்கிறது வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா இங்கு நடைபெறுகிறது. மாசி மாதம் 20ஆம் தேதி அவருடைய அவதார தினம் கொண்டாடப்படுகிறது. அவதார தினத்தை ஒட்டி அந்த மாவட்டத்தின் பல ஊர்களில் இருந்து மக்கள் பாதையாத்திரையாக சாமி தோப்புக்கு வந்து வழிபாடு நடத்துகின்றனர்.

நரசிம்ம சதுர்த்தசி
5.3.2023 - ஞாயிறு


புதனுடைய நட்சத்திரம் ஆயில்ய நட்சத்திரம். புதன் பெருமாளையும் வித்தையையும் குறிப்பார். புதனுடைய ஆயில்ய நட்சத்திரமும், சூரியனுக்குரிய ஞாயிற்றுக்கிழமையும் இணைந்த இந்த நாளில் மாத நரசிம்ம சதுர்த்தசி தினம் அனுசரிக்கப்படுகிறது .இன்று மாலை சந்தி வேலையில், சூரிய அத்தமனமும் இரவுத்  தொடக்கமும் கலந்த வேளையில், வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் விளக்கேற்றி வைத்து, நரசிம்மருடைய படத்திற்கு துளசி மாலையை சாற்றி  பானகம் அல்லது பாலை நிவேதனம் செய்து, நரசிம்மருடைய ஸ்தோத்திரங்களைச் சொல்லி வணங்குவது மிகச் சிறந்த பலனைத் தரும், அது தவிர இன்று நடராஜருக்குரிய அபிஷேக தினம், வருடத்தில் ஆறு அபிஷேகங்கள் நடராஜருக்கு உண்டு, அதில் கடைசி அபிஷேகம் இன்று (மாசி மாதம் சுக்ல சதுர்த்தசி) நடைபெறுவதால் நடராஜமூர்த்தியைத்  தரிசிப்பதும், ‘‘நடராஜ பத்து’’ முதலிய தோத்திரங்களைப்  பாராயணம் செய்வதும் அற்புதமான பலன்களைத்  தரும்.

மாசி மகம்
6.3.2023 - திங்கள்


இன்று சந்திரனுக்குரிய திங்கட்கிழமை. பௌர்ணமி நாள். வைஷ்ணவ சதுர்த்தசி திதி. மக நட்சத்திரமும் பௌர்ணமி தினமும் சந்திரனும் இணைந்த இந்நாளில் பெரும்பாலான கோயில்களில் மாசி மகம் கொண்டாடப்படுகிறது. பல திவ்ய தேசங்களில் பிரம்மோற்சவம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நாள் முருகப் பெருமானுக்கு உகந்த நாள். மாசி மக நாளில் சுவாமி மலையில் சிவபெருமானுக்கு முருகன் பிரணவ உபதேசம் செய்தார் என்று புராணம் சொல்லுகின்றது. இன்று முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்யும் பெண்களுக்கு ஆண் சந்ததி விருத்தி உண்டு என்று புராணங்கள் கூறுகின்றன.

மாசி மகம் குருபகவானுக்கும் உகந்த நாள் அவருக்கு மஞ்சள் ஆடை அணிவித்து மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். வல்லாள மகாராஜனுக்கு திருவண்ணாமலை ஈசனே மகனாக வந்ததாக ஒரு வரலாறு உண்டு. மாசி மாதம் மக நட்சத்திரத்தில் பள்ளிகொண்டாபட்டு என்னும் ஊருக்கு எழுந்தருளி நீத்தார் கடனை ஈசன் நிறைவேற்றுவதாக வரலாறு. இன்றைய நாளில் வாஸ்து பூஜை செய்வதும் சிறந்தது. வாஸ்து புருஷன் நித்திரை விட்டு எழும் நல்ல நேரமாகிய காலை 10.06 முதல் 10.42க்குள் வீட்டுக்கு நிலை வைத்தல், கடைக்கால் பூஜை செய்தல் நல்லது.

திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் உள்ள, பாடல் பெற்ற, தலம். இங்கு சுயம்புவாக தோன்றிய மூலவர் ஒவ்வொரு நாளும் ஐந்து நிறங்களில் காட்சி தருகிறார். தாமிரம், இளஞ்சிவப்பு, பொன்னிறம், உருகிய தங்கம், நவரத்தின பச்சை என மாறிமாறி காட்சி அளிப்பதால் பஞ்சலிங்கேசர் என அழைப்பார்கள். இங்குதான் இறைவன், திருநாவுக்கரசருக்கு திருவடி சூட்டினார். ஆதலால் சடாரி வழக்கம் இங்கு உள்ளது. அமர்நீதி நாயனாரை சிவன் இத்தலத்தில் ஆட்கொண்டார். குந்திதேவி தன் தோஷம் நீங்க இத்தலத்தில் நீராடினாள். அந்த நாள் மாசி மகம்.

திருக்கோட்டியூர் மாசி மக தெப்பம்
7.3.2023 - செவ்வாய்


திருக்கோஷ்டியூர் இராமானுஜரின் ஆச்சார்யரான திருக்கோஷ்டியூர் நம்பிகள் அவதரித்த திருத்தலம். ஸ்ரீராமானுஜர், ஆசையுடையோர்க்கு எட்டெழுத்து மந்திர மகிமையையும் மந்திரத்தையும் எடுத்துரைத்த புண்ணிய பூமி. இங்குள்ள சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் மாசி மக பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தின் முக்கிய விழா தெப்ப உற்சவ விழா, இன்று நடக்கிறது. மாசி மக விழாவையொட்டி தினந்தோறும் இரவு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. 9-ம் நாளில்   காலை வெண்ணெய்த்தாழி சேவையில் பெருமாள் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும்.

அதன் பின்னர் தெப்பக்குளத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள் வார்.10-ம் திருநாளான இன்று காலையில் தங்கத் தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும், அதன் பின்னர் காலை பகல் தெப்பமும், இரவு 9 மணிக்கு இரவு தெப்பம் நிகழ்ச்சியும் நடைபெறும். நாளை காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு தங்க தோளுக்கினியானில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்று விழா நிறைவு பெறும். வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். கோவில் தெப்பக்குளத்தில் சுற்றி தீபம் ஏற்றுவதற்காக அமைக்கப்பட்ட இடத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வர்.

எறிபத்த நாயனார் குரு பூஜை
9.3.2023 - வியாழன்


63 நாயன்மார்களில் வன் தொண்டர்கள் உண்டு. மென் தொண்டர்கள் உண்டு. தாங்கள் வணங்கும் சிவபெருமானையும், தாங்கள் பின்பற்றும் சிவநெறிக்கும் இடையூறு வந்து விட்டால், அதைச் சகித்துக் கொள்ள முடியாத முரட்டுத்தனமான குணமுடைய சில தொண்டர்களும் நாயன்மார்கள் வரிசையில் உண்டு.  

இவர்கள் இறைவன் மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் உணர்ச்சி வசப்பட்டு, பிறரை தண்டித்து விடுவர். அதே சமயம், பிறர் செய்யும் தவறுகளுக்காக தன்னையே தண்டித்துக் கொண்ட தொண்டர்களும் உண்டு. சாதாரண மனிதர்கள், நினைத்துக் கூட பார்க்க முடியாத இந்தச் செயல்களை, நாம் நம்முடைய சாதாரண விதி மற்றும் தர்மங்களைக் கொண்டு அளந்து விட முடியாது.

அதனால் தான் பட்டினத்தடிகள், வன் தொண்டர்கள் செயலை பட்டியலிட்டுப் பாடுகிறார்.
வாளால் மகவரிந் தூட்டவல் லேனல்லன் மாதுசொன்ன
சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன் தொண்டுசெய்து
நாளாறில் கண்ணிடத் தப்பவல் லேனல்லன் நானினிச்சென்று’
ஆளாவ தெப்படி யோதிருக் காளத்தி யப்பருக்கே


சிறுத்தொண்டர் போல, வாளால் மகவு அரிந்து ஊட்டும் வல்லமை இல்லை. திருநீலகண்ட நாயனார் போல மனைவி சொன்ன சபதத்தால் இளமை துறக்க வல்லேன் இல்லை. கண்ணப்ப நாயனார் போல் என்னுடைய கண்ணை எடுத்துக் கொடுக்கக் கூடிய வைராக்கியமும் மனமும் எனக்கு இல்லையே என்று பாடுகிறார். அப்படி என்றால் நம் நிலை என்ன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அந்த அடிப்படையில் விதிவிலக்கான இந்த தொண்டர்களின் செயலை நாம் இரு கை கூப்பி வணங்கி, அவர்களுடைய அருளைப் பெற முயல வேண்டுமே தவிர, இன்றைய மனநிலை, இன்றைய நிகழ்வுகள், இன்றைய தர்மங்களோடு இதை இணைத்துப் பார்த்து நாம் ஆராயவோ விமர்சிக்கவோ   முடியாது. அப்படிப்பட்ட தொண்டர்களில் ஒருவர்தான் எறிபத்த நாயனார். கையில் எப்பொழுதும் அவர் ஒரு கோடாலியோடு இருப்பார்.

ஒரு முறை அரசனின் பட்டத்து யானை, சிவகாமியாண்டார் என்ற வயதான சிவனடியார் எடுத்து வந்த பூஜை பொருட்களை தட்டி விட, அவர் அழுது கொண்டே நின்றார். அரசன் யானை எண்பதால், யானையையோ யானைப் பாகனையோ தண்டிக்கவும் முடியவில்லை. தன் நிலையை நினைத்து வருந்தினார். இதனைக் கேள்விப்பட்ட.  அடுத்த நிமிடம், கோபத்தோடு விரைந்து வந்த எறிபத்தர், அரசனுடைய பட்டத்து யானை என்றும் பார்க்காது யானையையும், யானைப் பாகனையும் தன் கையில் இருந்த மழுவால் (கோடரியால்) தண்டித்தார்.

இந்தச் செய்தியை ஓடிச் சென்று பலரும் அரசிடம் தெரிவித்தனர். சிவனடியார் ஒருவர் இக்கொடுஞ்செயலைச் செய்தார் என்று சொல்ல, அப்படி சிவனடியார் ஆத்திரத்தோடு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று விசாரித்தார். முழுக்கதையையும். அறிந்த புகழ்ச் சோழன், எறிபத்த நாயனார் செயல் சரிதான் என்றும், இதற்குத் தானும் பொறுப்பு என்றும் தன்னையே வாளால் தண்டித்துக் கொள்ள முனைய, எறிபத்த நாயனார், அந்த வாளை வாங்கி தன்னை மாய்த்துக் கொள்ள முயன்றார். இவை அத்தனையும் உணர்ச்சி வசத்தால் செய்யப்பட்ட செயல்கள் என்றாலும், இதனுடைய உயிர் துடிப்பாக இருப்பது சிவ நிந்தையைப் பொறுக்க முடியாமையும், சிவனுடைய பூஜை அவமதிப்பை தாங்க முடியாமையும், சிவ நெறியிலும் சிவபூஜையிலும் உள்ள மிக அழுத்தமான நம்பிக்கையும் ஆகும். அழுத்தமான சிவபக்தி என்பது தான் இதன் மையப் புள்ளி.

இச்செயல்களை திருவிளையாடலாக நடத்திய சிவபெருமான், இடப வாகனத்தில் உமையம்மையாரோடு தோன்றி, இவர்களை எல்லாம் மறுபடியும் உயிர்ப்பித்து அருளினார். இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் என்று இவருடைய புகழை திருத்தொண்டத் தொகையில் சுந்தரர் பாடுகின்றார்.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

Tags :
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!