×

கம்போடியாவில் சகஸ்ரலிங்கம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கடல் கடந்த நாடுகளில் சைவ சமயம் பரவியிருந்ததை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் நாடு கம்போடியா. இங்கு அங்கோர் வாட் என்னும் ஊர் உள்ளது. இங்கு ஏராளமான இந்துசமயக் கோயில்கள் உள்ளன. இவை யாவும் கால ஓட்டத்தில் கவனிப்பாரற்று அழிந்துள்ளன. இப்போது அரசாங்கம் புதுப்பித்துப் பாதுகாத்து வருகிறது.தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிகச் சிறிய நாடாக இருக்கும் கம்போடியா. தாய்லாந்திற்குக் கிழக்கிலும், வியட்நாமிற்கு மேற்கிலுமாக அமைந்துள்ளது. இங்கு முற்காலத்தில் இந்த மதம் செழிப்புடன் இருந்தது. அதைக் குறிக்கும் வகையில் பெரிய சிவாலயங்கள் உள்ளன.

கம்போடியாவின் தலைநகரான சியாம்ரீப் நகரிலிருந்து 35 கிலோ மீட்டரில் ஃபெனாம்கூலேன் என்னும் மலை உள்ளது. இதை இமயமலைபோல் புனித மலையாக அன்பர்கள் போற்றுகின்றனர். இந்த மலையில் உற்பத்தியாகும் சியாம்ரீப் என்னும் நதியைப் புனித நதியாகப் போற்றுகின்றனர். மலையின் நடுவேயுள்ள சமவெளியில் பெரும்பாறைகளின் மீது இந்த நதி தவழ்ந்து செல்கிறது. இந்த இடத்தை அடைவது சுலபமாக இல்லை. பாறைகளில் ஏறியே செல்ல வேண்டியுள்ளது.

வழி கடினமாக இருந்தாலும், இந்த இடத்தை அடையும் போது எல்லையற்ற இன்பம் உண்டாகிறது. இயற்கையின் பேரழகையும் அமைதியையும் இங்கே காண முடிகிறது. ஆறு தவழ்ந்தோடும் பாறைப் படுகையில் கூட்டம் கூட்டமாக லிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிலுள்ள 1008 லிங்கத் தொகுதி மனதைக் கவர்வதாக உள்ளது. நடுவில் உள்ள லிங்கம் 8 அடிக்கு 8 அடி சதுரமான ஆவுடையாருடன் உள்ளது. கோமுகி வடக்குநோக்கியுள்ளது. பெரிய வட்டமான உருத்திரபாகம் உயரம் குறைந்ததாகும். இதைச் சுற்றி 1008 லிங்கங்கள் உள்ளன.

இங்குள்ள லிங்கங்கள் அனைத்திற்கும் சதுரமான ஆவுடையார் உள்ளது. கண்ணாடி போன்ற நீர் லிங்கங்களைத் தழுவி ஓடுகிறது. வெள்ளம் வரும்போது லிங்கங்கள் தண்ணீருக்குள் மூழ்கி விடுகின்றன என்றாலும், தெளிவான நீரோட்டத்தில் காணும் போது அவை கற்பனைக்கெட்டாத அழகுடன் உள்ளன.லிங்கங்களோடு தேவர்கள், பிரம்மன், நந்தி முதலிய உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பாம்பணையில் துயிலும் அனந்தசாயி ரங்கநாதனின் வடிவம் அற்புதமானதாக உள்ளது.

ஏராளமான அன்பர்கள் இங்கு வந்து சிவலிங்கங்களை வழிபடுகின்றனர். இந்த லிங்கங்கள், ஆந்திர கன்னட மாநிலங்களில் ஆற்றுப்படுகைகளில் அமைக்கப்பட்டுள்ள லிங்கங்களைப் போல் இருப்பதால் இந்திய சிற்பிகளே இவற்றை அமைத்திருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அகத்தியர் இவற்றை அமைத்து வழிபட்டதாக அன்பர்கள் நம்புகின்றனர்.

தொகுப்பு: காயத்ரி

Tags : Cambodia ,
× RELATED கம்போடியாவில் மசினகுடி வாலிபர் மாயம்:...