பஞ்ச கிருஷ்ண தலங்கள்

1 திருக்கோவிலூர்: மிருகண்டு உள்ளிட்ட பல்வேறு முனிவர்கள் வாமன அவதாரத்தை தரிசிக்க தவமியற்றினார்கள். ஒரே நேரத்தில் வாமன, திருவிக்ரம அவதார கோலத்தையே மிருகண்டு முனிவர் காண வேண்டினார். எதுவும் உண்ணாது விரதமிருந்த மிருகண்டு முனிவரின் வைராக்கியத்தை பிரம்மன் கண்டு வியந்தார். ‘‘மிருகண்டு முனிவரே தாங்கள் கிருஷ்ண பத்திரா நதிக்கரையில் கிருஷ்ண க்ஷேத்ரத்தில் கிருஷ்ணன் எனும் திருநாமத்தோடு பகவான் கோயில் கொண்டிருக்கும் தலமே தவமியற்ற சரியான இடமாகும்’’ என்று பணித்தார். மிருகண்டு முனிவர் இந்த கிருஷ்ண க்ஷேத்ரமான திருக்கோவலூரில் வந்து தவமியற்றி வாமன, திருவிக்ரம தரிசனத்தை கண்டார்.

இந்த தலத்திற்கு ஆதியில் கிருஷ்ணன் கோயில் என்றே பெயர் இருந்ததாக வடமொழி நூல்கள் கூறுகின்றன. சதுர் யுகங்களுக்கு முற்பட்ட தொன்மையை உடையது. கோபாலன் எனும் சொல்லே கோவாலன் எனத் திரிந்தது. அதுவே திருக்கோவலூர் என்றும் கோவிலூர் என்றும் ஆனது. மிருகண்டு முனிவருக்கு திருவிக்ரமராக அவதாரத்தைக் காட்டிக் கொடுக்கும் முன்பு கிருஷ்ணனாக பகவான் எழுந்தருளியிருந்த சந்நதி தற்போது இத்தலத்தின் முன்புறத்திலேயே உள்ளது. சாளக்கிராமத் திருமேனியுடன் ஆதிசந்நதியில் அருள்பாலிக்கிறார்.

இங்கு கிருஷ்ணன் ஆனந்தமாக உறைவதை எண்ணிய துர்க்கை விந்திய மலையிலிருந்து புறப்பட்டு தானும் இங்கு கோயில் கொண்டாள். துர்க்கைக்கு இங்கே கோயிலும், வழிபாடுகளும் உண்டு. இதை திருமங்கையாழ்வார், ‘‘விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்ட கடிபொழில்’’ என்று புகழ்கிறார். கிருஷ்ண பத்திரா நதியைத்தான் பெண்ணை ஆறு என்கிறோம். முதன் முதலாக ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்யதேசம் இதுதான்.

வையம் தகளியாய்... என்று பொய்கையாழ்வாரும், அன்பே தகளியாய் என்று பூதத்தாழ்வாரும், திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று பேயாழ்வாரும் உருகி உருகி பாடிய திவ்யதேசம் இது. திவ்ய பிரபந்தத்தின் விளைநிலமாக இருப்பதால் இத்தலம் ஜீவாத்மாக்களை கடைத்தேற்றும் முக்தி க்ஷேத்ரமாகவும் விளங்குகிறது. விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற ஊர்களிலிருந்து திருக்கோவிலூரை எளிதில் அடையலாம்.

2 திருக்கபிஸ்தலம்: கஜேந்திர மோட்சம் நிகழ்ந்த தலம் இது. இந்திரத்யும்னன் எனும் மன்னன் எம்பெருமான் விஷ்ணுவையே தன்னுடைய இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தான். அப்படித்தான் ஒருமுறை விஷ்ணு பூஜையில் ஈடுபட்டிருந்தபோது துர்வாசர் அவனைக் காண வந்தார். என்னதான் தெய்வ வழிபாடு செய்தாலும் சரிதான், குரு வந்தால் முதல் வணக்கம் குருவுக்குத்தான் என்பதுதான் நமது மரபு. குருவை காக்க வைப்பதை தெய்வம் கூட பொறுக்காது. மன்னனின் மனம் மாலனிடம் கிடந்தது. துர்வாசரின் மனம் கோபத்தில் கொந்தளித்தது.

காத்திருந்து பார்த்தார். அவனோ கண் திறக்கவே மறந்து போனான். உடனே தன் இயல்பான கோபத்தை சாபமாக்கினார். உரத்த குரலில் சாபம் விடுத்தார்.

எப்போதுமே துர்வாசரின் கோபத்திற்குள் ஞானத் தீதான் கொப்பளிக்கும். அவரால் சாபம் பெற்றவர்கள் இறைவனைத்தான் அடைவார்கள். யாரை நோக்கி சாபம் விடுக்கிறாரோ அது அவர்களை இன்னும் இறைவனை அடையும் பாதையில் வேகத்தை கூட்டும்படியாகவே இருக்கும். அப்படித்தான் இங்கும் இந்திரத்யும்னனை நோக்கி, ‘‘மதம் பிடித்த யானையாக மாறுவாய். ஆனால், அப்போதும் மாலனிடம் பக்தியை செய்தபடி இருப்பாய்’’ என்று சாபத்திற்குள்ளும் சத்தியத்தை அடையும் பாதையை காட்டினார்.

துர்வாசரின் சாபத்தினால் மன்னன் கஜேந்திரன் என்ரு யானையானான். இத்தலத்து குளத்தில் நீர் குடிக்க இறங்கினான். கஜேந்திர யானை சட்டென்று நிலைகுலைந்தது. தனது காலை ஓர் முதலை பிடித்திருந்தது. முதலையும் உதற அது முடியாது அங்கேயே நின்றது. திருமாலை தொழுதது. முன் ஜென்மத்தில் ஹுஹூ எனும் கந்தர்வனாக இருந்தவனே தேவலர் எனும் முனிவரின் சாபத்தினால் முதலையாக வந்து காலைப்பற்றியது. ‘‘எப்போது கஜேந்திரனின் காலைப் பிடிக்கிறாயோ அப்போதே உனக்கு முக்தி’’ என்று தேவலர் தேவனை அடையும் வழியையும் சொன்னார், இங்கே கஜேந்திரன் இது முதலையா... பிறவித் தளையா... இரண்டும் ஒன்றுதானே எனும்படியாக கண்ணீர் வடித்தது. ஆதிமூலமே.... என்று இருதயத்தின் அடியிலிருந்து பிளிறியது. அப்போது கருட வாகனத்தில் வந்து பெருமாள் மீட்டுச் சென்றார். இந்தப் புராணம் நிகழ்ந்ததே இத்தலமாதலால் மூலவருக்கு கஜேந்திர வரதர் எனும் திருநாமம் ஏற்பட்டது. திருவையாறு செல்லும் பாைதயில் இந்த திருத்தலம் உள்ளது.

3 திருக்கண்ணங்குடி: வசிஷ்டர் வெண்ணையினால் கிருஷ்ணனை செய்தார். வெண்ணெயைவிட வேகமாக அவரின் மனம் கிருஷ்ண பக்தியில் கரைந்தது. இவரின் பக்தியை விட கிருஷ்ணனின் கருணை அதிவேகமாக வசிஷ்டரை அடைந்தது. கிருஷ்ணன் குழந்தை கோபாலனாக வடிவம் கொண்டான். குடுகுடுவென்று ஓடிவந்தான். வசிஷ்டர் பூஜிக்கும் வெண்ணையை கையில் ஏந்தினான். கடைவாயிற் விட்டு விழுங்கினான். வசிட்டர் அடேய்....அடேய்... என்று குழந்தையை தொடர்ந்தார். குழந்தை கிருஷ்ணாரண்யம் எனப்படும்.

திருக்கண்ணங்குடி எனும் அடர்ந்த காட்டுக்குள் ஓடியது. மகிழ வனத்தின் வாசம் வசிஷ்டரை ஈர்த்தது. கானகத்திற்குள் கிருஷ்ண தியானத்திலிருக்கும் ரிஷிகள் கண்ணன் ஓடிவருவதை அறிந்தனர். கண்கள் திறந்து தொலைதூரம் வரும் கோபாலனை நோக்கி ஓடினர். பக்தியால் பொங்கி வழியும் அவர்கள் உள்ளம் கண்ட கண்ணன் உருகினான். ஓரிடத்தில் நின்றான். அவர்கள் மீது கருணை கட்டுக்கடங்காது அணையை உடைத்துக்கொண்டு பாய்ந்தது. அவர்கள் அன்பெனும் வெள்ளத்திற்குள் மூழ்கினர். ரிஷிகள் கண்ணீரால் கரைந்தனர்.

‘‘என்னைத் வசிஷ்டர் துரத்தி வருகிறார். வேண்டிய வரத்தை சீக்கிரம் கேளுங்கள்‘‘ என்றான் குழந்தைக் கண்ணன். ‘‘உன்னிடம் வேறென்ன கேட்பது கண்ணா. இப்படி உன்னைக் காணத்தானே இப்படி நீண்ட காலம் இங்கு தவமியற்றுகிறோம். அதனால், இவ்விடத்திலேயே நிரந்தரமாக எப்போதும் காட்சியருள வேண்டுமென்று’’ வேண்டிக் கொண்டனர். அவர்கள் சொல்லி முடிப்பதற்குள் தடேரென்று கிருஷ்ணனின் பாதாரவிந்தத்தில் சரிந்தார் வசிஷ்டர். மகரிஷி தொழுததாலேயே அவ்விடம் சட்டென்று தேஜோமயமாக ஜொலித்தது.

ராஜகோபுரங்களும், விமானங்களும் தானாகத் தோன்றின. பிரம்மனும், தேவர்களும் வந்து குவிந்தனர். ரிஷிகள் கூடிக் குளிர்ந்தனர். பிரம்மா பிரம்மோத்ஸவம் நடத்தி எம்பெருமானை வழிபட்டார். இப்படி கண்ணன் கட்டுண்டு குடியமர்ந்ததால் கண்ணங்குடியாயிற்று. அழகிய தமிழில் திருக்கண்ணங்குடி என்று ஆழ்வார்கள் அன்பாக அழைத்தனர். மூலவர் லோகநாதர் என்றும், தாயார் லோகநாயகி எனும் திருநாமங்களோடு நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். திருவாரூர் சாலையில் ஆழியூர் பள்ளிவாசல் சென்றால் எளிதில் இந்த திருத்தலத்தை  அடையலாம்.

4 திருக்கண்ணமங்கை: கிருஷ்ணாரண்யம் எனும் புண்ணிய பிரதேசத்திற்குள்தான் இந்த தலம் வருகிறது. ஆதியில் பிருகு முனிவருக்கு மகளாக அவதரித்தாள் திருமகள். அதுவும் திருப்பாற்கடலில் தோன்றியதுபோல் இத்தலத்தின் திருக்குளத்தில் தோன்றிய பிராட்டியை பார்க்க எல்லா தேவர்களும் கூடினார்கள். ஸ்தோத்திரங்கள் கூறி தொழுதார்கள். ஐராவதம் தங்கக் கலசத்தில் தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்தது. அத்தீர்த்தம் இத்திருக்குளத்திலும் பரவியது. அதனேலேயே தாயார் அபிஷேகவல்லி எனும் திருநாமம் பூண்டாள். கிருஷ்ண மங்கா என்றே பிருகு மகரிஷி அழைத்து வந்தார். அதுவே திருக்கண்ணமங்கை என்று தாயாரின் பெயராலேயே இத்தலம் வழங்கப்படுகிறது.

‘தன் மகளை பகவானுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டுமே, எப்படி வருவாரோ’ என்று பிருகு அவ்வப்போது கவலையோடு இருப்பார். பகவான் பக்தவத்சலன் எனும் திவ்யமான நாமத்தோடு வந்து கிருஷ்ண மங்கையை கரம் பிடித்தார். மங்களமான திருமகள் இங்கு மங்களமான கோலத்தில் அருள்பாலிக்கிறாள். லட்சுமி தவமியற்றியதால் லட்சுமி வனம் என்றும், திருமணம் நடைபெற்றதால் கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம் என்றழைக்கப்படுகிறது. திருமணத்தை காண தேவர்கள் கூட்டமாக குவிந்ததோடு எப்போதும் இக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டுமென தேனீக்களாக உருவெடுத்து கூடு கட்டி அதிலிருந்து பார்த்து மகிழ்கிறார்கள்.

இன்றும் தாயார் சந்நதியின் வடபுறத்திலுள்ள மதிலின் சாளரத்திற்கு அருகில் தேன் கூடு உள்ளது. திருமங்கையாழ்வார் ஒன்பது பாசுரங்களை இத்தலத்தில் சாதித்துவிட்டு புரிகிறதா என்று கேட்கிறார். ‘‘என்ன அர்த்தம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார், பெருமாள். திருமங்கையாழ்வார் தன்னுடைய பத்தாவது பாசுரத்தில் இதோ இப்படி கூறுகிறார்.

‘‘மெய்மை சொல்லில் வெண் சங்க

மொன்றேந்திய

கண்ண, நின்தனக்கும் குறிப்பாகில்

கற்கலாம் கவியின் பொருள்தானே

‘‘கிருஷ்ணா... வெண் சங்கத்தை ஏந்திக் கொண்டும், சர்வ வியாபியாக இருந்து கொண்டிருக்கும் நீயே ஆலோசித்துக் கொண்டிருக்கிறாயே. பரவாயில்லை புரிந்து கொள்ள வேண்டுமெனில் அடியேனிடத்தில் சிஷ்யனாக வாரும்’’ என்றே அழைத்து விட்டார். உடனே, எம்பெருமானுக்கு திருமங்கையாழ்வாரின் பாடல்களை கற்க பேராவல் பொங்கியது. இதற்காகவே பெரியவாச்சான் பிள்ளை என்கிற மேதாவியாக அவதாரம் செய்தார். இவருக்கு கற்றுக் கொடுப்பதற்காக திருமங்கையாழ்வாரே நம்பிள்ளையாகவும் அவதரித்தார்.

ஆவணி ரோகிணியில்தான் கண்ணபிரான் அவதரித்தான். அதே ரோகிணி நட்சத்திரத்தில் பெருமாள், பாடம் கேட்கும் பொருட்டு பெரிய வாச்சான் பிள்ளையாக அவதரித்தார். இவருக்கு பால பிராயத்தில் கிருஷ்ணன் எனும் திருநாமமும் உண்டு. அதேபோல் கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்த திருமங்கையாழ்வார், அதே கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தில் நம்பிள்ளையாக அவதரித்தார். என்னவொரு பொருத்தம் பாருங்கள். திருவாரூரிலிந்து 6 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது.

5 திருக்கண்ணபுரம்: ‘‘அஷ்டாட்சரமான ‘நமோ நாராயணா‘ எனும் மந்திரத்தை எந்த தலத்தில் அமர்ந்து சொன்னால் பகவானின் தரிசனம் கிட்டும். அப்படிப்பட்ட க்ஷேத்ரத்தை எனக்குக் கூறுங்கள்‘‘ என்று கண்வ முனிவர் நாரத மகரிஷியிடம் வேண்டினார். ‘‘கிழக்கு சமுத்திரத்திற்கு சமீபத்தில் திருக்கண்ணபுரம் எனும் கிருஷ்ண க்ஷேத்ரம் இருக்கிறது. அங்கு சௌரிராஜன் எனும் திருநாமத்தோடு கடலுக்கு அருகே கடல் மோதுவதுபோல கருணைக் கடலாக சேவை சாதிக்கிறார். க்ஷேத்ரம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம் புஷ்கரணி, விமானம் இந்த ஏழும் சேர்ந்திருப்பது மிகவும் அரிதானது. க்ஷேத்ரம் இருக்கும் சமுத்திரம் இருக்காது. வனம் இருக்காது. ஆனால், அங்கு ஏழும் உண்டு.

கிருஷ்ண க்ஷேத்ரமாகவும், வனத்தில் கிருஷ்ணாரண்யமாகவும், காவிரி நதி பாய்ந்து வளமூட்டியபடியும், கிழக்கு கடலின் கரையினிலும் (வங்காள விரிகுடா), உபரிசிரவசு மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட கண்ணபுரம் என்கிற நகரமும், நித்ய புஷ்கரணியும், உத்பாலவதாக விமானம் என்று ஏழும் ஒன்று சேர்ந்து விளங்குகிறது. மேலும், முக்தியளிக்கும் வேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், திருவரங்கம், தோத்தாத்ரி, சாளக்கிராமம், பத்ரிகாஸ்ரமம், நைமிசாரண்யம் என்று ஒவ்வொரு தலமும் அஷ்டாட்சரத்தினுள் ஒவ்வோர் எழுத்தாக விளங்குகின்றன. ஆனால், கிருஷ்ணாரண்ய சௌரிராஜனோ அஷ்டாட்சர எழுத்துக்களின் மொத்த சொரூபமாக இலகுகிறார். எனவே, அங்கு சென்று மந்திரத்தை ஜபிக்க தரிசனம் நிச்சயம்’’ என்று நாரத மகரிஷி மகிமைகளை விஸ்தாரமாகக் கூறி அனுப்புகிறார்.

கண்வ முனிவருக்கு அதிசுந்தரமான தரிசனத்தை ஸ்ரீ கிருஷ்ணர் அளிக்க அந்த தரிசனத்தையே நினைத்து நினைத்து ஞானமயமானார். இதனாலேயே கண்வபுரம் என்று பெயர் பெற்று, அதுவே கண்ணபுரமாக மாறியது. இங்கு சேவை சாதிக்கும் சௌரிராஜன் சாட்சாத் கிருஷ்ணனே ஆகும். கோயிலின் அர்ச்சகர் ஒருவர் தன் காதலிக்கு சூடிய மாலையை பெருமாளுக்கு சாற்றி விட்டார். கோயிலுக்கு வந்திருந்த சோழ மன்னனுக்கு சூட்டிய மாலையை பிரசாதமாகத் தந்தார். அதற்குள் இருக்கும் தலைமுடியை கண்டு மன்னன் கோபம் கொண்டான்.

இது எப்படி வந்தது? என்று வெகுண்டான். அர்ச்சகர், ‘‘பெருமாளுக்கு சௌரி உள்ளது. அதுதான் இது’’ என்று பொய் கூறி பெருமாளின் சரணத்தில் விழுந்தார். மறுநாள் மன்னன் வந்து பார்த்தபோது தலையில் முடியோடே சௌரிராஜனாக சேவை சாதித்தார். நன்னிலத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் இந்த தலம் உள்ளது.

Related Stories: