×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

516. விநயித்ரே நமஹ (Vinayithrey namaha)


காஞ்சீபுரத்தைச் சேர்ந்த நடாதூர் அம்மாள் என்ற மகானும் அவரது சீடர்களும் திருவேங்கட மலையை நோக்கி யாத்திரையாகச் சென்றார்கள். அது கோடைக்காலமாக இருந்தபடியால் வெயிலில் பயணித்த அவர்களுக்குக் களைப்பும் அதீதப் பசியும் ஏற்பட்டது. வழியில் எங்காவது தூய்மையான, இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவு கிடைக்குமா என்று தேடினார்கள். எங்கு தேடியும் உணவு கிடைக்கவில்லை.

இப்படி அடியார்களின் கோஷ்டி பசியால் வாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஒரு வெள்ளி கங்காளத்தோடு ஒரு சிறுவன் அங்கே வந்தான். அந்தச் சிறுவன் தன் உடலெங்கும் பன்னிரண்டு திருமண் காப்புகளை அணிந்திருந்தான். அவன் நடாதூர் அம்மாளை வணங்கி விட்டுப் பணிவோடு நின்றான்.

யார் அப்பா நீ என்று விசாரித்தார் நடாதூர் அம்மாள். சுவாமி நான் திருவேங்கட மலையில் இருந்து வருகிறேன். திருமலையில் பெருமாளுக்குக் கைங்கரியம் செய்து வரும் ராமாநுஜரின் சீடரான அனந்தாழ்வானின் சீடன் நான். நீங்கள் இத்தனை பேரும் பசியோடு வருவீர்கள் என்பதால் அனந்தாழ்வான் உங்களுக்கு உணவளித்துவிட்டு வரச் சொன்னார் என்று பதில் அளித்தான் சிறுவன்.

நாங்கள் வருகிறோம் என்று அனந்தாழ்வானுக்குச் செய்தி அனுப்பவே இல்லையே அவர் எப்படி அறிந்துகொண்டு உணவு கொடுத்து அனுப்பினார் என்று நடாதூர் அம்மாள் வினவ, அதெல்லாம் எனக்குத் தெரியாது சுவாமி. எனது குரு அனுப்பி வைத்தார், அடியேன் உணவு கொண்டு வந்தேன். அவ்வளவு தான் என்று விடையளித்தான் சிறுவன்.

சற்று யோசித்த நடாதூர் அம்மாளுக்குச் சிறுவன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவன் உண்மையிலேயே அனந்தாழ்வானின் சீடன்தானா, அல்லது தூய்மையற்ற, கெடுதல் விளைவிக்கக்கூடிய உணவை வேறு யாராவது இவன் மூலம் கொடுத்து, அதை அடியார்கள் எல்லோரும் சாப்பிட்டுப் பெரும் தீங்கு நேர்ந்தால் என்ன செய்வது என்று பலவாறு சிந்திக்கத் தொடங்கினார் நடாதூர் அம்மாள்.

சிறுவனைப் பார்த்து, நீ அனந்தாழ்வானின் சீடன் என்றால், உன் குருவை வணங்கும் விதமாக நீ தினமும் கூறும் தனியன் சுலோகத்தைச் சொல் என்றார் நடாதூர் அம்மாள். சற்றும் தயங்காமல்,

அகிலாத்ம குணாவாஸம் அஞ்ஞான திமிராபஹம்
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அனந்தார்ய தேசிகம்


- என்று ஸ்லோகத்தைச் சொல்லி, இதுவே அனந்தாழ்வானின் தனியன் என்றான் சிறுவன்.

அதன்பின் அவன்மீது நம்பிக்கை கொண்ட நடாதூர் அம்மாள், அவன் கொண்டு வந்த வெள்ளி கங்காளத்தில் உள்ள உணவைத் தன்னுடன் வந்த அடியார்க்குப் பகிர்ந்தளித்துத் தாமும் உண்டார். அவர்கள் உண்டபின், கங்காளத்தை நீங்களே மலைக்கு மேல் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டுச் சிறுவன் சென்று விட்டான்.

கங்களாத்தோடு நடாதூர் அம்மாளும் சீடர்களும் திருமலை மீது ஏறிச் சென்றார்கள். அதே நேரம் திருவேங்கடமலையில் ஒரே கூச்சல், குழப்பம். திருமலையப்பனின் வெள்ளிக் கங்காளத்தைக் காணவில்லை என்று ஒரே பரபரப்பு. கங்காளத்தோடு வரும் நடாதூர் அம்மாள் கோஷ்டியைப் பார்த்தவாறே, அனந்தாழ்வான் அவரிடம் விரைந்தோடி வந்து, இந்த கங்காளம் உங்களிடம் எப்படிக் கிடைத்தது என்று கேட்டார். நடந்தவற்றை எல்லாம் விளக்கினார் நடாதூர் அம்மாள்.

நான் எந்த ஒரு சீடனையும் அனுப்பவில்லை, நீங்கள் சொல்வது போல் என்னைக் குறித்துத் தனியனும் கிடையாது, அப்படி ஒரு சீடனும் எனக்குக் கிடையாது என்றார் அனந்தாழ்வான். அப்படியானால் இவை அனைத்தும் மலையப்பனின் லீலை. ஆஹா அனந்தாழ்வானே உங்கள் சீடனாக அந்த பகவானே வந்து எங்களுக்கு அருள்புரிந்து எங்கள் பசியைப் போக்கி உள்ளான், என்றார்.

இதைக் கேட்டவாறே மலையப்பனிடம் ஓடிய அனந்தாழ்வான், இறைவா என்னைக் குறித்த ஒரு தனியன் சுலோகத்தை நீயே இயற்றி உன் திருவாயால் சொன்னாயா என்று உருகினார். அதற்குப் பதில் அளித்த மலையப்பன், என் பக்தர்களை ராஜகுமாரர்கள் போல் வைத்துப் பாதுகாப்பவன் நான். ராஜகுமாரன் பசியோடு இருப்பதை ராஜா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாரா அதனால்தான் கங்காளத்தோடு நானே ஓடினேன் என்றார் மலையப்பன்.

இப்படி ராஜகுமாரர்களைப் போல் தனது அடியார்களைக் கருதி அவர்களைப் பேணிக் காப்பதால் வினயிதா என்று திருமால் அழைக்கப்படுகிறார். வினயிதா என்றால் பேணிக்காப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 516-வது திருநாமம்.வினயித்ரே நமஹ என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களை ராஜகுமாரர்கள் போல் வாழவைத்து மலையப்பன் காத்தருள்வார்.

517. ஸாக்ஷிணே நமஹ (Saakshiney namaha)

ஓர் ஊரில் ஓர் அண்ணனும் தங்கையும் வாழ்ந்துவந்தார்கள். இருவரும் சகோதர-சகோதரி பாசத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தார்கள். தங்கைக்குத் திருமண வயது வந்தவாறே அவளுக்கு ஏற்ற மணமகனைத் தேடும் பணியில் அண்ணன் ஈடுபட்டார். ஆனால் தங்கையோ வேறொரு நபரை விரும்பினாள், அதைத் தன் அண்ணனிடம் சொல்லவும் தயங்கினாள். இந்நிலையில் அண்ணன் தனது தங்கைக்குத் திருமண ஏற்பாடுகளை எல்லாம் செய்து கொண்டிருக்க, அண்ணனுக்குத் தெரியாமல் தான் விரும்பிய அந்த நபரை மணந்து கொள்ள ஊரை விட்டுச் சென்று விட்டாள் தங்கை. விரும்பியவரை மணக்கவும் செய்தாள். தங்கையின் செயலால் அண்ணன் வேதனையுற்றாலும் கூட, தன்னைத் தேற்றிக் கொண்டு அவள் இருப்பிடத்தை அறிந்து அவளைக் காணச் சென்றார் அண்ணன்.

ஆனால் அங்கே போய்ப் பார்க்கையில், தங்கை தேர்ந்தெடுத்த வாழ்க்கை சிறப்பானதாக இல்லை என்பதை அறிந்தார் அண்ணன். அவளது கணவரின் வியாபாரத்தில் பல சிக்கல்களும் கடன் தொல்லைகளும் இருந்தன. இருவரும் கடுந்துயரத்தில் இருப்பதை அறிந்துகொண்டார் அண்ணன். தங்கையின் உயிருக்கும் அவளது கணவரின் உயிருக்கும் சிலரால் ஆபத்து இருப்பதையும் உணர்ந்தார் அண்ணன்.

இந்தச் சூழலில்தான் நேரடியாகத் தங்கைக்கு உதவினால் அது தங்கைக்குக் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துமோ என்று சிந்தித்தார் அண்ணன். தங்கை நன்றாக வாழவேண்டும் என்பது தானே நமது லட்சியம். நாம் செய்கிறோம் என்பதை வெளிக்காட்டாமல் தங்கையையும் அவள் குடும்பத்தையும் காக்கலாமே என்று தீர்மானித்தார் அண்ணன்.தங்கையை யாரேனும் தாக்க வந்தால் மறைமுகமாக அண்ணன் அவர்களுடன் சண்டையிட்டு வீழ்த்தினார். தங்கைக்கு நீதிமன்றத்தில் வழக்கு வந்தால் மறைமுகமாக வழக்குரைஞரை வைத்து வாதாடி வெற்றிபெற்றுத் தந்தார் அண்ணன். இப்படிப் பல வகைகளில் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்கையைக் காப்பாற்றி வந்தார் அண்ணன்.

எல்லாம் தானே நடக்கிறது என்று நினைத்திருந்த தங்கை, ஒரு சூழலில் யாரோ ஒருவர் நமக்கே தெரியாமல் நம்மிடம் எதையுமே எதிர்பாராமல் நமக்குத் துணைநிற்கிறார் என்று புரிந்துகொண்டாள். இப்படி உதவி செய்யக் கூடியவர் என் அண்ணனாகத் தான் இருக்க வேண்டும் என்று சிந்தித்து, அண்ணா என்று அழைத்தாள் தங்கை. அண்ணன் எதிரே வந்தார். தங்கை தனது கண்ணீரால் அண்ணனின் பாதங்களைக் கழுவினாள். அண்ணனும் அவளை ஏற்றார்.

ஸஹஸ்ரநாமத்தில் எதற்காகத் திரைக்கதை வந்தது என்று உங்களுக்குத் தோன்றலாம். இது திரைக்கதை அன்று, நம் வாழ்க்கைக் கதை. அந்தத் தங்கையை அண்ணன் வளர்த்து ஆளாக்கிப் படிக்க வைத்தது போல் இறைவன் நமக்குப் பிறவியும் ஞானமும் தந்து அந்த அறிவை வளர்க்கவும் செய்கிறார். தங்கையின் திருமணத்துக்காக அண்ணன் பல முயற்சிகள் எடுத்ததுபோலே நாம் முக்தி அடைவதற்காக ஒவ்வொரு நொடியும் இறைவன் முயல்கிறான்.

ஆனால் தங்கை தனது வாழ்வைத் தானே தேர்ந்தெடுக்க முடிவெடுத்துப் பிரிந்து சென்றது போல், நாமும் இறைவனின் கையை எதிர்பாராமல் என்னை நானே பார்த்துக் கொள்கிறேன் என்ற செருக்கோடு வாழ்கிறோம். ஆனாலும் தங்கையை அண்ணன் தேடிச் சென்றது போல், நம்மை விடாமல் பின்தொடர்ந்து வருகிறான் இறைவன்.ஒரு பிறவியில் உள்ள அண்ணன்-தங்கை உறவுக்கே இவ்வளவு பாசம் என்றால், என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நமக்கு அனைத்து வித உறவுமாகவும் இருக்கும் இறைவன் நம்மீது எவ்வளவு அன்பு கொண்டிருப்பான்.

தங்கைக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் மறைமுகமாக அண்ணன் காப்பாற்றியது போல் நமக்கு ஏற்படும் எத்தனையோ ஆபத்துகளில் இருந்து தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் காத்துக்கொண்டே இருக்கிறான். ஆனால் என்றோ ஒரு நாள் இறைவன் தான் நமக்கு இத்தனை பேருதவிகளும் செய்தான் என்ற புரிதல் ஏற்படும் போது, இறைவா என்று அவன் திருவடிகளை நாம் பற்றினால், நம்மை நிச்சயம் அங்கீகரித்து ஏற்று முக்தி என்ற பேரின்பப் பெருவாழ்வைத் தந்தருள்வான் என்பதில் ஐயமில்லை.

இப்படி நம்மைக் காக்கவேண்டும் என்பதற்காக எந்நேரமும் நம்மைக் கண்காணித்துக்கொண்டே இருப்பதால் திருமால் ஸாக்ஷீ என்று அழைக்கப்படுகிறார். ஸாக்ஷீ என்றால் அனைவரையும் கண்காணிப்பவர் என்று பொருள். பிரபஞ்சத்தின் மிகப்பெரிய கண்காணிப்புப் புகைப்படக் கருவியாக விளங்கும் திருமாலை ஸாக்ஷீ என்று ஸஹஸ்ரநாமத்தின் 517-வது திருநாமம் சொல்கிறது.ஸாக்ஷிணே நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை எப்போதும் திருமால் துணைநின்று காத்தருள்வார்.

518. முகுந்தாய நமஹ (Mukundhaaya namaha)


நம்மாழ்வார் முக்தி அடையும் தருணம் வந்தது. அழகர் மலையில் எழுந்தருளியிருக்கும் கள்ளழகர் நம்மாழ்வார் முன்னே தோன்றி, நீங்கள் இந்த சரீரத்துடன் வைகுண்டம் வாருங்கள் என்று அழைத்தார். இறைவா என்ன சொல்கிறாய் இந்த சரீரத்தில் பற்று வைக்கக் கூடாது என்று தேறி அடியேன் முக்திக்கு வரப் பார்க்கிறேன். நீயோ இந்த சரீரத்துடன் வைகுண்டத்துக்கு வரச் சொல்கிறாயே என்று கேட்டார் நம்மாழ்வார்.

அதற்கு கள்ளழகர், ஆழ்வீர் உடல் என்பது தள்ளத் தக்கது தான். அதில் பற்று வைக்கக் கூடாதுதான். ஆனால் அந்தச் சட்டம் மனிதர்களுக்குத் தான் பொருந்தும். நான் இறைவன். எனது அடியாரான உங்களது திருமேனியில் எனக்கு மிகுந்த அன்பு உண்டு. மற்றைய மனிதர்களின் உடல் போல் சாதாரண உணவுப் பண்டங்களை உண்டு வளர்ந்த உடல் அன்றே உங்களது திருமேனி. என்னையே உண்ணும் சோறாகவும் பருகும் நீராகவும் தின்னும் வெற்றிலையாகவும் உட்கொண்ட தெய்வீகத் திருமேனி ஆயிற்றே. அதனால் உங்களைப் போன்ற மகான்களின் உடலை நான் வெறுத்துத் தள்ள மாட்டேன், விரும்பி அனுபவிப்பேன் என்றார் அழகர்.

இப்படித் தனது திருமேனியில் திருமால் செலுத்திய அன்பை நம்மாழ்வார் திருவாய்மொழியில்,

திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண்திருவேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே


- என்று பாடுகிறார். திருமாலிருஞ்சோலை என்னும் அழகர் மலையை விடவும், திருப்பாற்கடலை விடவும் நம்மாழ்வாரின் தலையில் அதிக விருப்பம் கொண்டிருக்கிறார் திருமால். வைகுண்ட லோகத்தை விடவும், திருவேங்கட மலையை விடவும் நம்மாழ்வாரின் திருமேனியை அதிகமாக விரும்புகிறார் திருமால். இன்னதென்று சொல்ல முடியாதபடி நம்மாழ்வாரின் உயிர், மனம், மொழி, மெய் ஆகியவற்றை விரும்புகிறார் திருமால்.

அதனால் ஆழ்வாரை ஒருநொடியும் பிரியாமல் அவரோடேயே திருமால் திகழ்கிறார் என்பது பாசுரத்தின் கருத்து. இந்நிலையில் நம்மாழ்வார் திருமாலுக்கு அறிவுரை சொன்னார். இறைவா நீ தானே சாஸ்திரங்களில் சரீரத்தை விட்டு விட்டுத் தான் முக்தி அடைய முடியும் என்று விதித்திருக்கிறாய். நீ விதித்த விதியை நீயே மீறிக் கெட்ட பெயர் வாங்கிக்கொள்ளாதே என்றெல்லாம் சொன்னார் நம்மாழ்வார்.

அதற்கு திருமால், தலையிலே வாசனைக்காக வேர் சூடிக்கொள்ளும் பெண்கள் அந்த வேரில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணையும் சேர்த்து அணிவார்கள் தெரியுமா வேருடன் மண்பற்று சேர்ந்திருந்தால் தானே முழுமையான நறுமணம் இருக்கும் அவ்வாறே உங்களைப் போன்ற ஞானிகளின் சரீரமும் ஏற்றம் மிக்கது. அந்த சரீரத்தோடு உங்களை ஏற்றுக் கொண்டால்தான் நான் பரம ரசிகன் என்று அர்த்தம் என்றார்.

என் மீது உனக்கு இவ்வளவு அன்பு இருக்கிறது என்றால் ஏன் இத்தனை நாள்கள் நான் பிரார்த்தித்தும் எனக்கு முக்தி அளிக்காதிருந்தாய் என்று கேட்டார் நம்மாழ்வார். அதற்கு அழகர், நீங்கள் முதல் பாட்டு பாடியதுமே நான் முக்தி அளித்திருந்தால், நான்கு வேத சாரமான நான்கு பிரபந்தங்கள் உங்கள் திருவாயில் இருந்து எப்படித் தோன்றியிருக்கும் உங்களைக் கொண்டு உலகைத் திருத்தவே இத்தனை காலம் உங்களை உலகில் வைத்தேன் என்று விடையளித்தார்.

அப்படி என்னைக் கொண்டு உலகை நீ திருத்த நினைத்தால், நான் மற்றவர்க்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். எனவே தள்ளத் தக்க எனது உடலை விட்டு விட்டுத் தான் உன்னிடம் வருவேன் என்றார் நம்மாழ்வார். அதைத் திருமாலும் ஏற்று நம்மாழ்வாருக்கு முக்தி அளிக்க,

சூழ்விசும்பு அணிமுகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரை கையெடுத்து ஆடின
ஏழ்பொழிலும் வளம் ஏந்திய என்
அப்பன்வாழ்புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே


- என்று பாடியபடி நம்மாழ்வாரை சரீரத்தை விட்டு வைகுண்டலோகத்தை அடைந்தார்.

முக்தியை விரும்பித் தன் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றிய நம்மாழ்வாரைப் போன்ற அடியார்களுக்கு முக்தி அளிப்பதால், திருமால் முகுந்த என்று அழைக்கப்படுகிறார். முகுந்த என்றால் முக்தி அளிப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 518-வது திருநாமம்.முகுந்தாய நமஹ என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு வைகுண்டப் பெருவாழ்வைத் திருமால் தந்தருள்வார்.

519. அமித விக்ரமாய நமஹ (Amitha Vikramaaya namaha)

ராவணனின் தாயான கைகசிக்குக் கும்பீநசி என்றொரு தங்கை இருந்தாள். அவளும் ராவணனின் தந்தையான விச்ரவஸ் முனிவரையே மணந்தாள். கும்பீநசிக்கும் விச்ரவஸ்ஸுக்கும் பிறந்த மகன் கரன் என்ற அரக்கன். கரன் ராவணனுக்குத் தம்பி முறை உறவினன்.தன் தங்கை சூர்ப்பணகையைத் தண்டகாரண்யத்தில் உள்ள ஜனஸ்தானம் என்னும் பகுதியில் வசிக்கச் செய்த ராவணன், அவளுக்குப் பாதுகாப்பாகக் கரனை நியமித்து வைத்தான். சூர்ப்பணகை கட்டளை இட்டபடி நடக்க வேண்டும் என்று கரனுக்கு உத்தரவிட்டிருந்தான் ராவணன். அதன்படி சூர்ப்பணகையின் காவலனாக ஜனஸ்தானத்தில் பதினான்காயிரம் அரக்கர்களோடு வசித்துவந்தான் கரன்.

ஒருநாள் திடீரெனக் காதும் மூக்கும் அறுபட்ட நிலையில் கரனிடம் ஓடி வந்தாள் சூர்ப்பணகை. என்ன ஆயிற்று என்று பதறிப் போய்க் கேட்டான் கரன். அதற்கு சூர்ப்பணகை, வனத்துக்கு வந்த இரண்டு மனிதர்களோடு ஒரு கட்டழகி நின்றிருந்தாள். அவளை ராவணனுக்காக நான் எடுத்துச் செல்ல முயன்றேன். அப்போது அவர்கள் என்னை இப்படிச் செய்துவிட்டார்கள் என்று கூறினாள்.

அதைக் கேட்டுக் கடும் கோபம் கொண்ட கரன் போருக்கு எழுந்தான். அவனிடம் இருந்த பதினான்கு அரக்க வீரர்கள் அவனுக்கு முன் எழுந்து, இதற்காக நீங்கள் போக வேண்டாம் இப்பணியை எங்களிடம் தாருங்கள் அந்த மனிதர்களை நாங்கள் அழித்துவிட்டு வருகிறோம் என்று சொல்லிப் புறப்பட்டார்கள்.அந்தப் பதினான்கு பேரும் ராமனுடன் போரிட்டு மாண்டுபோனார்கள். இந்தச் செய்தி கரனின் காதுக்கு எட்டியவாறே, தூஷணன் திரிசிரஸ் உள்ளிட்ட தனது சேனாபதிகளோடு கூடிய பெரும் சேனையைத் திரட்டிக் கொண்டு ராமனை எதிர்த்துப் போர் புரியப் புறப்பட்டு வந்தான் கரன்.

தீய சகுனங்கள் தென்படுவதாக அகம்பனன் என்ற அரக்கன் எச்சரித்த போதும், அதைப் புறக்கணித்து விட்டுப் பதினான்காயிரம் அரக்கர்களை உள்ளடக்கிய மாபெரும் சேனையோடு ராமனைத் தாக்க அவன் இருப்பிடத்துக்கு வந்தான் கரன்.

அரக்கர் சேனை வருவதைப் பார்த்த ராமன், லக்ஷ்மணனைச் சீதைக்குக் காவலாக வைத்துவிட்டுத் தனி ஒருவனாகப் போருக்குப் புறப்பட்டான். சிங்கத்தைப் பல யானைகள் சூழ்வது போல் அரக்கர் சேனை ராமனைச் சூழ்ந்துகொண்டது. அரக்கர் சேனை தன்னைச்சுற்றி வளைத்தவாறே, ராமன் தனது வில்லை வளைத்தான்.அந்த நொடி முதல் ராமனின் வில்லில் இருந்து அம்புமழை புறப்படத் தொடங்கியது.

வானத்தன கடலின்புற வயலத்தன மதிசூழ்
மீனத்தன மிளிர்குண்டல வதனத்தன மிடல்வெங்
கானத்தன மலையத்தன திசைமுற்றிய கரியின்
தானத்தன காகுத்தன சரமுந்திய சிரமே


மேலுள்ள வரிகள் போல் அரக்கர்களின் தலைகள் வானிலும் கடலிலும் நட்சத்திர மண்டலத்திலும் காடுகளிலும் மலைகளிலும் அஷ்ட திக் கஜங்களிடமும் போய் விழும்படி ராமன் பாணங்கள் வீசி, தனி ஒருவனாக அத்தனை அரக்கர்களையும் அழித்தொழித்தான்.கடைசியில் கரன் ஒருவன் மட்டுமே மீதம் இருந்தான். அவன் மாயப்போர் புரிந்து தனது பாணங்களால் ராமனின் திருமேனியையே மறைத் விட்டான். ஆனால் ராமனோ தளராமல், தன் கையைப் பின்னே நீட்டினான். ராமன் வருணனிடம் கொடுத்து வைத்திருந்த விஷ்ணு தனுஸ்சை வருணன் ராமனிடம் கொண்டு வந்து சமர்ப்பித்தான்.

அதில் பாணத்தைப் பூட்டிக் கரனைத் தாக்கினான் ராமன். ராவணனின் வலக்கரம் அறுந்து கீழே விழுவது போல் கரன் கீழே விழுந்து மாண்டு போனான். வெற்றி வாகை சூடியவனாக, விஜயராகவனாக ராமன் திரும்ப வர, சீதாதேவி ஓடிப்போய் ராமனை ஆரத் தழுவி அவனது வெற்றியைக் கொண்டாடினாள்.இப்படி ஆயிரக்கணக்கில் அரக்கர்கள் வந்தாலும் தனி ஒருவனாக இருந்து அவர்களை அழிக்கும் அளவுக்கு, அந்த வீரத்தை நாம் ரசித்து, படித்து, கேட்டு, சொல்லி, மகிழ்ந்து கொண்டாடும் அளவுக்கு, எல்லையில்லாத சக்தி படைத்தவராகத் திருமால் விளங்குவதால், அவர் அமிதவிக்ரம என்று அழைக்கப்படுகிறார். அமித என்றால் அளவில்லாத, விக்ரம என்றால் சக்தி. அமிதவிக்ரம என்றால் அளவில்லாத சக்தி படைத்தவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 519-வது திருநாமம். அமிதவிக்ரமாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் சக்தி கொடுத்து அருள்வார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

Tags : Anantan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!