×

நல்வாழ்க்கை அருளும் கந்தஸ்வாமி!

தமிழ்க்கடவுள் என்று தமிழர்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் தெய்வம் முருகன். அப்படிப்பட்ட முருகனின் முக்கியமான திருவிழாக்களில் தைப்பூசமும் ஒன்று. தைமாதம் வரும் பூச நட்சத்திரத்தில் தான் முருகன் வள்ளியை மணந்துகொண்ட நாள் என்பதால், அந்த நாளில் முருகப்பெருமானை மனமுருக வேண்டிக்கொண்டால் திருமண வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் பூச நாளில் ‘வேலன் வெறியாட்டு’ என்ற முருக வழிபாடும் நடைபெறுவது வழக்கம். ஆண், பெண் என்ற இருபாலரும் வேல் பிடித்து ஆடியதாக புராணங்கள் கூறுகின்றன. பழந்தமிழ்த் திருவிழாவான தைப்பூசத்தன்று வள்ளி-தெய்வானையுடன் திருமண திருக்கோலத்தில் முருகப்பெருமான் திருவருள் புரியும் திருத்தலம் சென்னை மடிப்பாக்கத்தில் உள்ளது.

சுமார்  நூறு வருடங்களுக்கு முன் இப்பகுதியைச் சேர்ந்த முருக பக்தர்கள் அடிக்கடி கந்தகோட்டம், திருப்போரூர் போன்ற தலங்களில் அருளும் கந்தசுவாமியை  தரிசித்து வந்துள்ளனர். அதன் பிறகு இப்பகுதியிலேயே முருகப்பெருமான் ஆலயத்தை  எழுப்பி வழிபடத் தொடங்கினர். அதுவே மடிப்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு கல்யாண கந்தஸ்வாமி திருக்கோயில்.

இக்கோயிலின் ஆலய நுழைவு வாயிலில் கொடிமரமும், மயிலும்  அமைந்துள்ளது. முருகனின் ஆறெழுத்து மந்திரமான சரவணபவ எனும் எழுத்துக்களே இங்கு கருவறைக்குச் செல்லும் படிக்கட்டுகளாக உள்ளது. இந்த படிகளுக்கு படி பூஜையும் நடைபெறுகிறது. பங்குனி உத்திரம் மற்றும்  கந்தசஷ்டியன்று முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக  நடைபெறுகிறது. அப்போது முருகப்பெருமான் அணிந்திருந்த மாலையை திருமணமாக  வேண்டிய கன்னியரும், காளையரும் பிரசாதமாக வாங்கி அணிய அவர்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறுவதாக ஐதீகம் என்பதால், இத்தல முருகன் கல்யாண கந்தஸ்வாமி என போற்றப்படுகிறார். திருமண திருக்கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்தில் சூரசம்ஹார விழா நடைபெறுவதில்லை.

அங்காரகன் எனும் செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி முருகப் பெருமான் என்பதால், இத்தலத்தில்  அங்காரகனுக்கு விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. அங்காரகனின் பாதங்களில்  செவ்வாய்க் கிழமையன்று எள்ளையும் தாமரையையும் சமர்ப்பித்து மனமுருக  பிரார்த்தனை செய்தால் அனைத்து  தோஷங்களும் நீங்கும். கருவறையின் தெற்கில் கருணை கணபதி, வடக்கில் செவ்வாய் பகவான் இருவரும்   வீற்றிருக்கின்றார்கள். கோஷ்டங்களில் குருபகவானும், ஜெயதுர்க்காவும்  திருவருள் பாலிக்கின்றனர். இக்கோயில் சென்னை மடிப்பாக்கம் பாலையா கார்டன்  என்ற இடத்தில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது நவ பாஷாண முருகப் பெருமான் சிலை கொடைக்கானலில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூம்பாறை கிராமத்தில் உள்ளது. இங்கு நாம் செல்ல முருகப் பெருமான் நினைத்தால் மட்டுமே தான் போகவே முடியும். இந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிலும் ஐம்பொன், வெண்கலம், கற்களால் ஆன சிலைகள்தான் உள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள இரண்டு கோவில்களில் மட்டுமே நவ பாஷாணத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ளன.

பழனி மலை மீது உள்ள தண்டாயுதபாணி முருகன் சிலையை அடுத்து கொடைக்கானல் பூம்பாறை மலையில் உள்ளது குழந்தை வேலப்பர் முருகன் சிலை.நவபாஷாண சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் மாமுனி சித்தர் போகர் முனிவர். இவர் உருவாக்கியது தான் பழனி மற்றும் பூம்பாறை நவபாஷாண முருகன் சிலை. 12ம் நூற்றாண்டில் மாமுனி சித்தர் போகர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாண்டவர் வன வாசம் மேற்கொண்டது கடைசி 12 வது வனமான பழனி கொடைக்கானல் மேற்குத் தொடர்ச்சி மலையாகும். பழனி மலைக்கும், பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையில் அமர்ந்து தான் சித்தர் முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார்.

அந்த சிலையை பழனி மலை மீது பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர் சூட்டினார். பிறகு சிவ பூதங்களால் கொண்டு கோவில் மற்றும் மண்டபங்களை கட்ட செய்தார் என்பது வரலாறு.மீண்டும் புண்ணிய காடுகள் சென்று யானை முட்டி குகைக்கு வந்தவர், ஆதிபராசக்தியின் துணை கொண்டு மற்ெறாரு முருகன் சிலையினை உருவாக்கினார். அந்த சிலையை பூம்பாறை மலை உச்சியில் உள்ள சேர மன்னனால் கட்டப்பட்ட திருமண மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தார்.

அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு வந்து முருகனை தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரம் ஆனதால் கோவில் மண்டபத்திலேயே தூங்கி விட்டார். அந்த நேரத்தில் ராட்சசி ஒருத்தி அருணகிரிநாதரை கொல்ல வந்த போது முருகர் குழந்தை வடிவம் கொண்டு அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டு இருந்ததைக் கண்டு, குழந்தையும் தாயும்தான் தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்று எண்ணி அருணகிரிநாதரைக் கொல்லாமல் சென்று விட்டாள்.

இதனை தனது ஞான திருஷ்டியால் அறிந்த அருணகிரிநாதர் தன் உயிரைக் காப்பாற்றிய குழந்தை முருகனுக்கு குழந்தை வேலர் என்று பெயரிட்டார். அன்று முதல் குழந்தை வேலப்பராக இன்றும் பூம்பாறையில் அருள்பாலித்து வருகிறார். முருகரின் பக்கத்திலேயே அருணகிரிநாதருக்கும் கோவில் உள்ளது. தன்னை மனமுருகி வேண்டும் பக்தர்களின் பாவ வினைகளைத் தீர்த்து அருள்பாலித்து வருகிறார் குழந்தை வேலப்பர்.தைப்பூசத்தன்று முருகனை வழிபட்டு நலம் பெறுவோம்.

தொகுப்பு: மகி

Tags : Gandaswamy ,
× RELATED திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.74.35 லட்சம் வசூல்