×

இந்த வார விசேஷங்கள்

சஷ்டி விரதம் 25.2.2023 - சனி

இன்றைய தினம் சஷ்டி விரதம் இருக்க வேண்டிய தினம். மன உறுதியையும், நினைத்த காரியத்தில் வெற்றியையும், குழந்தை வரத் தையும் தரக்கூடிய அற்புதமான விரதம் சஷ்டி விரதம். ஆறாவது திதி சஷ்டி திதி முருகப்பெருமான் ஆறு முகங்களை உடையவன். ஆறு தலைகளால் ‘‘ஆறுதலை’’ வழங்குபவன்.
செல்வம், கல்வி, ஆயுள், ஆரோக்கியம், புகழ், ஞானம் என்ற ஆறு பொருள்களையும் அள்ளி அள்ளித் தருபவன். கூர்மையான வேல் கொண்டு, அகப்பகையையும் புறப்பகையையும் விரட்டுபவன். எண் கணிதத்தில் ஆறு என்பது சுக்கிரனுக்குரிய எண்.

சுக்கிரன் நல்ல இல் வாழ்க்கையையும், சகல விதமான செல்வங்களையும், மன நிம்மதியையும், வண்டி வாகன யோகங்களையும் அள்ளித் தருபவன். அது மட்டுமல்ல; இன்று சுக்கிரனுக் குரிய பரணி நட்சத்திரத்தில் சஷ்டி திதி இடம் பெறுவது சாலச்சிறந்தது. சனி பகவான் இந்தச் செல்வங்களை எல்லாம் நிலைத்திருக்க செய்பவர். அவருடைய கிழமையில் சஷ்டி திதி பெறுவது விசேஷமானது. சஷ்டி விரதம் முதல் நாள் பஞ்சமியில் தொடங்கி, மதியம் உணவுக்கு பின், இரவு பால் பழங்களை மட்டும் உண்டு, மறுநாள் முழுக்க உபவாசம் இருந்து, மாலையில் முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வைத்து, புஷ்பமாலைகளைச் சாற்றி, படையல் போட்டு, பின் உணவு உண்டு, விரதத்தை முடிப்பது சாலச் சிறந்தது இன்றைய தினம் இந்த திருப்புகழைப் பாராயணம் செய்யவும்.

அபகார நிந்தைபட்டுழலாதே
அறியாத வஞ்சரைக் குறியாதே
உபதேச மந்திரப் பொருளாலே
உனைநானி னைந்தருட்பெறுவேனோ
இபமாமு கன்தனக் கிளையோனே
இமவான்ம டந்தையுத் தமிபாலா
ஜெபமாலை தந்தசற் குருநாதா
திருவாவி னன்குடிப் பெருமாளே.
இது பழனி மலை திருப்புகழ்.


இதன் பொருள்: ஆவினன்குடி என்று சொல்லப்படுகின்ற பழனியம்பதிக்கு உரிய பெருமாளே! குருநாதா! உன்னுடைய ஆறெழுத்து மந்திரத்தை ஜெபம் செய்வதற்காக எனக்கு ஜெபமாலை அளித்த வனே! இமவான் மகளான பார்வதி தேவியின் உத்தமமான பிள்ளையே! யானை முகப்பெருமானாகிய விநாயகப் பெருமானின் தம்பியே! பிறருக்கு தீமை செய்து, பழிச் சொல்லுக்கு ஆளாகி அலையாமல், எந்த நல்ல விஷயங்களையும் நினைக்காத, பேசாத, வஞ்சகர்களிடம் சேராமல், நீ அருளிய மந்திரப்பொருளையே துணையாகக் கொண்டு, சதா சர்வ காலமும் உன்னையே நான் சிந்தித்து, உன்னுடைய திருவருளைப் பெறமாட்டேனா? என்று உருகுகிறார் அருணகிரிநாதர்.

அவன் திருவருளைப் பெறுவதற்காகத்தான் இன்றைய விரதம்- சஷ்டி விரதம்.

விஜய சப்தமி கிருத்திகை விரதம் 26.2.2023 - ஞாயிறு

இன்று மூன்று விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று சூரிய னுக்குரிய ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது சூரியனுக்குரிய கிருத்திகை நட்சத்திரம் மூன்றாவது சூரியனுக்குரிய சப்தமி திதி. இப்படி மூன்று விஷயங்களும் பொருந்தி வருவது என்பது அபூர்வம். அது இன்றைக்கு வந்திருக்கிறது. இன்றைக்கு காலையில் எழுந்து நீராடி, சூரிய பகவானை வணங்குவதும், சூரிய நாராயணரை வணங்குவதும், மிகச்சிறந்த நற்பணிகளைத் தரும். குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வணங்குவது மிகவும் சிறப்பு. முன்னோர்களிடம் ஆசி பெற வேண்டும்.

இன்று முருகனுக்கு உரிய கிருத்திகை நட்சத்திரம் என்பதால் நேற்று சஷ்டி விரதம் இருந்தவர்கள், இன்றும் அந்த முருகனை எண்ணி விரதம் இருக்கலாம்.
வைணவத்தில் திருமங்கையாழ்வார் அவதார நட்சத்திரம் கார்த்திகை (கிருத்திகை). பெரும்பாலான பெருமாள் கோயில்களில் திருமங்கையாழ்வார் சந்நதி இருக்கும். அங்கே இன்று திருமங்கையாழ்வாருக்கு திருமஞ்சனமும் சிறப்பு ஆராதனையும் நடைபெறும். இன்றைய தினம் இந்த திருமங்கையாழ்வார் பாசுரத்தை பூஜைவேளையில் சேவிக்க நற்பலன்கள் விளையும்.

மின்னுமா மழை தவழும் மேகவண்ணா
விண்ணவர்தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த
அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப்
பழவினையை முதலரிய வல்லார் தாமே


108 திவ்ய தேசங்களில் ஒன்று, மதுரையில் பிரசித்தி பெற்ற கூடலழகர் கோயில். அங்கே இன்றைய தினம் கூடல் அழகர் பெருமாள் ஆண்டாள் கோலத்தில் காட்சி தருவது சிறப்பு.

துர்க்காஷ்டமி 27.2.2023 - திங்கள்

அஷ்டமி விரதம் என்பது கஷ்டங்களைத் தீர்க்கக் கூடியது. முப்பெரும் தெய்வங்களுக்கும் உரியது. சைவர்களுக்கு பைரவ வழிபாடு அஷ்டமி வழிபாடாகச் சொல்லப்படுகிறது. வைணவர்களுக்கு அஷ்டமி கிருஷ்ணனுடைய ஜென்ம திதி. அஷ்டமியில் கண்ணனை நினைத்து விரதம் இருப்பவர்கள் சொன்னது பலிக்கும். அம்பாளை வழிபடுபவர்களுக்கு துர்க்கைக்கு உரிய திதி அஷ்டமி திதி. (துர்காஷ்டமி).

இன்று விரதமிருந்து கலச ஆவாகனம் பண்ணியோ சாதாரணமாகவோ அம்பாளை வழிபடு பவர்களுக்கு சகல துன்பங்களும் நிவர்த்தியாகி, நினைத்த காரியங்கள் பூர்த்தியாகும். காரியத் தடைகள் விலகும். சனி பகவானுக்கு உரிய எண் எட்டு. திதிகளில் எட்டாவது திதி அஷ்டமி திதி என்பதால், சனி தசை நடப்பவர்கள் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டச் சனி முதலிய கோள்சார சனியால் துன்பப் படுபவர்கள், இன்றைய தினம் விரதமிருந்து மாலையில் அம்பாள் சந்நதியில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்ய துன்பங்கள் அகலும் அம்பாளின் தோத்திரங்களையோ, பாடல்களையோ, துக்க நிவாரண அஷ்டகத்தையோ பாராயணம் செய்யலாம். அபிராமி அந்தாதியின் கீழ்க்கண்ட பாடலை இன்று பாராயணம் செய்ய அனைத்து நன்மைகளையும் அடையலாம்.

உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ?
அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சமோ?
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.


கோவை கோனியம்மன் திருவிழா 28.2.2023 - செவ்வாய்


 கோவை மாநகரத்தின் மையப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற, 600 ஆண்டுகாலப் பழமையான ஆலயம் அருள்மிகு கோனியம்மா ஆலயம். கோனி என்றால் அரசி என்று பொருள். கோவை மாநகரத்தின் அரசியாக விளங்கி அருள் பாலிக்கும் இந்த அம்மனுக்கு மாசிப் பெருவிழா 14 நாட்கள் நடைபெறும். அந்த விழா இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இக்கோயிலின் சிறப்பாக பல விஷயங்களைச் சொல்லலாம். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கவும், திருமணத் தடை நீங்கவும், நோய்களால் அவஸ்தைப்படுபவர்கள் நலம் பெறவும் இந்த அம்மனை வணங்கி, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

இந்த கோனியம்மன் ஆதிபராசக்தியின் பல வடிவங்களில் ஒன்றான துர்க்கா பரமேஸ்வரியின் வடிவமாக வடக்கு பார்த்து அமர்ந்து காட்சி தருகின்றாள். இன்று திருக்கல்யாண உற்சவம். நாளை, பிரசித்தி பெற்ற தேர் உற்சவம்.

சேஷ வாகனத்தில் பெருமாள் 28.2.2023 - செவ்வாய்

கும்பகோணத்தில் உள்ள வைணவ ஆலயங்களில் இரண்டு பிரசித்தி பெற்ற ஆலயங்கள் உண்டு. ஒன்று சார்ங்க பாணி ஆலயம் இன்னொன்று காவிரி கரையின் அருகே உள்ள  ஸ்ரீசக்ரபாணி ஆலயம். பெருமாள்  ஸ்ரீசுதர்சன ஆழ்வார் வடிவத்தில் விஜயலட்சுமி தயாரோடு காட்சி தரும் அற்புதமான இந்த ஆலயத்தில் மாசி மாதத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் பெருமாள் வீதிஉலா வருவார். இன்றைய தினம் சேஷ வாகனத்தில் பெருமாள் வீதி உலா வருகின்றார்.

திருக்கச்சி நம்பி அவதார நாள் 1.3.2023 - புதன்

ஸ்ரீராமானுஜருடைய குருநாதர்களில் ஒருவர் திருக்கச்சி நம்பிகள். பூவிருந்தவல்லியில் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் கஜேந்திரதாசர். காஞ்சிபுரம் பெருமாளிடம் நேரடியாகப் பேசும் சிறப்பு பெற்றவர். வரராஜப்பெருமாளுக்கு தனிமையில் திருவாலவட்ட (விசிறி) கைங்கரியம் செய்தவர்.  ஸ்ரீராமானுஜருடைய வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்பதை காஞ்சிபுரம் வரதராஜரிடத்தில் கேட்டு ஆறு வார்த்தைகளை பதிலாக வாங்கி  ஸ்ரீராமானுஜருடைய வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொடுத்தவர்.

ஒரு வைணவன் எப்படிப்பட்ட நெறியோடும், மனநிலையோடும் இருக்க வேண்டும் என்பதை இவருடைய வாழ்க்கை தெள்ளத்தெளிவாக விளக்கும். தினமும் காஞ்சிக்குச் சென்று கைங்கர்யம் செய்துவந்த நம்பிகள், முதுமையின் கண் ஏற்பட்ட தாளாமை கண்டு வருந்தியிருக்க, பெருமாள் இவருடைய இல்லத்திலேயே வைணவத் திவ்ய தேசங்களில் முதன்மையாகப் போற்றப்படும் திருவரங்கம், திருமலை, திருக்கச்சி (காஞ்சி) ஆகிய தலங்களில் உறைகின்ற காட்சியும் கொடுத்து முக்தியும் அருளினார்.

அத்தலமே சென்னைக்கு அருகே பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகில் உள்ள வரதராசப் பெருமாள் கோயில். பூவிருந்தவல்லி திருக்கோயிலில் இவருக்குச் சந்நதி உண்டு. அங்கு இவருடைய அவதார உற்சவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

திருக்கண்ணபுரம் கருட சேவை 2.3.2023 - வியாழன்

திருமங்கை ஆழ்வாரின் விருப்பமான தலங்களில் ஒன்று திருக் கண்ணபுரம். ‘‘கண்ணபுரம் சென்றால் கவலைகள் எல்லாம் பறந்து போகும்’’ என்றபடி திருமங்கை ஆழ்வார் அதிகப் பாசுரங்களை இந்த தலத்துக்கு அருளிச் செய்திருக்கிறார். இத்திருக்கோயிலில் மாசி மக பிரம்மோற்சவம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். மாசிப் பெருவிழா பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி ஆரம்பித்து, மார்ச்மாதம் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாள் காலை, மாலை இரண்டு வேளைகளிலும், பெருமாள் வெவ்வேறு வாகனங்களில், திருக்காட்சி தர, திருவீதி உலா வருவார். அதில் இன்றைய தினம் காலை பல்லக்கில் பவனி வரும் பெருமாள்.

மாலையில் தங்கக் கருடவாகனத்தில் வீதி உலா வருவார். ‘‘பறவையேறும் பரம்பொருளாக நீ என்னை கைக்கொண்ட பின் பிறவி என்னும் கடலும் வற்றி பெரும் பதம் ஆகின்றதால்’’ என்ற பாசுரத்தின் படி, மிக மிக அழகிய தோற்றத்துடன் காட்சி தரும் சௌரிராஜப் பெருமாள், சர்வ உபநிஷத் தத்துவமாக, வேதமாகிய கருடன் மீது ஆரோ கணித்து காட்சி தரும் அழகு, கண்களுக்கு விருந்து. அதுவும் வியாழக்கிழமை இந்த கருட சேவை நடப்பது சிறப்பிலும் சிறப்பு.

ஆமலகி ஏகாதசி 3.3.2023 - வெள்ளி

ஆம்லா என்றால் நெல்லி என்று பொருள். நெல்லியை பிரதானமான பூஜைப் பொருளாகக் கொண்ட ஏகாதசி ஆமலகி ஏகாதசி. துவாதசி பாரனையில் நெல்லிக்காயைப் பயன்படுத்த வேண்டும். ஏகாதசி பூஜையில் நெல்லி மரத்தை வணங்க வேண்டும் என்பது இந்த ஏகாதசியின் சிறப்பு. இதற்கு என்ன காரணம் என்று சொன்னால், நெல்லிமரம் என்பது மகாலட்சுமியினுடைய அம்சம்.

நெல்லி மரத்தை நாம் பூஜை செய்வதன் மூலமாக மகாலட்சுமியின் பேரருள் கிடைக்கும்.  வறுமை அகலும். சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.  இந்த ஏகாதசியில் வழக்கம் போல் உபவாசம் இருந்து, பெருமாளுடைய தோத்திரங்களைப் பாடி, மாலையில் பெருமாள் கோயிலுக்கு சென்று, நெல்லிக்காய் இருந்தால், மகாலட்சுமியின் படத்தின் முன் வைத்து நிவேதனம் காட்டி வணங்க வேண்டும். விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தையும் மகாலட்சுமி ஸ்தோத்திரங்களையும் சொல்ல வேண்டும்.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

Tags :
× RELATED தெளிவு பெறுவோம்