×

நம்பிக்கை சந்தேகங்களைத் தெளிவாக்கும்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீகிருஷ்ண அமுதம் - 43 (பகவத் கீதை உரை)

தன் கருத்தை அனுசரிக்காதவர்களை களங்க புத்தி கொண்ட மூர்க்கர்கள் என்று வர்ணிக்கிறார் கிருஷ்ணன். அதாவது, தாம் செய்யும் எந்த கர்மாவிலும் ஆதாயத்தை எதிர்பார்ப்பவர்கள்! அவர்களுடைய நிலைமை மிகவும் பரிதாபமானது. ஏமாற்றத்திலும், துன்பத்திலுமே உழலக்கூடியவர்கள் அவர்கள். வெளிறிய வானம் போல நிர்மலமாக இருக்க முடியாதவர்கள்! ஆகாயம் தன்னை மேகம் மூடினாலும் வருத்தப்படுவதில்லை; தன்னைவிட்டு விலகினாலும் சந்தோஷப்படுவதில்லை.

இந்த பவித்திரமான உணர்வை எதிர்பார்ப்பாளர்களால் அடைய முடிவதில்லை!எதிர்பார்ப்புகள் இல்லாதபோது ஏமாற்றமும் இருக்காது. எதிர்பார்த்து ஏங்கும் மனம், எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால் அப்படியே உடைந்து போகிறது. எதிர்பார்க்காவிட்டால், கிடைக்காததை எண்ணி மனம் வருந்தவேண்டிய அவசியமில்லை. அற்ப ஏமாற்றங்களை, நஷ்டங்களைக்கூட நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதுதான் யதார்த்தம்.

எட்டு மணிக்கு ரயில் வரும் என்று எதிர்பார்த்துச் செல்லும் நாம், எட்டு என்பது எட்டரையாகி, ஒன்பதாகி, பத்தும் ஆகிவிட்டால் உடம்பில்தான் எத்தனை உஷ்ணம் ஏறுகிறது! குறிப்பிட்ட அந்த ரயிலில்தான் போகவேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டாகிவிட்டது. என்ன காரணத்தாலோ தாமதம். நியாயமான காரணம் இல்லாமல் ரயில் தாமதமாக வரவேண்டிய அவசியமே இல்லை என்பதும் தெரியும். அந்த சமயத்தில் மாற்று ஏற்பாடு எதுவும் செய்ய இயலாது.

என்ன செய்வது? காத்திருக்கத்தான் வேண்டும். ஆனால் அந்தத் தாமதத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் வெகுண்டு, ரயில்வே அதிகாரிகளிடம் கத்தி, ஆர்ப்பாட்டம் செய்து எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம். அப்போதைக்கு நம்மால் செய்ய முடிந்தது அதுதான். அதுவே ஒரு பேருந்து பழுது என்றால் உடனே மாற்று ஏற்பாட்டுக்கு வழி இருக்கிறது. பேருந்துக்குப் பல சாலை வழிகள் இருக்கின்றன. ஆனால் ரயில் அந்த ஒரு தடத்தில் மட்டும்தான் வரமுடியும். என்ன செய்வது? காத்திருப்பதைத் தவிர வேறு என்னதான் செய்வது?

மனம் குமைவதும், கோபப்படுவதும், அந்தக் கோபத்தை வெளிக்காட்டுவதும், அல்லது அப்படி வெளிக்காட்டித் தன்னுடைய அத்தகைய ‘பராக்கிரமத்தை' விளம்பரப்படுத்திக் கொள்வதும், சம்பந்தமேயில்லாமல் உடன் வந்திருக்கக் கூடியவர்களிடமும் கோபத்தை வீசுவதும்தான் - எதிர்பார்த்ததன் பலன்கள்!இப்படி தவிர்க்க இயலாமல் காத்திருக்க வேண்டிய தருணத்தில், கோபப்பட்டு மனதையும், உடலையும் வருத்திக்கொள்ளும் நேரத்தில், தாமதமாக வரும் ரயிலால் தொடர் சங்கிலியாகத் தாமதமாகக் கூடிய விஷயங்கள் என்னென்ன என்று சிந்திக்கலாம்; அவற்றை எப்படி சமாளிப்பது என்று யோசிக்கலாம். அவற்றுக்கெல்லாம் மாற்று ஏற்பாடு செய்ய முடியுமா என்றும் எண்ணலாம்.

மொத்தத்தில், ஏமாற்றத்துக்கும், அதன் விளைவான மன அழுத்தம் மற்றும் கோபத்துக்கும் மூலகாரணமான எதிர்பார்த்தலை இனி கைக்கொள்ளக்கூடாது என்ற உறுதிப்பாட்டுக்கு வரமுடிந்தால், அதுதான் சரி. அனுபவம்தானே அறிவு!ஆக, நம் புலன்களை அலைக்கழிக்கவல்ல இச்சை எனும் உணர்வை மனதிலிருந்து அகற்ற வேண்டும். ரயில் உரிய நேரத்துக்கு வரவேண்டுமே என்ற தவிப்பை, இந்த இச்சையை நாம் மனதில் ஏற்றிக்கொள்ளாவிட்டால், புலன்கள் உஷ்ணமாவதைத் தவிர்க்கலாம்.

ஒவ்வொரு உயிருக்கும் அதற்கென்றே தனிப்பட்ட குணம் இருக்கும். அது அதனுடைய இயல்பு. அந்த இயல்பை திசைத் திருப்பவோ, மாற்றவோ அடுத்தவர் முயற்சிப்பதில் அர்த்தமேயில்லை என்று அடுத்த ஸ்லோகத்தில் விளக்குகிறார் கிருஷ்ணன்.

ஸத்ருசம் சேஷ்டதே ஸ்வஸ்யா ப்ரக்ருதேர்ஞானவானபி
ப்ரக்ருதிம் யாந்தி பூதானி நிக்ரஹ கிம் கரிஷ்யதி (3:33)


‘‘ஒரு ஞானி தன் இயல்புக்கு ஏற்ப நடந்து கொள்கிறான். இவ்வாறு இயல்புக்கு ஏற்ப நடந்து கொள்வது என்பது ஞானிக்கு மட்டுமே உரியது அல்ல; எல்லா உயிர்களுக்கும் இது பொருந்தும். அதாவது, ஒவ்வொரு உயிருக்கும் அததற்கென்று தனித்தனி இயல்பு உண்டு. அதை மறுப்பதாலோ தடை செய்வதாலோ ஆகப்போவதுதான் என்ன?’’

ஆந்தைக்கு இரவில்தான் பார்வை நன்றாகத் தெரியும், பகலில் அது வெளியே வராமல் தன் கூட்டுக்குள்ளேயே ஒடுங்கிக் கிடக்கும். அதாவது, அதைப் பொறுத்தவரை நம்முடைய பகல்தான் அதற்கு இரவு; நம்முடைய இரவுதான் அதற்குப் பகல்! நாங்கள் அனுபவிக்கும் பகல்தான் சரி, நீ அனுபவிக்கும் இரவு சரியல்ல என்று அதனிடம் போய் வாதிட முடியுமா? அல்லது அந்த ஆந்தையைத்தான் நம் இயல்புப்படி நடந்துகொள்ளுமாறு நிர்ப்பந்தப்படுத்த முடியுமா? அதனுடைய இயல்புப்படியே அப்படியே விட்டுவிடுவதுதான் சரி.

கேரளம், குருவாயூரில் கோயில் கொண்டிருக்கிறான் குருவாயூரப்பன். அனைவருக்குமான இறைவன் ஆனாலும், மனிதர்கள் தமக்குள் பகுத்துக்கொண்ட பிரிவின்படி ஏற்றத் தாழ்வு பாகுபாடு கொண்டதால் அவர்களால் புறக்கணிக்கப்பட்டவர்களின் ஒருவன் பூந்தானம். அவனுக்கு குருவாயூரப்பனை தரிசிக்க ஆசை. உயர் வகுப்பினரைப் போல அவனுக்கு பூஜை செய்யவும் ஆசை. ஆனால், அது அவனுடைய தகுதிக்கு மீறியது! ஆனாலும் குருவாயூரப்பனை நெருங்கும் ஆவல் அவனுக்கு எல்லை மீறியது.

ஆகவே, தன்னைப் பார்த்ததும் வெகுதொலைவில் சென்றுகொண்டிருந்த ஒரு பண்டிதர், அதற்கு மேலும் விலகிச் செல்ல முற்பட்டபோது, ‘சாமீ, நம்ம குருவாயூரப்பன் எப்படி இருப்பார்?’ என்று உரத்த குரலில் கேட்டான் பூந்தானம்.குருவாயூரப்பன் பெயரை அவன் உச்சரித்ததையே பெரும் பாவமாகக் கருதிய பண்டிதர், அவனை ‘தண்டிக்கும்’ வகையில், அங்கே மேய்ந்து கொண்டிருந்த ஒரு எருமை மாட்டைக் காட்டி ‘இப்படித்தான் இருப்பார்' என்று சொன்னார்.

அந்தக் கணம் முதல் பூந்தானத்தைப் பொறுத்தவரை எருமைமாடுதான் குருவாயூரப்பன்! எருமையையே அவன் ஜபித்தான், எருமையிலேயே அவன் இறைவனைக் கண்டான். அதற்குப் பிறகு  குருவாயூரப்பன் கோயில் பக்கமாகக்கூட அவன் போகவில்லை!ஒரு உற்சவ சமயத்தில் குருவாயூரப்பனை வீதியுலாவுக்காக வெளியே அழைத்துவர ஆலய முக்கியஸ்தர்கள் முயன்றனர். என்ன காரணத்தாலோ குருவாயூரப்பன் தன் சந்நதியைவிட்டு வெளியே வராமலிருந்தார். மனித முயற்சிகள் அந்த தெய்வத்தை வெளியே கொண்டுவருவதில் தோல்வியுற்றன.

சுவாமி வீதிவுலா வரும்போது கண்டு களிக்கவேண்டும் என்று மக்கள் கூட்டமாகக் கோயிலுக்கு வெளியே நின்றிருந்தார்கள். நேரம் ஆக ஆக சுவாமி வரத் தாமதமாகவே பொறுமை இழந்தார்கள். கர்ப்பகிரகத்திலிருந்து செவி வழியாக வந்த செய்தி கேட்டு திடுக்கிட்டார்கள். ‘சுவாமியால் சந்நதியைவிட்டு வெளியே வரமுடியவில்லையாம்!’

இந்த பக்தர்களை விட்டும் சற்று ஒதுங்கியிருந்த பூந்தானம் வாய்விட்டுச் சிரித்தான். ‘‘சாமி எப்படி வெளியே வரும்? அதனோட கொம்புதான் நிலைவாசல்படியை இடிக்குதே,’’ என்ற அவனுடைய விமரிசனம் கூடியிருந்தவர்களை, கேலியாக நகைக்க வைத்தது. ‘‘சற்றே ஒருக்களித்து சாய்த்து வெளியே கொண்டுவாருங்கள் அந்த எருமையை’’ என்று அவன் தொடர்ந்து சொன்னது, அவனுக்கு எருமையே குருவாயூரப்பன் என்று ‘அறிவுறுத்’திய பண்டிதர் காதுக்கும் எட்டியது.

ஒருகணம் அதிர்ந்துபோன அவர், தன் சக பண்டிதர்களிடம் விவரத்தைச் சொல்லி, பூந்தானம் கூறியபடியே சற்று சாய்த்து வெளியே இழுக்க விக்ரகம் இடிபடாமல் வந்தது! வியர்த்துக் கொட்டியது பண்டிதருக்கு. குருவாயூரப்பனை உற்று உற்றுப் பார்த்தார். குருவாயூரப்பன்தான் தெரிந்தான். எருமையைக் காணவில்லை.வெகு தொலைவில் கைகளால் தாளமிட்டபடி, தன் சொந்த சாகித்யத்தால் தனக்கே சொந்தமான ‘எருமை’ குருவாயூரப்பனைப் பாடி கொண்டாடிக் கொண்டிருந்தான் பூந்தானம்!

பூந்தானத்திடம் போய், குருவாயூரப்பன் விக்ரகத்தையே காட்டினாலும் அவன் அதை ஏற்றுக்கொண்டிருப்பானா என்பது சந்தேகமே! அவனைப் பொறுத்தவரை எருமைதான் குருவாயூரப்பன், அவனுடைய இறைவன், எல்லாம்! அப்படி அனுசரிப்பது அவனுடைய இயல்பு என்றாகிவிட்டது. ஆனால், மற்றவர்கள் கண்ணுக்கும் நம்பிக்கைக்கும் குருவாயூரப்பன், ஒரு பாலக உருவமே! இயற்கையில் பல செடிகளும், மரங்களும் வளர்கின்றன. ஒன்றின் கனி இனிக்கும்;

இன்னொன்றின் கனி துவர்க்கும்; பிறிதொன்றின் கனி கசக்கும்; வேறொன்றின் கனி சுவையின்றியே இருக்கும். அதனதன் தன்மை அப்பப்படி. இனிக்கும் கனி இனிப்பாகவே இருக்கட்டும், கசப்பு ருசி கனி கசப்பாகவே இருக்கட்டும். இதன் ருசியை அதற்கும், அதன் ருசியை இதற்குமாக மாற்றுவதில் என்ன நன்மை ஏற்பட்டுவிடப்போகிறது? கசப்பு இருப்பதால்தானே இனிப்பு என்பதை ருசி பிரித்து உணரமுடிகிறது!

பொதுவாகவே நம்பிக்கை என்ற ஒன்று இருப்பதனாலேயே ஏன், எதற்கு, எப்படி, யார், என்னாகும் என்றெல்லாம் கேள்விகளும் எழுகின்றன. அதேசமயம், உண்மையான நம்பிக்கையே இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்த பிறகு ஏற்படுவதுதான்! அல்லது நம்பிக்கை கொண்டபிறகு சந்தேகங்கள் தெளிவாகிவிடுவதுதான்.  இப்படி இயல்பும், நம்பிக்கையும் ஒவ்வொரு வருடைய தனித்தன்மைகள் என்னும்போது அவை அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே!

இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்த்தே ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ
தயோர்ந வசமாகச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்தினௌ (3:34)


‘‘விருப்பு வெறுப்பு இல்லாமல் செயல்பட முயற்சிக்கும்போது அதற்குப் பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது இந்திரியங்கள்தான். நம் புலன்களின் இழுப்புக்கெல்லாம் மனதை போக விட்டால் கர்மாக்களை ஒழுங்காக, முறையாக, நிறைவாகச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.’’‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்றார் கணியன் பூங்குன்றனார். எல்லாமே நம்மிடமிருந்து உருவாவதுதான். இதில் இயற்கை செய்திருக்கும் வேடிக்கையைப் பாருங்கள். நமக்கு நன்மை செய்யவேண்டும் என்பதற்காக நம் உடலில் ஐம்புலங்களைப் பதித்திருக்கும் அதே இயற்கைதான் அந்த ஐம்புலன்களால் நாம் தடம் மாறிச் செல்லவும் வழிவகை செய்திருக்கிறது!

ஒரு இனிப்பைத் தட்டு நிறைய வழங்கிவிட்டு, ‘ஒன்றிரண்டுக்கு மேல் சாப்பிடாதே, உனக்கு சர்க்கரை நோய் வரும்’ என்று சொல்வதுபோல அல்லவா இருக்கிறது! அதாவது, சுவைப்பதற்காக உனக்கு அளிக்கப்பட்டிருக்கும் உணவு ஒரு அளவுக்கு மேல் போனால் உனக்கே ஊறு செய்யக்கூடும் என்ற உண்மையை உணர்த்துவதுபோல. ‘வயிற்றைக் கேட்டுக்கொண்டுதான் வாய் சாப்பிடவேண்டும்’ என்கிறது ஜப்பானியப் பழமொழி ஒன்று!

இது உணவுக்கு மட்டுமா, பார்வைக்கு, பேச்சுக்கு, கேட்பதற்கு, நுகர்வதற்கு, ஸ்பரிசத்துக்கு என எல்லாவற்றிற்கும்தான்.எந்தப் புலன்கள் நமக்கு அடிப்படைத் தேவைகளுக்காகப் பயன்படுகிறதோ, அந்தப் புலன்கள் மீது ஆதிக்கம் செலுத்த முற்படுகிறது நம் சொந்த மனம். அதாவது, குறைந்த பட்சத் தேவையையும் மீறி, ஒரு மோகத்தின் மிகை அளவாக அதனைப் பயன்படுத்துகிறது மனம். உண்மையில் அப்படி மோக நோக்கமாக ஒரு புலன் இயங்குமானால் அதனால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும்போது மனம் நம்மைத் தவிக்கவிட்டுவிட்டு எங்கோ ஓடி ஒளிந்துகொள்கிறது! ஆகவே இந்த்ரியங்களை மனசின் அதிகாரப் பிடியிலிருந்து விலக்கி வைத்தாலேயே கர்மாக்களை எந்த இடையூறும் இல்லாமல் இயற்ற இயலும்.

நம்மிடமே உள்ள தீதிலும், நல்லதிலும், தீது மேலோங்கக் காரணம், இயற்கையாகவே நம்முள் விதைக்கப்பட்டிருக்கும் குரூர சந்தோஷம்தான். இம்சைப்படுத்தி இனிமைத் துய்க்கும் அரக்க குணம்தான். குழந்தைப் பருவத்தில் ஊர்ந்து செல்லும் எறும்பைக் காலால் தேய்த்து, அது தொடர்ந்து ஊர்ந்துசெல்ல முடியாதபடி அழிப்பதிலிருந்தே அந்த ‘சந்தோஷம்’ ஆரம்பிக்கிறது. அதிலிருந்து நம்மைவிட பலம் குறைந்தவர்களை எதிர்ப்பதும், அவர்களுடன் சண்டையிடுவதும், தாக்குவதுமாக அந்த ‘சந்தோஷம்’ வளர்கிறது. ஒரு கட்டத்தில் அதே சந்தோஷத்தை அனுபவிக்கும் நம்மைவிட பலசாலி ஒருவன், நம்மையும் அதேபோலவே பயன்படுத்திக் கொள்ளும்போதுதான் நாம் விழித்துக் கொள்கிறோம், அதுவரை நாம் அனுபவித்த ‘சந்தோஷ’த்தின் உண்மையான பலனை  கொடுமையை - உணர்கிறோம்.

இந்த ‘சந்தோஷ’த்தை நாம் அடைய நமக்கு உதவியவை எவை? நம் இந்த்ரியங்களும் நம் மனசும்தான்!நம்மைப் போலவே நம்மீது ‘தாக்குதல்’ நடத்தி அதன் மூலம் ‘சந்தோஷம்’ அனுபவிக்கிறார் ஒருவர் என்றால், நாம் அவரால் வஞ்சிக்கப்பட்டோம் என்றால், நாம் அவரை மட்டும் பகைவராகக் கருதுவதில்லை. அவரை ஓர் உதாரணமாக வைத்து பிற அனைவருமே அவரைப் போன்றவர்தான் என்ற முடிவுக்கும் துரதிருஷ்டவசமாக வருகிறோம். இதற்கும் நம் இந்த்ரியங்கள்தான் காரணம்.

நம்மை வஞ்சித்தவர்மீது நாம் பகை கொண்டு பார்க்கும் அதே பார்வையை பிற அனைவர் மீதும் செலுத்துகிறோம். பிறர் பேசுவதெல்லாம் நம் காதில் எதிர்மறையாகவே விழுகின்றன. நமக்கு எதிராக இந்த உலகமே இயங்குகிறதோ என்ற பயமும், கோபமும் நம்முள் எழுகின்றன. இல்லாத ஒன்றை கற்பனை செய்துகொண்டு ஒட்டுமொத்தமாக எல்லோரும் நமக்குவேண்டாதவர்கள் என்று கருதிக்கொள்கிறோம்.

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

Tags :
× RELATED காமதகனமூர்த்தி