×

108 சிவலிங்கங்களை வழிபட்ட ஸ்ரீராமர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தனது தேவி சீதையை ராவணன் சிறையெடுத்துச் சென்றதால் கோபித்த ராமபிரான், வானர சேனைகளுடன் இலங்கை மீது படையெடுத்துச் சென்று ராவணனை வென்றார். அவனையும் அவனது கூட்டத்தாரையும் அழித்தார். ராவணனின் தம்பியான விபீஷணனை இலங்கைக்கு அரசனாக்கினார்.

ராவணன் வேதவிற்பன்னன், பிரம்மாவின் வழிவந்த வேதியன். அதனால், அவனைக் கொன்ற பாவம் ராமபிரானை பிரம்மஹத்தியாக வந்து வாட்டியது. அது தீர அவர் கிழக்கு வங்கக் கடற்கரையில் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார். அதனால், அவரது பெரும்பாவம் ஒழிந்தது என்றாலும், சிறுசிறு இடையூறுகள் உண்டாயின. அவற்றை நீக்கும் பொருட்டு, அவர் காவிரிக்கரைக்கு வந்து கும்பகோணத்திற்கு அருகில் குடில் அமைத்துத் தங்கினார். அங்கே அவர் 108 சிவலிங்கங்களை நிறுவி வழிபட்டார்.

சிவ வழிபாட்டின் பயனால் அவரைத் தொடர்ந்து வந்த பாவங்கள் நாசமாயின. அதையொட்டி அந்தத்  தலம் பாவநாசம் எனப்பட்டது. அந்தப் பாவநாசத் திருத்தலத்தின் சிறப்புக்களைக் கண்டு மகிழலாம். ராமபிரான் 108 சிவலிங்கங்களை வைத்துச் சிவபெருமானை வழிபட்ட தலம் பாபநாசம். இது கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ளது. பாடல் பெற்ற திருத்தலமான திருப்பாலைத் துறைக்கு அருகில் உள்ளது. திருப்பாலைத்துறை,  வங்காரம்பேட்டை, ராமநாதன் கோயிலான 108 சிவலிங்கத் தலம் ஆகியவை ஒரே ஊரின் கீழ் இருப்பவைகளாகும். ராமநாதன் கோயிலான 108 சிவலிங்கக் கோயில் முதன்மைச் சாலையை ஒட்டியே உள்ளது.

சாலையை விட்டு இறங்கியதும், அழகிய தீர்த்தக்குளத்தைக் காணலாம். இந்த குளத்தின் அக்னி மூலையில் சிவாலயம் அமைந்துள்ளது. சிவாலயத்தில் முதன்மை மூர்த்தியாக கருவறையில் வீற்றிருப்பவர் ராமநாதேஸ்வரர் ஆவார். இவர் ராமரும், சீதையும் தமது பரிவாரங்களுடன் வழிபட்ட மகாலிங்கமாவார். இந்த லிங்கம் ஐந்தடிக்கும் மேல் உயரமானதாகவும் கனகாத்திர கம்பீரமானதாகவும் இருக்கின்றது.

மேற்கு நோக்கிய வாயிலுக்கு வெளியே நந்தி மண்டபம், பலிபீடம் ஆகியவை உள்ளன. இந்த வாயிலுக்கு வெளியே தெற்கு நோக்கியவாறு அம்பிகை சந்நதி பெரியதாகவும், விசாலமானதாகவும் இருக்கிறது. இதில் பெரியவடிவுடன் அன்னை பராசக்தி, பர்வதவர்த்தினி என்னும் பெயரில் எழுந்தருளியுள்ளார்.நாம் வாயிலைக் கடந்து கோயிலுக்கு உள்ளே சென்றதும், முதலில் பிராகாரத்தை வலம்வரலாம். கன்னிமூலையில் கணபதி எழுந்தருளியுள்ளார். இவரை வணங்கிய பின்னர், முருகனை வணங்கி விட்டு வடக்குத் திருமாளிகை பத்தியை அடையலாம். இங்கு சிறிய மண்டபத்தில் ராமர் தமது பரிவாரங்களுடன் சிவலிங்க பூஜை செய்யும் காட்சி புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்துள்ள வடக்குப் பிராகாரத் திருமாளிகை பத்தி மூன்று பந்திகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நெடும் பந்தியில் வரிசைக்கு 35 லிங்கங்கள் வீதம், 3 வரிசையில் 105 லிங்கங்கள் அமைந்து உள்ளன. இவை யாவும் அளவால் பெரிய லிங்கங்களாகும். ஒவ்வொரு லிங்கத்திற்கும் பஞ்சமுக விளக்கு அமைத்து, அதன் ஐந்து முகங்களிலும் திரியிட்டுத் தீபம் ஏற்றுகின்றனர். இந்த லிங்கப்பந்தி பார்ப்பதற்குக் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது. இந்த லிங்கங்களை வலம் வந்து வணங்குகின்றனர். இவை யாவும் ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை என்று கூறுகின்றனர்.

இந்த லிங்கங்களை வலம் வந்து வணங்கியபின், பிராகாரத்தின் கோடியில் அமைந்துள்ள, காசி விஸ்வநாதரையும் அவருக்கு அருகில் சந்நதி கொண்டுள்ள விசாலாட்சி அன்னபூரணி தேவியரையும் வணங்கி மகிழ்கிறோம். கோமுகிக்கு அருகில் சண்டேஸ்வரர், அவரை அடுத்து துர்க்கை ஆகியோர் உள்ளனர். தென்கிழக்கு முனையில் நால்வர் பெருமக்களும், சேக்கிழாரும் தனி வளைவிற்குள் வடக்கு நோக்கியவாறு இருக்கின்றனர். அவர்களை வணங்கிய பின் தெற்கு நோக்கி காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை வணங்கி அருள் பெறுகிறோம். அவரை அடுத்து இரண்டு ஆஞ்சநேயர் திருவுருவங்கள் உள்ளன.

இத்தலத்தில் நெடுநாள் வாழ்ந்து மரண மடைந்த இரண்டு வானரங்களின் நினைவைப் போற்றும் வகையில், இந்த இரண்டு அனுமன் திருவுருவங்கள் இங்கே அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.இவரை அடுத்து கணபதியைக் கண்டு தொழுகிறோம். பின்னர் மேற்கு நோக்கிய வாயில் வழியாக மகாமண்டபத்தை அடைகிறோம். இந்த மண்டபத்தின் வடக்குப் பகுதியில் பாதுகாப்பு அறையில் நடராசர், சோமாஸ்கந்தர், தனி அம்மன் சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன், வள்ளி தெய்வயானை, சண்டேஸ்வரர், முதலிய உலாத் திருமேனிகள் எழுந்தருளி வைக்கப்பட்டுள்ளன. இவர்களை வணங்கிய பின்னர் விசாலமான அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் மிகப் பெரிய வடிவில் இருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ராமநாதப் பெருமானைக் கண்டு தொழுகிறோம். இவர் திருமேனி அற்புதக் கோலமாகக் காட்சியளிக்கிறது.

ராமர் வழிபட்ட இந்த மூர்த்தியைக் கண்ணாரக் கண்டு வழிபட்டால் முன்செய்த பாவங்கள் யாவும் நாசமடைந்து நன்மை பெருகும் என்பது உறுதியாகும். இவரை வழிபட்டு அனுமன், சனீஸ்வரன், ராம லட்சுமணர், வானரச் சேனைகள் ஆகிய யாவரும் பிரம்மகத்தி முதலான பாவங்கள் நீங்கி மேன்மை அடைந்துள்ளனர். நாமும் நமது பாவ வினைகள் நீங்கி, புண்ணியம் பெற்று சுகமான வாழ்வைப் பெற இவரிடம் பிரார்த்திப்போம்.

கருவறையில் ஒன்று, வடக்குப் பிராகாரத்தில் 106 லிங்கங்கள் ஆக மொத்தம் 107 லிங்கங்களைத் தரிசித்த நாம், 108-ஆவது லிங்கத்தைக் காணக் கோயிலுக்கு வெளியே வந்து, அதன் தென்புறம் உள்ள பெரிய சந்நதியை அடைகிறோம். இது முகமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகியவற்றுடன் கூடிய தனிக்கோயிலாகவே இருக்கிறது.இதனுள் வீற்றிருக்கும் லிங்கவடிவமும் பெரியதாகவே இருக்கிறது. இவருக்கு அனுமந்தீசர் என்பது பெயராகும். ராமரிடம் உத்தரவு பெற்று, ஆஞ்சநேய சுவாமி 108-வது லிங்கத்தைத் தனியே அமைத்து சிவனருள் பெற்றதாகக் கூறுகின்றனர். இந்த சந்நதி மூலத்தானத்திற்கு இணையாகவே இருக்கிறது.

இந்த தலத்தில் 108 லிங்கங்களை வழிபட்ட பின்னரே அன்னை பர்வதவர்த்தினியை வழிபட வேண்டும் என்ற வழக்கத்தை வைத்துள்ளார். அதன்படியே 108 லிங்கத்தைத் தரிசித்த பின் அன்னையை வழிபட்டு அருள்பெறுகிறோம்.தஞ்சாவூரில் இருந்து சுமார் 34 கி.மீ., தொலைவில் பாபநாசம் உள்ளது.

தொகுப்பு: ஆட்சிலிங்கம்

Tags : Lord Rama ,Lingams ,
× RELATED பாரதத்தின் பழமையான சிவலிங்கம்