×

செங்கண் நாயனார் சேவடி போற்றி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிவ.சதீஸ்குமார்

* கோச்செங்கட் சோழ நாயனார் குருபூஜை - 21.02.2023

உலகில் இறைவனுடன் ஒப்பிடத்தக்க ஒரே உறவு தாய் மட்டும் தான். ஒரு துறவி அனைத்தையும் துறந்தாலும் தாயின்மீது கொண்ட அன்பைத் துறக்கக்கூடாது. துறவி தெருவில் நடந்து போகும்போது எதிரில் தன் தாய் நடந்து வந்தால் ‘நான்தான் துறவி ஆகி விட்டேனே’’ என்று தாயை வணங்காமல் போனால் துறவிக்குப் பாவம் சேரும். ‘‘தாயிற் சிறந்த தயாவான தத்துவனே’’ என்று மாணிக்கவாசரும் ‘‘பெற்ற தாயின் ஆயின செய்யும்’’ என்று ஆழ்வாரும் ஆண்டவனை அன்னையுடன் தான் ஒப்பிடுகின்றனர். அப்படி ஒப்பிட அன்னையின் ஒப்பற்ற தியாகம்தான் காரணம்.

ஒரு தாய் ஒரு குழந்தையை 7,200 மணி நேரம் சுமக்கிறாள். சுமையைத் தூக்கிக் கொண்டிருக்கும் யாராக. இருந்தாலும் தன் சுமை குறையக்குறைய மகிழ்ச்சி அடைவர். ஆனால், தாய் மட்டும் தனது வயிற்றில் வளரும் குழந்தையின் எடை குறைந்தால் கவலைப்படுவார். மாறாக, எடை அதிகரித்தால் தான் மகிழ்ச்சி அடைவார்.இத்தகு தாய்மையின் உன்னதத்தைப் போற்றும் புராணம் ஒன்று பெரிய புராணத்திற்குள் உள்ளது. சோற்றால் மடை அடைக்கும் சோழவள நாட்டில் சுபதேவன்- கமலவதி தம்பதியர் குழந்தைப்பேறு இல்லாமையால் எல்லையில் புகழுடை தில்லைக்குச் சென்று இறைவனை வழிபட்டனர். வழிபாட்டின் பயனாக கமலவதி மணி வயிறு வாய்க்கப் பெற்றார். அவரின் வயிற்றில் கருவாக ஆண் குழந்தைக்கு முற்பிறவிக்கதை ஒன்றுண்டு.

நீருக்கு உரிய திருத்தலமாக திருவானைக்காவில் நாள்தோறும் ஒரு யானையும் ஒரு சிலந்தியும் வழிபாடு செய்தன. யானை தன் தும்பிக்கையால் நீர் சொரிந்து வழிபாடு செய்ய, சிலந்தியோ இறைவன் திருமுடியின் மீது மரத்தின் சருகுகளோ, மற்ற பொருட்களோ விழாதவாறு நூற்பந்தர் அமைத்து வழிபட்டது. நூற்பந்தரைக் கண்ட யானை, அது அனுசிதம் என்று நூற்பந்தரைச் சிதைத்தது. கோபம் கொண்ட சிலந்தி யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து துன்புறுத்தியது. துன்பம் தாங்காத யானை தும்பிக்கையை தரையில் அடிக்க, சிலந்தியும் யானையும் இறந்தன.
வழிபட்ட முறையால் சிலந்தியை அடுத்த பிறவியில் சோழ மன்னனாகப் பிறந்து பின் வீடுபேறு அடையுமாறு இறைவன் அருள் செய்தார்.

அந்தச் சிலந்திதான் கமலவதியாரின் வயிற்றில் கருவாக வந்தது இவ்வரலாற்றை,

‘‘சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல் பந்தர் செய்து
உலந்தவண் இறந்தபோதே கோச்செங் கணானுமாகக்
கலந்தநீர்க் காவிரிசூழ் சோணாட்டூச் சோழர் தங்கள்
குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே’’


-  என்று அப்பரடிகள் பதிவு செய்துள்ளார்.

குழந்தை பிறக்கும் தறுவாயில் சோதிடர்கள், இக்குழந்தை இன்னும் ஒரு நாழிகை (24 நிமிடம்) கழித்துப் பிறக்குமாயின் மூன்று உலகங்களையும் ஆளும் என்று சொல்ல, தன் மகன் உலகங்களையும் காக்கும் ஒப்பற்ற தொண்டனாக வர வேண்டும் என்று கருதிய கமலவதியார், குழந்தையின் பிறப்பைத் தடைபடுத்தி, தன்னைத் தலை கீழாகக் கட்டித் தொங்கவிடுமாறு கட்டளையிட்டார். அவ்வாறு செய்ததால் குழந்தையின் தலைக்கு இரத்தம் ஏறியது. சிவந்த கண்களுடன் ஒரு நாழிகை கழித்து அக்குழந்தை பிறந்தது.

ஈன்ற பொழுதில் உவந்த கமலவதியார், அக்குழந்தையை ‘‘கோச்செங்கணா’’ என்று அழைத்தவாறு இறைவனடி சேர்ந்தார். ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் என்பது மறுபிறப்பு. ஒரு உடம்பிலிருந்து ஒரு உயிர் பிரிந்தால் அது இறப்பு. ஆனால் பெண்ணினுடைய உடலிலிருந்து மட்டும் உயிர் பிரிந்தால் அது பிறப்பு.

அதுவே பெண்மைக்கு இறைவன் தந்த சிறப்பு. கமலவதியார் பிரசவ வலியைத் தாங்கிக் கொண்டு உலகம் உய்வு பெறவேண்டும் என்று நினைத்தார். ஒரு மனிதன் இயல்பாக தாங்கக்கூடிய வலியின் அளவு 45 டெல் (வலியின் அளவு கோல்-டெல்) ஆகும். பெண்கள் பிரசவத்தின்போது 57 டெல் வலியைக் கடக்கின்றனர். இங்கு கமலவதியார் 1 நாழிகை தாமதத்தின் மூலம் 57 டெல் அளவைவிட அதிகமாகக் கடந்திருப்பார் என்பது உண்மை.

வலியைத் தாங்கிக் கொண்ட உலகுக்கு வழிகாட்டிய கமலவதியார் திருமகன் கோச்செங்கண்ணன் அரசாட்சி செய்ததோடு ஆண்டவனுக்குப் பல ஆலயங்களும் அறச் சாலைகளும் சமைத்து ஆண்டவனடி அடைந்தார் என்று வரலாறு.

இவ்வரிய வரலாற்றை, திரைபொரு பொன்னி நன்னீர்த்துறை வன்றிகழ் செம்பியர்கோன் நரபதி

 நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே’’ என்று சுந்தரரரும்,
‘‘புத்தியினாற் சிலந்தியும் தன் வாய்நூலால்
புதுப்பந்தர் அதுவிளைத்துச் சருகான் மேய்ந்த
சித்தியினால் அரசாண்டு சிறப்புச் செய்து    
சிவகணத்துப் புகப்பெய்தார்’’


என்று அப்பரும் போற்றி மகிழ்கிறார்கள்.

தொகுப்பு: ஆட்சிலிங்கம்

Tags : Senkan Nayanar ,Sevadi Bothi ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?