×

திருக்குறள் தரும் இன்பம்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருப்பூர் கிருஷ்ணன்

திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்ற மூன்றைக் குறித்தும் பேசுகிறது. அதன் மூன்று பகுதிகள் அறத்துப்பால் பொருட்பால் இன்பத்துப் பால் என்றே அழைக்கப்படுகின்றன. எனவே திருக்குறளில் மூன்றில் ஒரு பகுதி இன்பத்தைப் பற்றிப் பேசுவதுதான் என்று கொள்ளலாம். இன்பத்தைப் பற்றி இன்பத்துப் பாலில் பேசும் வள்ளுவம், இன்பம் என்ற சொல்லையே இன்பத்துப் பாலிலும் மற்ற இரு பால்களிலும் எடுத்தாள்கிறது.

பற்பல குறட்பாக்களில் இன்பம் என்ற சொல் தொடக்கச் சொல்லாக முதலிலேயே இடம்பெற்று இன்பம் தருகிறது.  

`இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.’

(குறள் எண் 369)

ஆசை எனப்படுகிற பெரிய துன்பம் இல்லாதுபோனால் ஒருவனுக்கு இன்பம் இடையறாமல் வாய்க்கும்.

`இன்பம் விழையான் வினைவிழைவான் தன்
கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண்.’

(குறள் எண் 615)

இன்பத்தை விரும்பாதவனாய் செயல் செய்வதையே விரும்புகிறவன் தன் உறவினர் நண்பர்களின் துன்பத்தைத் துடைத்துக் காக்கிற தூணைப் போன்றவன் ஆவான்.

`இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.’

(குறள் எண் 628)

இன்ப நாட்டம் இல்லாமல் இடர்ப்பாடுகள் இயல்பு என்ற தெளிவு எவனுக்கு இருக்கிறதோ அவன் ஒருபோதும் துன்பப் படுவது இல்லை.

`இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்
துள் துன்பம் உறுதல் இலன்.’

(குறள் எண் 629)  

இன்பம் வந்த காலங்களில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலங்களில் அந்தத் துன்பத்தை அடைவதும் இல்லை.

`இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பம் கெடின்.’
(குறள் 854)

பகையுணர்வு என்று சொல்லப்படும், துன்பங்களில் கொடியதான துன்பம் இல்லாதுபோனால் அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும்.

`இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.’

(குறள் 1052)

நாம் இரந்து கேட்டதைக் கொடுப்பவர் எந்த மனவருத்தமும் இல்லாமல் கொடுப்பாரானால் அவ்வாறு இரத்தலும் கூட ஒருவனுக்கு இன்பம்தான்.

`இன்பம் கடல் மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனில் பெரிது.’

(குறள் எண் 1166)

காதலால் கிடைக்கும் இன்பம் கடல் போல் பெரியதுதான். ஆனால் பிரிவினால் ஏற்படும் துயரமோ கடலை விடப் பெரியது. மேலும் சில குறட்பாக்களில் இன்பம் என்ற சொல் இடையிடையே வருகிறது.

`இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.’

(குறள் 352)

மயக்கம் நீங்கியவர்களாய் குற்றமற்ற மெய்யுணர்வை உடையவர்களுக்கு அம்மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்பத்தைத் தரும்.  

`தாம் இன்புறுவது உலகின்புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந்தார்.’

(குறள் 399)

 தாம் கற்ற கல்வியால் உலகமே இன்புறுவதைக் கண்டு கற்றறிந்தோர் மேலும் கற்பதையே விரும்புவர்.

*வள்ளுவர் கையாளும் இன்பம் என்ற சொல்லை நன்கு ஆராய்ந்தால் நமக்கு ஒன்று புரிய வரும். இன்பம் என்பது புறத்தைச் சார்ந்ததல்ல. அகத்தைச் சார்ந்த ஒரு மனநிலை அது. அதை நிரந்தரமாக அடைய முயல்வதே மனித வாழ்வின் நோக்கம்.

*இன்பத்தைச் சிற்றின்பம் என்றும் பேரின்பம் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கிறது நம் ஆன்மிக மரபு. மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐம்புலன்களால் நாம் அனுபவிக்கும் அனைத்து இன்பங்களும் சிற்றின்பங்களே.இத்தகைய சிற்றின்பங்களைக் கடந்த ஓர் இன்பம் உண்டு. அதுதான் இறையருளில் திளைத்து வாழ்தல். ஆன்மாவின் இருப்பை அறிந்து நாம் உடலல்ல, ஆன்மாவே என உணர்தல்.

மெய்ஞ்ஞானிகள் அத்தகைய பேரின்பத்தில் திளைத்து வாழ்பவர்கள். அதனால் எந்தத் துன்பமும் அவர்களை ஒட்டுவதில்லை. பற்றற்றான் பற்றினைப் பற்றிப் பிற பற்றுக்களை விடக் கற்றவர்கள் அவர்கள்.பகவான் ரமண மகரிஷி தம்மை உடலல்ல, ஆன்மா என்றே உணர்ந்திருந்தார். அந்த உணர்விலேயே அவர் வாழ்ந்துவந்தார். தம் உடலில் ஏற்பட்ட புற்றுநோயால் விளைந்த துன்பத்தை அவர் உணரவில்லை.

மகான் சதாசிவப் பிரம்மேந்திரர் தம் கை வெட்டப்பட்ட போதும் அதை உணராதவராய்த் தொடர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தார். மனமொன்றி ஆன்மாவில் திளைத்திருந்த அவருக்கு தம் உடல் பற்றிய பிரக்ஞையே ஏற்படவில்லை.சென்னை திருவான்மியூரில் கோயில் கொண்டிருப்பவர் பெண் சித்தரான சக்கரையம்மா. ஆகாயத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றிருந்தார் அவர் என்ற செய்தி  திரு.வி.க. எழுதிய உள்ளொளி என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

சக்கரையம்மா அடிக்கடி உரக்கச் சிரித்துக் கொண்டிருப்பார். அது ஏன் என்று அவர் சீடர் நஞ்சுண்டராவ் கேட்டபோது அவர் சொன்ன பதில் முக்கியமானது. `மகனே! அறியாமையினாலேயே மனிதர்கள் துன்பப்படுகிறார்கள். எல்லா மனதர்களும் அடிப்படையில் ஆனந்தமானவர்களே. நீ யார் என்ற உண்மையை நீ உணர்ந்துகொண்டுவிட்டால் நிரந்தரமான ஆனந்தத்தில் என்னைப்போல் நீயும் திளைக்க முடியும். நீ உடல் அல்ல, ஆன்மா என்ற உண்மையை உணரக் கற்றுக்கொள்.’

*எந்நாளும் இன்பம் மட்டும்தான், துன்பமே கிடையாது என அறைகூவிச் சொல்கிறது நாவுக்கரசர் எழுதிய பாடல்.

`நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம், நடலை இல்லோம்.

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் இன்பமே எந்நாளும் துன்ப மில்லை!’

*`யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!’ என்ற சொற்றொடர் தமிழில் புகழ்பெற்று விளங்குகிறது. அதைச் சொன்னவர் யார் என்று அறியாமலே ஏராளமானோர் அந்தச் சொற்றொடரை மேற்கோளாகக் காட்டுகிறார்கள். திருமூலரின் திருமந்திரத்தில் வருகிறது அந்த அழகிய வாசகம்.

`யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே!’

`ஆன்மிகத்தில் நான் பெற்ற எல்லா இன்பத்தையும் இந்த உலக மக்கள் அனைவரும் பெறட்டும். விண்ணைத் தாங்கி நிற்கும் வேதப்பொருளான கடவுள் நம் உடலையும் தாங்கி நிற்கிறார். உணர்வு மிக்க மந்திரத்தை மீண்டும் மீண்டும் ஓதும்போது அந்த இறைவன் நம்மில் தோன்றுவார்’ என்பது இந்தப் பாடலின் பொருள்.

*மகாகவி பாரதியார் மானிடர்கள் அடையும் இன்பங்கள் ஒன்றல்ல பல அல்ல, பலப்பல கோடி என்கிறார். இறைவனின் கருணையை எண்ணிப் பரவசத்துடன் பாடல் புனைகிறார் அவர்.

`எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள்
இறைவா இறைவா இறைவா!
சித்தினை அசித்துடன் இணைத்தாய் - அங்கு
சேரும் ஐம்பூதத்தின் வியனுல கமைத்தாய்
அத்தனை உலகமும் வண்ணக் களஞ்சியம்
ஆகப் பலப்பல நல் அழகுகள் சமைத்தாய்...
முக்தியென்றொரு நிலை சமைத்தாய் - அங்கு
முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலை வகுத்தாய்
- எங்கள் பரமா பரமா பரமா!’

பாரதியார் எழுதிய முப்பெரும் பாடல்களில் குயில் பாட்டும் ஒன்று. அதில் இன்பம் என்பதை விளக்கிக் குயில் பாடுவதாகக் கவிஞர் எழுதிச் செல்லும் வரிகள் சிந்தனைக்குரியவை.
`காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்...
இன்பம் இன்பம் இன்பம்
இன்பத்திற்கோர் எல்லை காணில்
துன்பம் துன்பம் துன்பம்!’

இன்பத்தின் எல்லையில் துன்பம் காத்துக் கொண்டிருக்கிறது எனப் பாரதிக் குயில் கூவிக் கூவிச் சொல்கிறது.

 *இன்பம் தருவனவற்றில் முக்கியமானது இசை. சங்கீதம் அதைக் கேட்பவர் மனத்தில் இன்பத்தை எழுப்புகிறது.

இசை மேலான இன்பத்தைத் தருகிறது என்பதை பாரதிதாசன் உணர்ந்திருந்தார். அதிலும் நம் தாய்மொழியான தமிழைப் பெரிதும் நேசித்த அவர், தமிழிசை தன் மனத்திற்குப் பேரானந்தம் தருவதையும் அறிந்திருந்தார்.தமிழிசை அளவற்ற ஆனந்தத்தைத் தரக் காரணம், அதில்தான் இசையை நுகர்வதோடு பாடல் சொல்லும் கருத்தையும் முழுமையாக அறிந்துகொள்ள முடிகிறது. கருத்தும் இசையும் சேர்ந்து, நாம் பெறும் இன்பத்தை இருமடங்காக்குகின்றன.

`துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’ என்பது பாரதிதாசனின் புகழ்பெற்ற பாடல். `திருக்குறளில் ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா?’ என்று கேட்கிறது அந்தப் பாடலில் உள்ள வரி. திருவள்ளுவரை இறைவனார் என்றே போற்றுகிறார் பாரதிதாசன்.

`துன்பம் நேர்கையில் யாழ்எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா? நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா?
அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே
அறிகிலாத போது தமிழ்
இறைவனாரின் திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா? கண்ணே!
இயம்பிக் காட்ட மாட்டாயா?’

*கவிஞர் கு.மா. பாலசுப்பிரமணியம் `வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படத்திற்காக எழுதிய பாடலில் வெண்ணிலவு `இன்பம்’ பொங்க ஒளிவீசுவதாகக் குறிப்பிடுகிறார். `இன்பம்’ என்ற சொல்லை அந்தப் பாடலில் பல இடங்களில் பயன்படுத்துகிறார் அவர். ஜி. ராமநாதன் இசையமைப்பில் பி. சுசீலா, பி.பி. நிவாஸ் பாடிய அந்தப் பாடலின் சில வரிகள் இதோ:

`இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக் கண்டு மெளன மொழி பேசுதே
தென்றல் உன்னைச் சொந்தமாய்த் தீண்டுதே அதை
எண்ணியெண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே!...
கொஞ்சிப் பேசும் நம் எண்ணம்போல் பாரிலே
இனி கொள்ளை கொள்ளை இன்பம்தானே வாழ்விலே....
துள்ளிஆடும் பெண்மானே எந்தன் வாழ்விலே
இன்பதீபம் உன் ரூபம்தான் மாமயிலே..
வெள்ளம்போலே என் ஆவல் மீறுதே ஒரு
எல்லையில்லா இன்பம் அலை மோதுதே...
அன்பில் ஊறும் மெய்க்காதல் போலே பாரிலே
இன்பம் ஏதும் வேறில்லையே ஆருயிரே `

`மானமுள்ள மறுதாரம்` என்ற பழைய திரைப்படத்தில் கே.வி. மகாதேவன் இசையமைப்பில் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் ஒலிக்கிறது கவிஞர் மருதகாசியின் பாடல். எது உண்மையான இன்பம் என்பதை ஆராய்கிறது அந்தப் பாடல்:

` இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு - அது
எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு!
இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை - இதை
எண்ணிடாமல் சேர்த்துவைத்துக் காத்து என்ன நன்மை?
இருக்கும்வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை
இல்லையென்றால் வாழ்வினிலே உனக்கு ஏது இனிமை?

கனிரசமாம் மதுஅருந்திக் களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்
இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம் - அவள் இதழ்சிந்தும் புன்னகையே அளவில்லாத
இன்பம்!

மாடிமனை கோடிபணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம்
மழலைமொழி வாய்அமுதம் வழங்கும்
பிள்ளைச் செல்வம் - உன்
மார்மீது உதைப்பதிலே கிடைப்பதுதான்
இன்பம் `

மனித வாழ்வில் நிரந்தரமான இன்பத்தை அடைய என்ன வழி? அதற்கு வழி ஒன்றே ஒன்றுதான். திருக்குறளைப் பயில்வதும் அது சொல்லும் கருத்துக்களைப் பின்பற்றி வாழ்வதும் தான் அது. திருக்குறள் வழி நின்று நிலையான இன்பத்தைப் பெறுவோம்.

(குறள் உரைக்கும்)

Tags :
× RELATED ஸ்ரீ ஸாயி பாபா புராணம்!