×

சிந்தனைக்கு இனிய சிவராத்திரி

சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என்று பொருள். சகல மங்கலங்களும் தரும் ராத்திரி சிவராத்திரி. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த பொழுது, வெளிவந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்தினார். அந்த விஷம் உள்ளே சென்றுவிட்டால், உலகம் வருந்துமே, என்று நினைத்த உமையம்மையார், அது தொண்டைக்கு கீழே இறங்காமல் தம்முடைய திருக்கரத்தால் சிவபெருமானுடைய கழுத்தில் தடுத்து நிறுத்தினார். அன்பினால் அம்பிகை அந்த விஷத்தை சிவன் கண்டத்தில் நிறுத்தியதால் சிவபெருமானுக்கு திருநீலகண்டன் என்ற திருநாமம் உண்டாயிற்று. இந்த அற்புதமான சம்பவம் நடந்த தினம் சிவராத்திரி. அன்றைய தினத்திலே தேவர்களும் முனிவர்களும் ஈசனைத்  துதித்து வழிபட்டனர். உயிர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் சிவபெருமானைப் போற்றி வழிபடும் நாள்தான் சிவராத்திரி.

புஷ்பபலன் என்னும் நூல் ஒரு கொன்றை மலரை சிவனுக்கு சாத்துபவர் சாலோக பதவியையும், இருமலர்கள் சாத்துபவர் சாமீப பதவியையும், மூன்று மலர்கள் சாத்துபவர் சாரூப பதவியையும், நான்கு மலர்களைச் சாத்துபவர் சாயுஜ்ய பதவியையும் அடைவர் என்று புராணம் கூறுகிறது. வில்வமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால், ஒரு வில்வம் லட்சம் சொர்ண புஷ்பங்களுக்குச் சமம். இதில் ஒன்றினை ஈசனுக்கு அர்ப்பணித்தால் மகாதோஷங்களும் நீங்கி, சகல நன்மைகளும் உண்டாகும். மகாபாரதத்தில், அர்ஜுனன் சிவராத்திரி விரதத்தை கடைப்பிடித்து பாசுபதாஸ்திரத்தை பெற்றதாகச் சொல்கிறார்கள்.

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ளது திருவேட்களம். இந்த தலத்தை திருவருட்குளம் என்றும் அழைப்பர். ஈசன் பாசுபதேஸ்வரராகவும், அம்பிகை சற்குணாம்பாளாகவும் திருவருள் புரியும் தலம். அம்பாள் சந்நதியில் சிங்கத்திற்கு பதில் நந்தி இருப்பது சிறப்பு. இந்த தலத்தின் தலவிருட்சமாக மூங்கில் மரமும், தீர்த்தமாக கிருபா தீர்த்தமும் அமைந்துள்ளது. சம்பந்தர் இங்கிருந்து சிதம்பரத்தைத் தரிசித்தார் எனப்படுகிறது.

கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பொருப்பு வெஞ்சிலை யாற்புரஞ் செற்றவன்
விருப்பன் மேவிய வேட்களங் கைதொழு
திருப்ப னாகில் எனக்கிட ரில்லையே.


- என்று இந்த தலத்தை போற்றுவார் நாவுக்கரசர்.

அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்ற இந்த தலத்தில் சிவராத்திரி சிறப்பாக நடக்கும். வன் தொண்டரான கண்ணப்பன், வேடர்குலத்தில் பிறந்தவர். வேட்டையாடச் சென்றபோது, காளத்தி மலையில் குடுமித்தேவர் என்ற சிவலிங்கத்தினைக் கண்டார். அன்பு கொண்டார். ஆகமவிதி அறியாத அவர், வாயில் நீர்சுமந்து வந்து அபிஷேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர்களாலும், இலைகளாலும் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்து, பக்குவப் பட்ட பன்றி இறைச்சியைப் படைத்தும் வந்தார். இதைக் கண்டு ஆகம விதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவகோசரியார் மனம் வருந்தினார். இறைவனிடம் முறையிட்டார்.

கண்ணப்பரின் அன்பினை உலகுக்கு உணர்த்த எண்ணிய ஈசன், தன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்ய, அதை கண்டு துடித்த கண்ணப்பர், தன் கண்ணை பறித்து லிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். லிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்றது. ஆனால், இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, “இது என்ன சோதனை?” என்று நினைத்தவர், தனது இடக்கண்ணையும் பறித்து, இறைவனுக்கு வைக்கத் துணிந்தார்.  “நில் கண்ணப்ப” என்று அவருடைய வைராக்கியத்தையும், தியாகத்தையும் கண்டு சிவபெருமான் காட்சிதந்தார்.

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை  ‘‘வா” என்ற வான் கருணை
சுண்ணப்பொன்னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பி


கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும்கூட இறைவர் என்னையும் ஆட்கொண்டருளியதாக மணிவாசகர் திருகோத்தும்பியில் குறிப்பிடுகின்றார்.
கண்ணப்பரின் தியாகம் போற்றும் திருக்காளத்திநாதர் இட்டகாமிய மாலை நூலில்,

தருமம் தவம் சற்று அறியாத வேடுவன் தன் செருப்பும்
அரு முந்து வேணிக்கு அணி மா மலர், அவன் வாய் அதகம்
திரு மஞ்சனப் புனல் பல்லால் அவன் மென்று தின்ற தசை
அருமந்த போனகம் அன்றோ, நம் காளத்தி அப்பருக்கே


- என்று இந்த நிகழ்ச்சி விவரிக்கப் படுகிறது.

கண்ணப்ப நாயனாருக்கு இப்படி சிவன் காட்சி தந்த நாள் சிவராத்திரி. திருக்காளத்தியில் மகாசிவராத்திரி 10-நாட்கள் உற்சவம் மிக சிறப்பாக கொண்டாடப்படும். திருத்தேர்ப் பவனி என்ன, சிவராத்திரி இரவு நந்திசேவை என்ன, என அமர்க்களப்படும். சிவராத்திரியில் மலைவலம் வரும் விழா இங்கு வெகு சிறப்பு. சிவபெருமான், மார்க்கண்டேயனுக்காக காலனை உதைத்து ``கால கண்டேஸ்வரர்’’ என்ற திருநாமம் பெற்றதும் சிவராத்திரி அன்றுதான். எளியவர்களின் அன்புக்கு கட்டுப்பட்ட ஈசன், ஆதி அந்தம் இல்லாத ஒரு ஜோதியாக விளங்கினாலும், தனக்கென ஒரு உருவத்தை தாங்கிய ஈசன், சிவராத்திரி அன்று  லிங்கோத்பவராக காட்சி தருகின்றார். இந்த லிங்கோத்பவ மூர்த்தியை கோயில் பிராகாரத்தில் நாம் தரிசிக்க முடியும். சிவபெருமானுக்கு இன்னும் பல உருவங்கள் உண்டு.

அழகு பொங்கும் பிட்சாடன மூர்த்தி, சுந்தரமே வடிவெடுத்தது போன்ற சுந்தரேஸ்வரர், பக்தர்களின் அச்சத்தைப் போக்கும் பைரவர், வீரமே உருவாக விளங்கும் வீரபத்திரர், ஆனந்த நடனமாடும் நடராஜர், ஞானத்தை தரும் தட்சிணாமூர்த்தி என்று எத்தனை எத்தனை வடிவங்களை, சிவப் பரம்பொருள் எடுக்கிறார். 64 திருக்கோலங்கள் அவருக்கு ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளது என பெரியவர்கள் சொல்லுகின்றார்கள். அதில் சில வடிவங்களை அறிய சிவராத்திரி உதவும். முதல் யாமத்தில் சோமாஸ்கந்தர், இரண்டாம் யாமத்தில் தென்முகக் கடவுள், மூன்றாம் யாமத்தில் லிங்கோற்பவர், நான்காம் யாமத்தில் சந்திரசேகரர் (இடபரூபர்) என சிவராத்திரியில் தரிசிக்கலாம்.

தொகுப்பு: புவனகிரி முனைவர் ஸ்ரீராம்

Tags : Shivratri ,
× RELATED மகா சிவராத்திரி எதிரொலி பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த பேருந்துகள்