நன்றி குங்குமம் ஆன்மிகம்
ஞானமும் மனஅமைதியும் தரும் ஞானமலை-ஞானிகளும், மகான்களும் தவமியற்றும் மலை-குரங்குகள் கூட்டம் புடைசூழ சீதை குகைக்கொண்ட மலை-கி.மு.நான்காயிரம் ஆண்டின் கீறல்கள் கொண்ட கோயில்-நில அளவை, நில விற்பனை குறித்த செய்திகள் கூறும் கல்வெட்டுகள் கொண்ட தலம்-மன்னனுக்காக உயிர்த்தியாகம் செய்த மங்கை வாழ்ந்த ஊர்சோழர்,பாண்டியர்,காடவராயர்,சம்புவராயர்,விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்த ஆலயம்-ஆறாம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கொண்ட ஆலயம் என அளவிடமுடியாத பெருமைகள் கொண்டது பெருமுக்கல் மலையாகும்.
தொன்மைச்சிறப்புதமிழகத் தொல்லியல் துறை சார்பில் கல்வெட்டு ஆய்வாளர் அர. வசந்த கல்யாணி அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், அறுபது கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் இவ்வூரின் தொன்மையை அறியமுடிகிறது. இம்மலையில் காணப்படும் கீறல் உருவங்கள் கி.மு. நான்காயிரம் ஆண்டுகளைச் சேர்ந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் என்றாலும், மலைக்குகையில் காணப்படும் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் ஆறு மற்றும் ஏழாம் நூற்றாண்டைச்சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன.இக்கோயில் சோழர், பாண்டியர், காடவராயர், சம்புவரையர், விஜயநகர மன்னர்கள் ஆகியோரால் திருப்பணி செய்யப்பட்டதைக் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது. இவற்றில் பழைமையானதாக விளங்குவது விக்கிரமச் சோழன் காலத்துக் கல்வெட்டாகும். இவனது காலத்தில்தான் மலை மீதுள்ள திருவான்மிகை ஈசுவரம் உடையார் கோயில்,பெரியக் கற்கோயிலாக எழுப்பப்பட்டது. இதற்குச் சான்றாக கருவறையின் தென்சுவரிலுள்ள விக்கிரமச் சோழனின் மூன்றாம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு விளங்குகின்றது. ஆனால்,தற்போது காணப்படும் கோயிலை, செங்கல் ஆலயம் முதலாம் குலோத்துங்கச் சோழனின் காலத்தைச் சேர்ந்தது.தற்போது காணப்படும் கருங்கற்கோயிலைக் கட்டுவதற்குப் பொருள் உதவி புரிந்த காக்குநாயகனின் உருவமும், இக்கோயிலைக் கட்டிய சிறு தொண்டனது உருவமும், கோயில் சைவாச்சாரியான் திருச்சிற்றம்பலமுடையான் அன்பர்க்கரசுப்பட்டன் உருவமும் சிற்பங்களாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தக் காக்குநாயகன் இவ்வூர் மக்களுக்கு பாசன வசதிக்காக மிகப் பெரிய ஏரியை ஏற்படுத்தித் தந்துள்ளான். இதனை இந்த ஏரியின் நடுவில் உள்ள கி.பி.12 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு உறுதிபடுத்துகின்றது.மன்னர் காலத்தில் இத்தலம், ‘‘ஜெயங்கொண்ட சோழமண்டலத்து ஓய்மாநாடான விஜயராஜேந்திர வளநாட்டுப் பெருமுக்கிலான கங்கைகொண்ட நல்லூர்”,;என இன்றைய பெருமுக்கல் வழங்கப்பட்டது.
மலைக்கோயில்உயர்ந்த, பசுமையான மலையாக பெருமுக்கல் மலை விளங்குகின்றது. இம்மலையில் ஏறுவதற்கு, முன்புறமும் பின்புறமும் படிக்கட்டு வசதிகள் உள்ளன. ஆலயம் கிழக்கு நோக்கியவண்ணம் அமைந்துள்ளது. இக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், முன்மண்டபம், திருச்சுற்று, வெளி மண்டபம், திருக்குளம், மலைச்சுவர் முதலியவற்றைக் கொண்டு விளங்குகின்றது.
ஆலய அமைப்புஇவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் ஏதுமில்லை. ஆலயக் கருவறையினுள் நுழையும் முன்பாக, இடதுபுறம் விநாயகப்பெருமான் காட்சிதருகின்றார். அவரை ஒட்டியுள்ள சுவாமியின் கருவறை சதுர வடிவ அமைப்பில் உள்ளது. கருவறையில் கிழக்கு முகமாக பழங்காலத்தில் ‘‘திருவான்மீகை ஈசுவரம் உடையார்” என்றும், ‘‘திருமலை மேல்உடையார்” என்றும், ‘‘திருவான்மீசுவரமுடையான்” என்றும் கல்வெட்டுகளில் இறைவனின் திருப்பெயர்கள் காணப்படுகின்றன. ஆனால், இறைவன் ‘‘முக்யாசலேஸ்வரர்” என்றே அழைக்கப்படுகின்றார். சமஸ்கிருதத்தில் முக்கல் என்ற பெயரை முக்யா என்றும், மலை என்பதை அசலம் என்றும் சேர்த்து, முக்யாசலேஸ்வரர் என்ற பெயர் மாற்றம் பெற்றுள்ளது.இறைவன் இன்றும் கம்பீரமாக எழிலோடு காட்சி தருகின்றார். லிங்கத்தின் ஆவுடையார் வட்டவடிவமாக உள்ளது. ருத்திர பாகத்தில் பிரம்மசூத்திரம் காணப்படுகிறது. எழில்மிகு தட்சிணாமூர்த்தி கருவறையின் சுற்றுச்சுவரில் காணப்படும் ஒரே தெய்வமாக தென்திசையில் எழில்மிகு தட்சிணா மூர்த்தி திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உருவம் அன்றைய சிற்பக்கலைக்கு மிகச் சிறந்த சான்றாக அமைந்துள்ளது. இவரின் அருகில் சனகாதி முனிவர் இருவரின் உருவங்கள் காணப்படுகின்றன. ஒன்று முதுமைக் கோலத்திலும், மற்றொன்று இளமைக் கோலத்திலும் காணப்படுகின்றன. தட்சிணாமூர்த்தியின் தேவகோட்டத்தின் மேல் அசோக வனத்தில் சீதை துயரத்தோடு அமர்ந்துள்ள காட்சி குறிப்பிடத்தக்கதாகும். சீதையைச் சுற்றி பெருத்த வயிறுடன் அரக்கி இருப்பதும், மேற்குத் திசையில் குரங்கு முகம் கொண்ட வானரப்பெண் உருவம் ஒன்று குட்டிக் குரங்கைத் தழுவி நிற்பதும், மற்றொரு பெண் பூத கணம் தழுவக் காத்து நிற்பதும் குறிப்பிடத் தக்க அம்சங்களாகும்.
ஆஞ்சநேயர் ஆலயம்சிவன்கோயிலின் பின்புறம் ஆஞ்சநேயருக்கென பழைமையான தனி சந்நதி அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் ஆஞ்சநேயர் ஒரு சிறிய கல்லில் புடைப்புச் சிற்பமாக காட்சிதருகின்றார். அதன் கீழே திருக்குளம் அமைந்துள்ளது. திருக்குளத்தின் அருகே இயற்கையாகத் தோன்றிய பெரிய பாம்புப்புற்று காணப்படுகிறது.
விழாக்கள்இவ்வாலயத்தில் பிரதோஷ விழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. நந்திதேவருக்கும் சிவபெருமானுக்கும் பெரிய அளவில் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. மாசி மகத்தன்று இவ்வூரைச் சுற்றியுள்ள கீழ் சிவிரி, பழமுக்கல், பெருமுக்கல், நல்லாளம் முதலிய ஊர்களைச் சேர்ந்த உற்சவமூர்த்திகள் மலையேறி முக்யாசலேஸ்வரரைச் சந்தித்து, பின் மலையிறங்குவது வழக்கமாக நடைபெறுகின்றது. கார்த்திகை தீபத்தன்று இம்மலை மீதுள்ள கருங்கல் தீப மேடையில் மகா தீபம் ஏற்றப்படுகின்றது.
ஞானம் தரும் மலைஇம்மலையில் பல்வேறு ஞானிகளும், முனிவர்களும் சித்தர்களும் தவம் இருந்து பேறுபெற்றதை வரலாறு எடுத்துரைக்கின்றது. மயிலம் பொம்மபுர ஆதீனத்து ஸ்ரீலஸ்ரீபாலசித்தர், ஸ்ரீபாலய சுவாமிகள் போன்ற மகான்கள் இம்மலையில் தவமிருந்து அருள்பெற்றுள்ளனர். இன்றும் இம்மலையில் முனிவர்களும் சித்தர்களும் அருவமாய்த் தவமிருந்து வருவதாக நம்பப்படுகின்றது. ஆக, ஞானமும் அருளும் வேண்டுவோர் வழிபட வேண்டிய தலமாகப் பெருமுக்கல் திகழ்கின்றது என்பதே உண்மை.
தரிசன நேரம்பிரதோஷ காலத்தில் மாலையில் ஆலயம் திறந்திருக்கும்.மலையேற கிழக்கில் ஊரையொட்டி ஒருபாதையும்,மலையிறங்க மேற்கில் தாழக்கோயில் செல்லும் பாதையும் அமைந்துள்ளன. மலைக்கோயில் என்பதால் அடிவாரத்தில் விசாரித்தபின் முடிந்தால் அவர்கள் துணையோடு செல்வது நல்லது.
தொல்லியல்துறை ஆலயம்இக்கோயில் தமிழகத் தொல்லியல் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையும் கவனித்து வருகிறது.
அமைவிடம்விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டத்தில் அமைந்துள்ளது. திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில், திண்டிவனத்திலிருந்து சுமார் 11 கி.மீ. தூரத்தில் பெருமுக்கல் அமைந்துள்ளது. கிழக்குக் கடற்கரைச் சாலையில் வர விரும்புவோர் பூமீசுவரர் ஆலயத்திலிருந்து ஷேர் ஆட்டோ மூலம் மரக்காணம் பேருந்து நிலையத்திலிருந்து, திண்டிவனம் செல்லும் பேருந்தில் பயணம் செய்து பெருமுக்கலை அடையலாம். திண்டிவனம்- மரக்காணத்திற்கு அடிக்கடி பேருந்து வசதிகள் உண்டு. சொந்த வாகனத்தில் வருவோர் திண்டிவனத்திலிருந்தும்.
தொகுப்பு: பனையபுரம் அதியமான்