பாம்பு காட்டிய பஞ்சவேல் முருகன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கோவையிலிருந்து 30 கி.மீ. தெற்கில் பூராண்டான் பாளையம் உள்ளது. இங்கு பஞ்சவேல் பரமேஸ்வரர் என்னும் ஆலயம் உள்ளது. இக்கோயிலின் கருவறையில் ஐந்து வேல்களை நிலைப்படுத்தி வழிபடுகின்றனர். இக்கோயில் தோன்றிய வரலாறு பற்றிய செய்திகளைச் சுருக்கமாகக் காணலாம்.இந்தக் கோயில் வரலாற்றில் முருகன் பாம்பு வடிவில் தோன்றி வேலைக் காட்டியதும், முருகன் அருள்பெற்ற அடியவர் மழுவெடுத்துச் சத்தியம் செய்தது முதலிய செய்திகள் இடம் பெற்றுள்ளது.

ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன்பாக இப்பகுதியில் பெரிய பண்ணையார் வசித்து வந்தார். அவரிடம் ஏராளமான பசுக்கள் இருந்தன. அவை யாவும் உயர்ந்த ஜாதிப் பசுக்களாக இருந்தன. ஏராளமாக பால் கறந்தன. பண்ணையார் அந்த மாடுகளை மேய்க்க ஒரு சிறுவனை நியமித்திருந்தார். அவன் மிகுந்த யோக்கியவான். பசுக்களின் மீது அன்பு கொண்டவன். அவனது பெயர் முத்துக்குமாரசுவாமி என்பதாகும். ஒரு சமயம் கூட்டத்திலிருந்த சில பசுக்கள் மாலையில் பால் கறக்கவில்லை. பசுக்கள் ஆரோக்கியமாக இருந்த போதிலும், நன்கு மேய்ந்து கொழுத்திருந்த போதிலும், மாலையில் அவை பாலின்றி வெற்று மடியுடன் திரும்பின. பண்ணையாருக்குப் பையன் பாலைக் கறந்து விற்று விடுகிறானோ என்ற சந்தேகம் உண்டாயிற்று. பையனைப் பலவாறு இதமாகவும், பதமாகவும் கேட்டுப் பார்த்தார். பையனிடமிருந்து தெரியவில்லை என்ற பதிலே திரும்பத் திரும்ப வந்தது.

அந்தப் பையன் தெய்வத்தின் ஆளுகைக்கு உட்பட்டு படிப்படியாக தன்னை அறியாமலேயே சித்த நிலையை அடைந்திருந்தான் என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை. பண்ணையார், ஊர்மக்களைத் திரட்டினார். இரும்புக் கம்பியைப் பழுக்கக் காய்ச்சினார். பையனிடம் அதைத் தொட்டுச் சத்தியம் செய்யும்படிக் கூறினார்.முத்துக் குமரன் தயங்கவில்லை தானே முன்வந்து பழுகக் காய்ச்சிய அந்த இரும்புக் கம்பியை எடுத்தான். கனன்று காய்ந்து சிவந்து ஜொலித்துக் கொண்டிருக்கும் அந்தக் கம்பியை வளைத்து மாலைபோல் போட்டுக் கொண்டான். அதைப் பிடித்துக் கொண்டு ‘‘அந்தப் பசுக்கள் பால் கறக்காததற்கான காரணம் எதுவும் எனக்கு தெரியாது,’’ என்று சத்தியம் செய்தான். அதைக் கண்ட எல்லோரும் அதிசயித்தனர், அஞ்சினர்.

பண்ணையார் பயந்தே போனார். முத்துக்குமரனை முருகனாகவே எண்ணி வணங்கினார். அன்று மேய்ச்சலுக்குப் போன மாடுகள் எதுவுமே திரும்பவில்லை. முத்துக் குமரனிடம் வந்து வணங்கி மாடுகள் கிடைக்கும் படிச் செய் என வேண்டினார். முத்துக்குமரன் எதுவும் பேசவில்லை. தம்மாடு மேய்க்கும் கோலைக் காற்றில் வீசினார். மாடுகள் திரும்பி விட்டன. அவற்றின் மடி நிறைந்திருந்தது. அப்போது முருகன் தனது சக்திவேல் புற்றில் இருப்பதாகவும், அங்கு செல்லும் பசுக்கள் தாமாகவே பால் பொழிவதாகவும் அருள்வாக்கு வந்தது. குமாரசுவாமியுடன் மக்கள் திரண்டு சென்று மாடுகள் பால் பொழியும் புற்றைக் கண்டு பிடித்து அதைப் பால்விட்டுக் கரைத்து அதிலிருந்து வேலை எடுத்தனர்.

முத்துக் குமாரசாமி அந்த வேலை நட்டு வழிபட்டு வந்தார்.குமாரசாமியை மக்கள் தெய்வமாகவே போற்றினர். அவரும் அவர்களுடைய மனக்கவலையை மாற்றினார். நோயைத் தீர்த்து வைத்தார். வேலை வழிபடுவதே அவரது வேலையாக இருந்தது. அவர் ஒரு நாள், ‘‘இந்த வேலை வழிபட்டு வாருங்கள் உங்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும், ’’ என்றார் ஒருநாள் சமாதியாகி விட்டார். மக்கள் அவரது ஆணைப்படியே அவரது உடலைச் சமாதிப்படுத்தினர். தொடர்ந்து அந்த வேலையும் அவரது கோலையும் வணங்கி வந்தனர். அவரது மாடு மேய்க்கும் கோலையும் மந்திரக் கோலாகவே எண்ணிப் போற்றினர்.காலப்போக்கில், மக்கள் பழைய கதைகளை மறந்துவிட்டனர். சமாதியும், வேலும் கோலும் வழிபாடின்றிப் போய் விட்டன.

குமாரசாமியார் அன்பர் ஒருவர் கனவில் தோன்றி வேலை மீண்டும் பிரதிஷ்டை செய்து வணங்கும்படிக் கூறினார். முத்துக் குமாரசாமியார் கனவில் அறிவுறுத்திய வண்ணம் சக்தி வேலும், மேலும் நான்கு வேல்களையும் நட்டு ஐந்து வேல் கோயிலாக அமைத்தார். இதில் நடுவில் பழைய சக்திவேலும், இருபுறமும் இரண்டிரண்டாக நான்கு வேல்களும் இடம் பெற்றன. முருகனும் அவனது அடியவர் முத்துக் குமாரசாமியாரும் அவ்விடத்தில் இருந்து அன்பர்களுக்கு அருள்புரிந்து வருகின்றனர். பஞ்சவேல் கோயில் வரலாறு அற்புத வரலாறு அன்பர்களுக்குக் கருணைபுரியும் ஆண்டவன் வரலாறு.

தொகுப்பு - பரிமளா

Related Stories: