×

உண்மையான பக்தி

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

இயேசு கிறிஸ்துவின் போதனைகள் புரட்சிகரமானவை மற்றும் விடுதலைக் கருத்தியல் நிலைப்பாடு உடையவை. திருமறையின் பிற பகுதிகளைப் படிக்கும் போது இயேசு கிறிஸ்துவின் கற்பித்தலுடன் தொடர்பு படுத்திப் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். ஓரளவிற்கு இயேசுவின் சிந்தனைகள் திருமறையைப் படிப்பதற்கான, அதிலுள்ள பிற சிந்தனைகளை மதிப்பிடுவதற்கான அளவுகோலாக உள்ளது எனலாம். எடுத்துக்காட்டாக பழைய ஏற்பாட்டு நூல்களில் பல இடங்களில் வன்முறை கடவுளின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இயேசு கிறிஸ்து வன்முறையை ஆதரிக்கவில்லை. தமது கற்பித்தல் மற்றும் வாழ்க்கையின் மூலம் வன்முறைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். வலது கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள் என்றார்.

பகைவர் மீது அன்புகூறவும், நமக்குத் தீங்கிழைத்த வருக்காக மன்றாடவும் அவரை  மன்னிக்கவும் கற்றுத் தந்தார். இன்று கடவுள் பக்தி எனும் பெயரில் மனிதர்கள், வெளிவேடக்காரர்களாக  தங்கள் மனம் போல் உருவாக்கும் மாதிரிகளை ஆயிரக் கணக்கான கிறிஸ்தவர்கள் பின்பற்றுவது கிறிஸ்துவை மறுதலிக்கும் செயல் என்று அவர்கள்  உணர்வதில்லை. இரண்டு காரியங்கள் குறித்து இயேசு கிறிஸ்துவின் கற்பித்தல் எவ்வாறு உள்ளது என்று காண்போம்.

தர்மம் செய்தல்

பிறருக்கு உதவுதல் என்பது மனிதரிடையே இருக்கும் ஒரு நல்ல பழக்கம் ஆகும். பலர் பிறருக்கு உதவுவதை விளம்பரம் செய்வதில்லை. சிலர் பிறருக்கு உதவுவதால் புண்ணியம் கிடைக்கும் என நம்புகின்றனர். வேறு சிலர் விளம்பரத்திற்காகவும், வேறு ஆதாயங்களுக்காகவும் பிறருக்கு உதவுகின்றனர். இயேசு கிறிஸ்து தர்மம் செய்வதைப்பற்றிக் கூறுகையில்  ‘‘நீங்கள் தர்மம் செய்யும்போது உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்” என்றார்.

இறைவேண்டல்

இன்று நிறைய கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதைவிட அவர்கள் சார்ந்துள்ள சகோதரர்களையே முழுவதுமாகப் பின்பற்றுகின்றனர். குறிப்பாக இறைவேண்டலில் இயேசுவின் கற்பித்தலைக் கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளாமல் அவரை மறுதலித்தே தங்கள் பக்தியை வெளிப்படுத்துகின்றனர். இறைவேண்டல் குறித்த இயேசுவின் சிந்தனைகள்,

1) இறைவேண்டலை விளம்பரத்திற்காகச் செய்யாதீர்கள்.
2) இறைவேண்டலை மறைவாகச் செய்யுங்கள். ஏனெனில் இறைவேண்டல் என்பது கடவுளிடம் பேசுவது.
3) இறைவேண்டலில் மிகுதியான சொற்களை அடுக்காதீர்கள். ஏனென்றால் கடவுளை நமது அலங்கார வார்த்தைகளால் மயக்கமுடியாது.
4) மேலும் இறைவேண்டல் எவ்வாறு  இருக்க வேண்டும் என்பதற்காகவே  ‘‘விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே...”எனத் தொடங்கும் இறைவேண்டலை அவர் தமது சீடர்களுக்கும் நமக்கும் கற்றுத் தந்துள்ளார். அதை மீண்டும் மீண்டும் படித்தாலே நமது இறைவேண்டல் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் தெளிவு கிடைக்கும்.

உண்மை பக்தி என்பது விளம்பரம் தேடுவதல்ல. பிரதிபலன் எதிர்பார்ப்பது அல்ல. மாறாகக்  கடவுளில் நம்பிக்கைகொள்வது, அவரிடம் முழுமனதோடு அன்புகூர்வது.  அவருடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பது ஆகும்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?