×

முருகனருள் பெற்ற அடியார்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிவபெருமான், அகத்தியர், அருணகிரி நாதர் மூவரும் முறையே தேவதேவர், முநி சிரேஷ்டர், நர சிரேஷ்டர் என்று முருகனருள் பெற்று போற்றப்படுகின்றனர்.

* பன்னிரண்டு ஆண்டுகள் முருகப்பெருமானை நோக்கி கடுந்தவம் இருந்து நாரதமுனிவர் சப்தரிஷிகளைவிட சிறந்தவராகத் திகழும் வரம் பெற்றார்.

* முருகப்பெருமானின் திருமணத்தை தரிசித்த பெரும் பேறு பெற்றவர் முசுகுந்த சக்ரவர்த்தி. திருவிடைக்கழி திருத்தலத்தில் முருகன் இவருக்கு உபதேசம் செய்தருளினான். அக்கோயிலை எழுப்பிய மாமன்னன் இவர்.

* பழநி முருகன் சிவகிரி மேல் வீற்றிருப்பதைக்கண்டு வெகுண்டு அவருடன் போரிடச் சென்ற இடும்பாசுரன் பின் முருகனின் மகிமை உணர்ந்து அவருக்கே காவல் தெய்வமாக அதே பழநியில் திகழ்கிறான்.

* பழமுதிர்சோலையில் நாவல் பழ மரத்தின் மீது அமர்ந்து ‘சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என குமரக் கடவுள் கேட்டு ஔவையாரை திகைக்க வைத்தான் முருகன்.
* ஆதிசங்கரருக்கு அபிசார பிரயோகத்தால் காசநோய் தாக்கியது. அலைகடல் தாலாட்டும் கரையோரம் கோயில் கொண்டுள்ள செந்திலாண்டவனை அவர் சுப்ரமண்யபுஜங்கம் எனும் துதியால் துதித்து, பன்னீர் இலை விபூதியைத் தரித்த உடனேயே முருகப்பெருமானின் திருவருளால் அவர் நோய் நீங்கியது.

* திருவண்ணாமலையில் சம்பந்தாண்டான் எனும் தேவி உபாசகருக்கும் அருணகிரிநாதருக்கும் நடந்த போட்டியில் அருணகிரிக்காக முருகப்பெருமான் கம்பத்தில் தோன்றியருளினார். அவரே கம்பத்திளையனார் என்று இன்றும் போற்றப்படுகிறார்.

* ராமலிங்கவள்ளலாருக்கு அவர் வீட்டின் கண்ணாடியில் திருத்தணிகை முருகப்பெருமான் தரிசனமளித்து ஆட்கொண்டார். இதை ‘சீர் கொண்ட தெய்வ வதனங்கள்’ எனும் திருவருட்பா பாடல் மூலம் அறியலாம்.

* திருத்தணி முருகன் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதருக்கு திருத்தணியில் கற்கண்டை வாயில் போட்டு ‘நாதாதி குருகுஹோ’ எனும் கீர்த்தனையைப் பாட வைத்தவர்.
 
* பிறந்து ஐந்து ஆண்டுகள் வரை பேச்சு வராமல் இருந்த குமரகுருபரர் திருச்செந்தூர் முருகனை தரிசித்து ஒரு மண்டலம் விரதம் இருந்து, உலகமே புகழும் வண்ணம் கவி பாடும் திறமை பெற்றார்.

* மதுரை மாரியப்ப சுவாமிகள் ‘முருகப் பெருமானைப் பாடாத தம் நாவும் ஒரு நாவா?’ என நினைத்து தன் நாக்கை அறுத்தெறிந்தார். பின் முருகப்பெருமான் அருளால் அந்த நாக்கு வளர்ந்து, அவர் தமிழிசை பாடுவதில் வல்லவரானார்.

Tags : Muruganar ,
× RELATED முருகனருள் பெற்ற அடியார்கள்