×

தூர்வாரியதில் லகரங்களை சுருட்டியவர்கள் சிக்கலில் மாட்டியிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சேலத்துக்காரரின் அறிவிப்பால் மாஜி அமைச்சர் கதிகலங்கிப் போய் கிடக்கிறாராமே.. ஏன்..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தேனிக்காரருடன் இணைந்து செயல்பட 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என்று சேலத்துக்காரர் அதிரடியாக தெரிவித்துள்ளார். இதனால் மனுநீதி சோழன் மாவட்டத்துக்காரரான மாஜி அமைச்சர் கலக்கத்தில் உள்ளாராம். இலைகட்சியில் தனித்தனியே இரு அணிகளாக பிரிந்து கிடக்கும் தேனிக்காரர் மற்றும் சேலத்துக்காரர் ஆகியோர் விரைவில் இணைந்து விடுவார்கள் என மாஜி அமைச்சர் கடும் எதிர்பார்ப்பில் இருந்தாராம். ஆனால், சேலத்துக்காரரின் இந்த அதிரடி அறிவிப்பை இவர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இதுபற்றி ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளிடம் மாஜி அமைச்சர் புலம்பி வருகிறார். சேலத்துக்காரர் அணியில் தான் மாஜி அமைச்சர் இருந்து வருகிறார் என சக மாஜி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் நினைப்பில் இருந்து வருகிறார்களாம். ஆனால் மாஜி அமைச்சர் டபுள் கேம் ஆடி வருவது சேலத்துக்காரருக்கு மட்டும் தெரியுமாம். இதனால் தான் சேலத்துக்காரர் டீம் கண்காணிப்பு வளையத்துக்குள் தற்போது வரை மாஜி அமைச்சர் இருந்து வருகிறார். தேனிக்காரருடன் இணைந்து செயல்பட 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என தேனிக்காரர் இந்த திடீர் அறிவிப்பால் இறுதி முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு மாஜி அமைச்சர் தள்ளப்பட்டுள்ளதாக மனுநீதி சோழன் மாவட்டத்தில் அரசல் புரசலாக பேச்சு ஓடுகிறதாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘காக்கி சேதி ஏதுமிருக்கா..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஏஆர்  காக்கிகள் டபுள் டியூட்டி பார்க்க வேண்டியுள்ளதாக புலம்பல்வெயிலூர்  மாவட்டத்தில் கலெக்டர், எஸ்பி, டிஐஜி அலுவலகங்கள் நீதிபதிகள் குடியிருப்பு  போன்ற முக்கிய இடங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஏஆர் காக்கிகள்  பணியாற்றி வர்றாங்க. இவங்களுக்கு முதல்ல 3 மணி நேரத்துக்கு ஒரு முறை,  சுழற்சி முறையில் கார்டு டியூட்டி இருந்துச்சு. ஆனால் இங்கிருந்த ஏஆர்  காக்கிகள் மாவட்டம் பிரிக்கப்பட்டபோது, மிஸ்டர் பத்தூர், குயின்பேட்டை  மாவட்டங்களுக்கு போய்ட்டாங்க. இதனால, வெயிலூர்ல ஏஆர் காக்கிகள் எண்ணிக்கை  குறைந்து போச்சு. இதனால, வெயிலூர் மாவட்டத்துல பணிபுரியும் ஏஆர்  காக்கிகளுக்கு சிக்கலாக அமைந்துடுச்சாம். மத்திய ஆண்கள் சிறை, பெண்கள்  தனிச்சிறை, ஒருங்கிணைந்த நீதிமன்றம், விஐபிகள் வந்து செல்லும் முக்கிய  இடமாக வெயிலூர் மாநகரம் இருக்குது. இதனால, தினந்தோறும் நூற்றுக்கணக்கான  போலீசார் பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்  இருக்கும் ஏஆர் காக்கிகளுக்கு டபுள் டியூட்டி போடுறாங்களாம். கவர்மெண்ட்  வார லீவு கொடுத்தாலும், அதிகாரிங்க லீவு கொடுக்க மாட்டேங்குறாங்கன்னு  புலம்புறாங்க ஏஆர் காக்கிகள்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கூட்டுறவுத் துறையில் என்ன வில்லங்கம்…’’ என அடுத்த கேள்வியை தொடுத்தார் பீட்டர் மாமா. ‘‘கூட்டுறவு துறையில் 12.3.2001க்கு பின், கூட்டுறவு சங்க நிர்வாக குழு  எந்தவித பணியாளர்களையும் நேரடியாக நியமனம் செய்ய கூடாது என்ற விதிமுறை  அமலில் உள்ளது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில், குமரி மாவட்டத்தில் சில  கூட்டுறவு சங்கங்களில் விதிமுறைகளுக்கு மாறாக பணியாளர்கள் சிலரை முறைகேடாக  நியமனம் செய்துள்ளனர். அந்த வகையில் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு கூட்டுறவு  சங்கத்தில், அதிகாரி  ஒருவரின் மகனை, அந்த கூட்டுறவு சங்கத்தின் ஊழியராக  நியமித்துள்ளனர். இதற்கான பதிவேடுகளையும் மாற்றி உள்ளனர். சம்பள உயர்வு   கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரத்தை மோப்பம் பிடித்தவர்கள்  சமூக வலை தளங்களில் தட்டி விட, விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எப்படி  பணி நியமனம் நடந்தது என்பது தொடர்பாக துறை ரீதியான விசாரணை தொடங்கி  உள்ளதாம். யார், யார் சிக்க போகிறார்கள் என்ற பரபரப்பு, விசாரணையின்  தொடக்கத்திலேயே தொற்றி உள்ளதாம். இது மட்டும் தானா, இன்னும் இருக்கா என்ற  கேள்வியும் எழுந்துள்ளதாக கூட்டுறவு துறையில் பேசிக் கொள்கிறார்கள்’’  என்றார் விக்கியானந்தா. ‘‘தூர் வாருவதில் லகரங்களை நகர்த்தியிருக்காங்களாமே…’’ என கேட்டார் பீட்டர் மாமா.‘‘மெடல் மாவட்டத்தில் கடந்த இலைக்கட்சி ஆட்சி காலத்தில் மாவட்டத்தின்  பல்வேறு கண்மாய்களில் தூர்வாரும் பணிகள் நடந்தன. இப்படி தூர்வாரிய   கண்மாய்களில் பெயரளவிற்கே தூர்வாரும் பணி நடத்தி, பல லட்சம் தொகை  முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. மாவட்டத்தின் பல்வேறு நகரங்கள்,  தாலுகா பகுதிகள் என பெரிதும், சிறிதுமான கண்மாய்கள், குளங்களை சகட்டு  மேனிக்கு தூர்வாரி பெரும் வருவாய் பார்த்தனர். இதிலும் கொடுமையாக சில  கண்மாய்களில் தூர் வாராமலும், தண்ணீர் வெளியேறும் மடைகளை திரும்பக்  கட்டுவதாகக் கூறி, பழைய மடைகள் மீதே சிமென்ட்டில் பூசிப் புதுப்பித்தும்  பெரும் தொகை பார்த்து, கணக்கு காட்டி இருப்பது வெளிச்சத்துக்கு  வந்திருக்கிறது. விவசாயிகள் பெயர்களில் இலைக்கட்சியினர் இந்த தூர்வாரும்  பணியை எடுத்துச் செய்து, முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கின்றனர். மாவட்டத்தின் மந்திரியாக இருந்தவரின் ஆசியிலும் பலரும் சுற்றிச் சுழன்று  காசு பார்த்திருக்கிறார்கள். நீர்வழிப் பாதைகளை ஆக்கிரமித்தும், கண்மாய்,  குளங்களை ஒட்டிய புறம்போக்கு இடங்களை வளைத்துப்போட்டும் என அந்தந்த பகுதி  இலைக்கட்சியினரின் மீறல்களுக்கு பஞ்சமில்லை.  இந்த கடந்த இலைக்கட்சி கால  செயல்பாடுகளால், தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கும் நேரத்தில் தண்ணீர்  தேக்க முடியாத நிலையுடன், வெள்ளப்பாதிப்புகளுக்கும் வழிவகுக்கும் சூழலை  ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, மாவட்ட தலைமை துவங்கி அரசின் உயர்மட்ட  அதிகாரிகள் வரை அனைவருக்கும் விவசாயிகள் கோரிக்கை மனுக்களை குவித்து  வருகின்றனர். கடந்த இலைக்கட்சி காலத்து இந்த முறைகேடு  மீது குழு அமைத்து  தனி விசாரணை நடத்திட வலியுறுத்தி வரும் நிலையில், கடந்த கால முறைகேடுகளில்  ஈடுபட்ட இலைக்கட்சியினர் மீது நடவடிக்கை கோரிய போராட்டங்களையும்  முன்னெடுக்க முடிவெடுத்திருக்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா. …

The post தூர்வாரியதில் லகரங்களை சுருட்டியவர்கள் சிக்கலில் மாட்டியிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Minister ,Maji ,Kathikalangalangi ,Salet ,Peter ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி