×

திருக்குறளில் காதல் சார்ந்த நகைச்சுவைச் சித்திரங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

குறளின் குரல்:

திருக்குறள் நீதிநூல் மட்டுமல்ல, அது ஒரு மிகச் சிறந்த இலக்கியமும் கூட. வெறும் நீதி நூலாக இருந்தால் அது இத்தனை காலம் பெரும் புகழோடு நிலைத்து நின்றிருக்காது. அது இலக்கியம் என்பதாலேயே இன்றளவும் பேசப்படுகிறது. இனியும் அது காலவெள்ளத்தில் கரைந்து போகாமல் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருக்கும்.இலக்கியத்தின் அடிப்படை அம்சம் என்ன? கற்பனைதான் அல்லவா? திருக்குறளில் அழகிய கற்பனைகளுக்குப் பஞ்சமே இல்லை. அதிலும் காதலை இனிக்க இனிக்கப் பேசும் காமத்துப் பாலில் வள்ளுவரின் கற்பனைகள் கொடிகட்டிப் பறக்கின்றன. அந்தக் கற்பனைகளில் நம் முகத்தில் முறுவலைத் தோற்றுவிக்கும் அழகிய நகைச்சுவையும் எட்டிப் பார்க்கிறது.

‘நான் கண்ணுக்கு மை தீட்டமாட்டேன்!’ என்றாள் காதல் வயப்பட்ட தலைவி.  ‘என்னடி இது? மைதீட்டிய விழிகள் அழகாகத்தானே இருக்கும்?’ என்று கூறி அவள் மை தீட்டாத காரணம் என்ன என்று வினவினாள் அவள் தோழி. தலைவி பதில் சொன்னாள்:‘என் காதலர் எப்போதும் என் கண்ணுக்கு உள்ளேயே இருக்கிறார். நான் மை தீட்டிக் கொண்டால் கண்ணில் இருக்கும் அவருக்கு உறுத்தும் அல்லவா? அதனால்தான் இப்போதெல்லாம் நான் மைதீட்டிக் கொள்வதில்லை!’

‘கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.’

(குறள்: 1127)

இன்னொருத்தியின் நிலைமை இன்னும் மோசம். அவள் காதலன் அவள் நெஞ்சுக்குள்ளேயே இருக்கிறானாம். ‘அதனால் நான் எதையும் சூடாகச் சாப்பிடுவதில்லை. அப்படிச் சாப்பிட்டால் காதலருக்குச் சுடும் இல்லையா? அதனால்தான்!’ என்கிறாள் அவள்!

‘நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.’

(குறள்: 1128)

 இன்னொருத்தி மெலிந்த உடம்புக்காரி. அவள் இடையோ இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத அளவுக்கு மெலிந்தது. அப்படியிருப்பவள் எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா? ‘அவள் தலையில் பூவை வைக்கும்போது தயவுசெய்து காம்போடு வைக்காதீர்கள். காம்பைக் களைந்துவிட்டுப் பூவை மட்டும் வையுங்கள். காம்போடு பூவை வைத்தால் காம்பின் கனம் தாங்காமல் இடுப்பு ஒடிந்து அவள் இறந்துவிட்டால் என்ன செய்வது?’ இப்படி ஓர் அங்கலாய்ப்பு காமத்துப் பாலில் வருகிறது!

‘அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
 நல்ல படாஅ பறை.’

(குறள்: 1115)

ஆகாயத்தில் ஒருநாள் பெளர்ணமி இரவு அன்று பெரிய சிக்கலாகிவிட்டது. நிலையாக நின்று கொண்டிருந்த நட்சத்திரங்கள் எல்லாம் நிலைதடுமாறி அங்குமிங்கும் அலையத் தொடங்கின. ஏன் தெரியுமா? வானத்தைப் பார்த்தன நட்சத்திரங்கள். அங்கே ஒரு முழு நிலவு இருந்தது. சற்றுக் குனிந்து பூமியைப் பார்த்தன. தலைவியின் நிலவு முகம் தெரிந்தது. இவற்றில் எது உண்மையான நிலவு? இதுவா அதுவா? விண்மீன்களுக்குத் தடுமாற்றம். அவைகள் அதனால்தான் உண்மை புரியாமல் அங்குமிங்கும் அலையத் தொடங்கின என்கிறார் கவிஞர் வள்ளுவர்!

‘மதியும் மடந்தை முகனும் அறியாப்
பதியிற் கலங்கிய மீன்.’

(குறள்: 1116)

காதல் வயப்பட்ட தலைவன் ஒருவன், தன் கண்ணில் உள்ள கருவிழியைச் சற்று விலகிப் போகச் சொன்னானாம். திகைத்த கருவிழி ஏன் என்று விசாரித்தது. அதற்கு அவன் சொன்ன பதில் என்ன தெரியுமா?

‘நான் பெரிதும் நேசிக்கும் என் தலைவியை என் கண்ணுக்குள் வைத்து கண்ணுக்குக் கண்ணாகப் போற்ற விரும்புகிறேன். நீ கொஞ்சம் விலகினால்தான் அவளுக்கு இடம் கிடைக்கும்!’

‘கருமணியிற் பாவாய்நீ போதாய்யாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.

(குறள்: 1123)

தலைவன் ‘இப்போதுதான் உன்னை நினைத்தேன்!’ என்றான். ‘அப்படியானால் இவ்வளவு நேரம் என்னை மறந்திருந்தீர் களா?’ எனக் கேட்டுத் தலைவி ஊடல் கொண்டாளாம்!

‘உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.’
(குறள்: 1316)

‘இந்தப் பிறவியில் உன்னைப் பிரியமாட்டேன்!’ என்றான் தலைவன். இதைக் கேட்டுத் தலைவி மகிழ்வாள் என்பது அவன் எண்ணம். ஆனால் அவளோ அடுத்த பிறவியில் பிரிவார் போலிருக்கிறது என்றெண்ணி அழத் தொடங்கினாளாம்!

‘இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.’

(குறள்: 1315)

நாம் யாராவது தும்மினால் நம்மை யாரோ நினைத்துக் கொள்கிறார்கள் என்று சொல்லும் இப்போதைய மரபு வள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கிறது. தலைவன் தும்மினான். தலைவி ‘நீர் வாழ்க!’ எனக் கூறி அவன் தலையைத் தட்டினாள். உடனே நாம்தான் இங்கிருக்கிறோமே, அப்படியிருக்க வேறு யார் தலைவனை நினைக்கிறார்கள்? வேறு யாரோ ஒருவர் நினைத்ததால் தானே தலைவனுக்குத் தும்மல் வருகிறது என்ற எண்ணம் அவள் மனத்தில் எழுந்தது. அடுத்த கணம், அவள், அவனை எப்படி தன்னைத் தவிர இன்னொருவர் நினைக்கலாம் என எண்ணியவளாய் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினாளாம்!

‘வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழு
தாள்யாருள்ளித் தும்மினீர் என்று.’

(குறள்: 1317)

இப்படிக் காதல் சார்ந்த பல நகைச் சுவைச் சித்திரங்களை வள்ளுவர் தீட்டிக் காட்டுகிறார். இந்தக் கற்பனைகளை அறிவியல் நோக்கில் அணுகக் கூடாது! இவை ஓர் இலக்கியவாதியின் இனிய கற்பனைகள் எனப் புரிந்துகொண்டு ரசிக்க வேண்டும்.இத்தகைய அழகிய கற்பனைகள் நம் மனத்தை மென்மையாக்குகின்றன. உள்ளம் ஒன்றுபட்ட உயர்ந்த காதலின் உன்னதத்தை இந்தக் கற்பனைகள் உயர்த்திப் பிடிக்கின்றன.

உள்ளம் ஒன்றுபட்ட உயர்ந்த காதலுக்கு உதாரணம் என்றால் அது ராமனும் சீதையும் தானே? ஒரு ராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் அபூர்வமான கற்பனையொன்று வருகிறது. அசோக மரத்தடியில் இருக்கும் சீதை, ராமன் தன்னையே நினைத்துக் கொண்டு கடும் துயரத்தில் ஆழ்ந்திருப்பான் என்பதைச் சரியாகவே ஊகிக்கிறாள்.

எனவே தனக்குக் காவலாக நியமிக்கப்பட்டவளும் அதே நேரம் தனக்கு அந்தரங்கமானவளும் ஆகிய திரிஜடையிடம் ஒரு சிக்கலான பிரச்னை குறித்துக் கேள்வி எழுப்புகிறாள். ‘திரிஜடா! ஸ்ரீராமர் என்னைப் பிரிந்தது முதல் எப்போதும் என்னையே நினைத்துக் கொண்டு துயரத்தில் ஆழ்ந்திருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அவர் எப்படிப்பட்டவர் என்பதை நான் நன்கு அறிவேன்.ஒருவர் என்ன நினைக்கிறாரோ அதுவாகவே ஆகிறார் என்று சொல்வதுண்டு. அப்படியானால் என்னையே நினைத்துக் கொண்டிருக்கும் ராமர் கொஞ்ச காலத்தில் சீதையாக மாறிவிடுவாரே? சிறிதுகாலம் கழித்து உலகில் ராமரே இல்லாமல் இரண்டு சீதைகள் அல்லவா இருப்பார்கள்? என்ன செய்வது அப்போது?’ சீதையின் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கலகலவென்று சிரிக்கிறாள் திரிஜடை.

‘அப்போதும் உலகில் ஒரு சீதையும் ஒரு ராமரும் தான் இருப்பார்கள் அம்மா!’ என்கிறாள் அவள். எப்படி என்று கேட்ட சீதையிடம், திரிஜடை விளக்குகிறாள்.
‘அம்மா! உங்களையே நினைத்துக் கொண்டிருக்கும் அவர் சீதையாகும்போது, அவரையே நினைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் ராமராகி விடுவீர்களே!’
 இது மனமொன்றி வாழ்ந்த தெய்வீகத் தம்பதி பற்றிய ஓர் அபூர்வ ராமாயணச் சித்தரிப்பு. ராமாயணத்தில் முறை தவறிய ஒருதலைக் காதல் பற்றிய சித்தரிப்பும் வருகிறது. அதில் ஒன்று சீதைமேல் ராவணன் கொண்ட காதல். இன்னொன்று ராமன்மேல் சூர்ப்பணகை கொண்ட காதல்.

ராவணன் சீதைமேல் கொண்ட காதலை ஒருதலைக் காதல் என்று சொல்வதா அல்லது பத்துத் தலைக் காதல் என்று சொல்வதா! காமம் அவனை அலைக்கழிக்கிறது. சூர்ப்பணகை சீதையின் பேரழகைப் பற்றிச் சொன்னதிலிருந்து காணுமிடமெல்லாம் சீதை பற்றிய கற்பனைத் தோற்றமே அவன் கண்ணில் தென்படுகிறது.‘மைதீட்டிய கண்ணோடு மயிலைப் போல் இதோ என் கண்முன்னால் தென்படும் இந்தத் தோற்றம் தானே நீ சொன்ன சீதை?’ எனத் தன் தங்கையிடம் வினவுகிறான் ராவணன்.

ஆனால், சூர்ப்பணகைக்கோ காணுமிடமெல்லாம் ராமனின் தோற்றமே தென்படுகிறது. ‘ஆமாம். ஆமாம். செந்தாமரைக் கண்ணோடும் செங்கனி வாயோடும் தடம் தோளோடும் தடக் கைகளோடும் கருநிறக் குன்றம் போல இதோ தென்படுகிறானே, நான் சொன்ன அந்த ராமன் இதோ இவனேதான்!’ என்கிறாள் அவள். காமப் பித்துப் பிடித்த அண்ணனையும் அந்த அண்ணனுக்கேற்ற தங்கையையும் நகைச்சுவை நயத்தோடு சித்தரிக்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்:

‘பொய் நின்ற நெஞ்சில் கொடியாள் புகுந்தாளை நோக்கி,
நெய் நின்ற கூர் வாளவன், ‘நேர் உறநோக்கு நங்காய்!
மை நின்ற வாள் கண் மயில் நின்று என வந்து என் முன்னர்
இந்நின்றவள் ஆம்கொல் இயம்பிய சீதை?’ என்றான்.
‘செந்தாமரைக் கண்ணொடும் செங்கனி வாயினோடும்
 சந்தார் தடம் தோளொடும் தாழ் தடக்கைகளோடும்
 அம் தார் அகலம் அத்து ஒடும் அஞ்சனக் குன்றம் என்ன
 வந்தான் இவன், ஆகும் அவ் வல் வில் இராமன்!’ என்றாள்!’


வில்லொடித்து ராமன் வெற்றி வீரனாய் நின்றபோது அவன் தோளில் மணமாலையைச் சூட்டிவிட்டுக் குனிந்து நின்றாளாம் சீதை. அப்போது அவள் தோழி நீலமாலை, ‘நீ உப்பரிகையில் நின்று கூந்தல் உலர்த்தும் வேளையில் ஒருவனை வீதியில் பார்த்து மனத்தைப் பறிகொடுத்தாயே? அவன்தானா இவன் என்று தெரிய வேண்டாமா? வெட்கத்தை விட்டு நிமிர்ந்து அவனைப் பார்!’ என்றாள். ஆனாலும் சீதை ராமனை நிமிர்ந்து பார்க்கவே இல்லையாம்.

‘சீதம்மா! உன் தந்தை ஜனகர் உனக்கு அணிவித்திருந்த அட்டிகையில் உள்ள பதக்கத்தில் தெரிந்த ஸ்ரீராமரின் பிரதிபிம்பத்தைத் தானே நீ ரகசியமாகப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாய்?’ என ஒரு கீர்த்தனையில் கேட்கிறார் தியாகராஜர்!காதல் வயப்பட்டால் பெண்களுக்கு வெட்கம் வந்துதூவிடுகிறது. கன்னம் சிவக்க வெட்கத்தோடு நிற்கும்போது அவர்கள் இன்னும் அழகாகி விடுகிறார்கள்.

திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய குற்றாலக் குறவஞ்சியில் அப்படித்தான் குற்றால நாதரைக் காதலிக்கும் தலைவி வெட்கப் படுகிறாள். குறி சொல்கிற குறத்தி, விரைவில் அவளைச் சந்திக்கக் குற்றால நாதர் வருவார் என்று குறிசொல்கிறாள்.தன் தலைவன் தன்னைத் தேடி வரப்போகிறான் என்ற எண்ணத்தில் தலைவியின் கன்னங்கள் நாணத்தால் சிவக்கின்றன. அந்த நாணச் சிவப்பை ரசிக்கும் குறத்தி கேட்கும் கேள்வி நம்மை முறுவலில் ஆழ்த்துகிறது.

‘அதுசரி. தலைவனை நீ நேரில் சந்திக்கும் போது இந்த வெட்கம் உதவாதே? அப்போது என்ன செய்வாய்? உன் வெட்கத்தை எடுத்துக் கக்கத்தில் வைத்துக் கொள்வாயா?’ எனக் கேட்கிறாள் அவள்!‘கைந்நொடியில் பொன்னிதழி மாலை வரும்காண் - அப்போ கக்கத்தில் இடுக்குவையோ வெக்கத்தை அம்மே?’

இலக்கணம் பிசகாத மரபுக் கவிதையில் வட்டாரப் பேச்சு வழக்கைப் புகுத்தி அப்போது என்பதை அப்போ என்றும் கட்கம் என்பதைக் கக்கம் என்றும் எழுதி நம்மை வியக்கவைக்கிறார் திரிகூட ராசப்பக் கவிராயர்.

‘அன்னை இல்லம்’ திரைப்படத்தில், கே.வி. மகாதேவன் இசையில் டி.எம். செளந்தரராஜன் குரலில் ஒலிக்கும் கண்ணதாசனின் திரைப்பாடல் ஒன்று, பெண்ணின் இடை இல்லாததைப் போல் இருப்பதாகக் கூறுகிறது!

‘நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது!’


பிரிவுத் துயரால் இடை மெலிவதைப் பற்றிப் பல கற்பனைகள் இலக்கிய உலகில் உண்டு. அதில் ஒரு கற்பனை இது. தன் தலைவனைப் பிரிந்து மிகவும் மெலிந்துவிட்ட தலைவியிடம் தோழி கேட்டாளாம்:‘என்னடி இது? உன்னவரைப் பிரிந்த வருத்தத்தில் இப்படி மெலிந்துவிட்டாய்? போகிற போக்கைப் பார்த்தால் உன் விரல் மோதிரமே உன் இடுப்பு ஒட்டியாணமாகப் பயன்படும் போலிருக்கிறதே?!’

காதல் பேச்சுக்கள் அளவற்ற மகிழ்ச்சியில் பிறப்பவை. எனவே, அவற்றில் நகைச்சுவை இருப்பது இயல்புதான். நீதிநூலை இலக்கியமாக எழுதிய திருவள்ளுவரும் தம் காதல் தொடர்பான குறட்பாக்களில் நகைச்சுவையைக் கலந்து நம் முகத்தில் முறுவலைப் பூக்க வைப்பதில் வியப்பென்ன இருக்கிறது?

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

Tags : Thirukkural ,
× RELATED திருக்குறளில் கோல்!